அழகான சட்டம்!

காக்கி போலீஸ் உடையில் மிடுக்காக நிற்கும் பெண்களை பார்க்கும்போது நம்மையறியாமலே ஒரு மரியாதை அவர்கள் மேல் ஏற்படும். அதே பெண் அழகி பட்டத்திற்கான கிரீடத்தை தலையில் சுமந்து நிற்கும்போது ஆச்சரியப் படாமல் இருக்க முடியாது. மரியாதை, ஆச்சரியம்... இரண்டையுமே தன்வசப் படுத்திக் கொண்டுள்ளார் பூனாவை சேர்ந்த இன்ஸ்பெக்டர் பிரேமா விக்னேஷ் படில்.

‘‘நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். ‘தேஜெஸ்வினி’ திரைப்படம் டி.வியில் ஒளிப்பரப்பானது. அதில் தேஜெஸ்வினி என்ற கதாபாத்திரம் பெண் போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருப்பார். அந்தப் படத்தை பார்த்த பிறகு நானும் ஒரு ேபாலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று என் மனதில் உறுதி எடுத்துக் கொண்டேன். நான் நல்லா படிப்பேன். பள்ளி, கல்லூரி, இரண்டிலும் நான்தான் கிளாஸ் டாப்பர். ஆனால் நான் சிவில் சர்வீஸ் படிக்க நினைத்தபோது, நான் முதலில் முடிவு செய்த விஷயம், இதற்கான செலவினை நானே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

அப்பா மின்சார வாரியத்தில் சாதாரண ஊழியர். அம்மா இல்லத்தரசி. எனக்கு பின் என் தம்பி, தங்கைகளை அப்பாவின் ஒரு சம்பாத்தியத்தில் தான் படிக்க வைக்கணும். நான்தான் மூத்த பெண் என்பதால், நானும் கொஞ்சம் பொறுப்பாக நடந்துகொள்ளணும் தானே’’ என்றவர் டியூஷன் எடுத்து அந்த வருமானத்தில் சிவிஸ் சர்வீஸ் தேர்வு எழுதியுள்ளார். ‘‘போலீஸ் துறையில் சேர்வதுன்னு முடிவு செய்தாயிற்று. அதனால் வெறித்தனமாக படிச்சேன். முதல் முயற்சியிலேயே தேர்வானேன். பூனேவில் போஸ்டிங் கிடைச்சது’’ என்று கூறும் பிரேமா அழகுப்போட்டியில் பங்கு பெற்ற தருணத்தை பற்றி பகிர்ந்தார்.

‘‘2019ம் ஆண்டு சமூகவலைத்தளத்தில் திருமதி இந்தியா அழகுப்போட்டி குறித்து விளம்பரம் வந்தது. எனக்கு பல துறை சார்ந்த விஷயங்களை கற்றுக்கொள்ள பிடிக்கும். அதனால் இந்த துறையும் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்ன்னு தான் அந்த போட்டியில் பங்குபெற்றேன். அழகுப் பதுமையாக மேடையில் நடப்பதை விட போலீஸ் அதிகாரியாக பரேடில் நடப்பது எளிதாக இருந்தது. ஆனால் பிடிச்சு இருந்தது.

போட்டியில் வெற்றியும் பெற்றேன். சங்கிலி மாவட்டம் புண்டி என்ற சின்ன கிராமத்தில்தான் பிறந்து வளர்ந்தேன். என் கிராமத்திலிருந்து போலீஸ் அதிகாரியாக ஆன முதல் நபர் நான் என்பதால், மக்கள் என்மீது அளவுக்கடந்த மரியாதை மற்றும் பாசம் வச்சிருக்காங்க. நான் அழகுப் போட்டியில் ஜெயிச்சாலும், என் வேலையில் பல வெற்றிகளை கண்டாலும், இவர்கள் காட்டும் அன்புக்கு அது ஈடாகாது.

வேலை காரணமாக பல துறை மற்றும் மனநிலையில் உள்ள மக்களை சந்தித்திருக்கேன். ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக கழியும். குறிப்பாக குடும்பத்தை விட்டு தொலைந்து சென்றவர்களை கண்டுபிடித்து அவர்களை குடும்பத்துடன் இணைக்கும் அந்த தருணம்.... ரொம்பவே நெகிழ்ச்சியா இருக்கும்’’ என்கிறார் பிரேமா படில்.

Related Stories: