ஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது

அழகுப் பெட்டகம் 7

கூந்தலின் வளர்ச்சி, பாதுகாப்பு, பராமரிப்பு, பாதிப்பு எனத் தொடர்ந்து அழகுக் கலை நிபுணர் ஹேமலதா வாசகர்களுடன் பேசி வருகிறார். இந்த வாரம் கூந்தலில் வரும் ஒட்டுண்ணி வகையான பேன் குறித்தும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிகம் வரும் காரணம் குறித்தும் விளக்கியுள்ளார். பேன் ஒருவர் முடியில் இருந்து மற்றொருவர் முடிக்கு பரவும் உயிரினம். குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பேன்கள் வரும் எனச் சொல்லவும் முடியாது. எல்லோர் தலையிலும் பேன் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது.

பேன்களைப் பொறுத்தவரை அதன் வாழ்விடத்தில் அது ராஜா. ஒரு பேன் ஒரு நிமிடத்தில் தலைக்குள் 9 இன்ஞ் அளவுக்கு அதிவிரைவாய் நகரும் தன்மை கொண்டது. முடிக்குள் பேன் இருப்பது தெரியாத அளவுக்கு விரைவாகவும் இனப்பெருக்கமும் செய்து பரவும் உயிரினம். ஒரு  பேன் ஒரு மாதத்தில் முந்நூறு குஞ்சுகளை உற்பத்தி செய்துவிடுகிறது. தலை முடிகளுக்கு இடையில், பேனின் ஆயுட் காலம் 1 மாத காலம் ஆகும்.

உடலில் உள்ள ரத்தத்தையும், தலையினை சொறியும்போது கசியும் நீரையும் உணவாக உறிஞ்சி வாழும் பேன்களும் அதன் முட்டை வடிவமான ஈர்களும், நாம் அறியாமலே நம் உடம்பில் இருக்கும் சத்து மற்றும் ரத்தத்தை உறிஞ்சிவிடுகிறது. பேன் தொல்லை அதிகமாக இருப்பவர்களுக்கு ஸ்கால்ஃபில் உள்ள செதில்கள் உரிந்து, அதன் வழியாகப் புண், பொடுகு, அரிப்பு, கண் சிவந்தல் போன்ற ஒவ்வாமைகள் ஏற்படும்.

பேனின் முட்டை வடிவம் இரண்டு வாரங்களுக்கு தலைமுடிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும். இரண்டு வாரத்திற்கு பின் அது சிறு பேன்களாக உருமாற்றம் பெறும். பேன்கள் அதன் கால்கள் வழியே தலை முடிகளையும், அணிந்திருக்கும் நமது உடைகளையும் இறுகப் பற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. அதன் வாயில் உள்ள உறிஞ்சு குழல் முனையில் சிறு கொக்கி போன்ற அமைப்பு இருக்கும். அதன் வழியே உறிஞ்சவே வசதியாய் நம் தோலுடன் ஒட்டிக்கொள்கிறது.

பேன் வருவதற்கான காரணங்கள்

முக்கியமாய் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள். இவர்களுக்கு தங்கள் முடியினை பராமரிக்கத் தெரியாது. அவர்கள் படிக்கும் பள்ளி மற்றும் பொது வெளிகளில் நெருங்கி அமர்ந்தே படிக்கவும், விளையாடவும் செய்வார்கள். குழுவாகவே இவர்கள் இருக்கும் காரணத்தால், பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பேன் தொல்லை அதிகமாகவே இருக்கும்.

முடி வளர்ச்சி அதிகமாக உள்ளவர்களுக்கும், கூந்தலை சுத்தமாக பராமரிக்காதவர்களுக்கும் பேன் அதிகம் வரும் வாய்ப்புகள் உள்ளது. தலைமுடிகளில் ஈரம், பிசுபிசுப்பு, அழுக்கு போன்றவை சேர்ந்தால் கட்டாயமாக பேன் பரவும். நமது முடிகளில் அழுக்கு சேரச்சேர அந்த இடம் பேன்கள் வசிக்க ஏற்ற இடமாய் மிகவும் வசதியாய் பேன்களுக்கு அமைந்துவிடுகிறது.

மேலும் ஒருவர் பயன்படுத்திய டவல், சீப்பு, ஹேர் பிரஷ் போன்றவற்றை எடுத்துப் பயன்படுத்தினாலும் அதன் வழியே பேன் ஒட்டிக்கொண்டு நமது முடிகளுக்குள் நுழைந்து விரைவாகப் பரவத் தொடங்குகிறது. ஒரே தலையணையில் அருகருகே தலை வைத்துப் படுப்பது, தலைகளை ஒட்டி வைத்து அருகருகே நெருங்கி அமருதல், ஒருவரின் ஹெட்போனை மற்றொருவர் பயன்படுத்துதல், ஒருவர் உடையினை மற்றொருவர் பயன்படுத்துதல், ஹேர் பேண்ட், ஹேர் க்ளிப். தலைப்பாகை, தொப்பி இவற்றின் வழியாகவும் பேன்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பேன் தொல்லை அதிகமானால் சரிசெய்யும் முறை

வயிற்றில் பூச்சியினால் பாதிப்பு வந்தால் நாம் மருந்து எடுத்துக்கொள்கிறோம். அதுபோல, உடலுக்கு வெளியே தலைகளில் ஒட்டுண்ணி வகை பேன்களால் முடிகளுக்கு பாதிப்பு வந்தால், அதற்கான முறையான மருத்துவத்தை எடுத்து பிரச்சனையை சரி செய்யலாம். இரண்டு வழிகளில் பேன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். பேன் தொல்லை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாக  இருந்தால் மருத்துவரை அணுகுவது. மற்றொன்று நாமாகவே இயற்கை முறையில் வீட்டில் மருத்துவம் செய்வது.

* பேன் தொல்லை அதிகமாய் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு permethrin lotion எனும் ஆயின்மென்டையும், இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தையாக இருந்தால் Phrethrins lotion எனும் ஆயின்மென்டையும் மருத்துவரின் ஆலோசனையில் மருந்துக்கடையில் வாங்கி  ஈரமுடியில் தடவி 10 நிமிடம் கழித்து அலசி சுத்தம் செய்ய வேண்டும்.

* ஆலிவ் ஆயிலை முடிகளில் படுமாறு தடவி, காற்றுபுகா வண்ணம் பாத் கேப் கொண்டு(bath cap) கவர் செய்தால், முடியை விடாமல் இறுகப் பற்றி, ஒட்டியிருக்கும் முட்டைகளின் பிடிமானத்தை ஆலிவ் ஆயில் தளர்த்தி வெளியே கொண்டு வரும்.

* எலுமிச்சைச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் சம அளவில் எடுத்து, பஞ்சில் நனைத்து ஸ்கால்ப்பில் படுமாறு தடவி பாத் கேப்பில் கவர் செய்துவிட்டால், அதன் வாடை தாங்காமல், முடியினை அலசும்போது பேன்கள் தானாகவே வெளியேறும்.

* துளசி இலைப் பொடி, மருதாணி பூவின் பொடி, வசம்பு பொடி, வேப்பம்பூ பொடி, வேப்பங் கொட்டைப் பொடி, சீத்தாபழக் கொட்டை பொடி இவற்றில் ஏதாவது ஒன்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து முடிகளில் தடவி வெளியேற்றலாம்.

* அதேபோல் வெள்ளை மிளகுடன் பால், காட்டு சீரகத்துடன் பால் இவற்றில் எளிதாய் கிடைக்கும் ஒன்றைத் தலையில் தடவி பாத் கேப் பயன்படுத்தி கவர் செய்து, ஒரு மணி நேரத்தில் அலசி சுத்தம் செய்து பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

* லிஸ்டரின் மவுத் வாஷ் கொஞ்சமாக எடுத்து தலையில் தடவி ஒரு மணி நேரத்தில், ஆப்பிள் சிடர் வினிகரை போட்டு முடியினை அலசினாலும் பேன் தொல்லை குறையும்.

* ஹேர் டிரையரின் வெப்பத்திலும் பேன்கள் குறைய வாய்ப்பு உண்டு.

பேன்களே வராமல் தடுப்பது எப்படி?

* கூந்தல் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் மட்டும் போதாது, சுத்தமாகவும் இருக்க வேண்டும்.

* பேன் தொல்லை அதிகம் இருப்பவர்கள், மேலே குறிப்பிட்ட இயற்கை முறைகளில் ஏதாவது ஒன்றினை அடிக்கடியும், குறைவாக இருப்பவர்கள் மாதம் இருமுறையும் எடுப்பது நல்லது.

* முடியினை அடிக்கடி பேன் சீப்பு கொண்டு சீவி சுத்தம் செய்தல் வேண்டும்.

அடுத்த வாரத்திற்கான கேள்விகள்…

* சருமத்தில் ஏற்படும் அடிப்படை பிரச்சனைகள்?

* தோல் சுருங்குவது எதனால்?

* தோலில் ஏற்படும் வறண்ட தன்மை மற்றும் எண்ணெய்த் தன்மைக்கான காரணங்கள்?

உலகில் உள்ள மக்கள் தொகையில் 80 சதவிகிதத்தினருக்கு பேன் பிரச்சனை இருப்பதாகவும், இது உலகளாவிய பிரச்சனையாகவும் ஆய்வில் தெரிய வருகிறது. எல்லா நாட்டினருக்கும் பேன் பிரச்சனைகள் உள்ளது. பேன்களில் எண்ணற்ற வகைகளும் இருக்கிறது.

Related Stories: