சரிபாதி பெண்களின் ஆட்சி..!

“ஐந்து ஆண்டு ஆட்சியில் ஆண் இரண்டரை ஆண்டுகளும், பெண் இரண்டரை ஆண்டுகளும் சமமாக ஏன் நாட்டை ஆளக்கூடாது?” என்று சமீபத்தில் துணை முதல்வர் கூறிய கருத்து இன்றைய நிலையில் என்னவாக இருக்கிறது? இந்த சமத்துவம் வீட்டில் இருக்கிறதா? என்ற கேள்விக்கு, பதில் ‘சுயபரிசோதனை’ தான். அவ்வாறு வீட்டிலிருக்கக் கூடிய பெண்களுக்கு சம வாய்ப்புகள் கொடுக்கும் போது, வெளியில் வந்து ‘கொடுத்திருக்கிறோம்’ என்கிற பிரச்சாரத்திற்குத்தான் கொண்டுசெல்கிறது. பெண்களுக்கான வாய்ப்புகள் என்பதை இன்றும் சாதனையாகவே எடுத்துக்கூறுவதும் அவலம்தான்.

எல்லா வேலைகளும் எல்லோரும் செய்யலாம் என்கிற நிலை உருவாகியிருக்கும் போதிலும், எல்லோருமே சமம் என்று பேசக் கூடியவர்கள் கூட, அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ‘பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம்’ என்கிற சொல்லாடல் எதற்கு? எல்லோருக்கும் அந்தரங்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ஒரு பெண் பொது வெளிக்கு வரும் போது மட்டும் அதன் தாக்குதல் பல மடங்கு இருக்கிறது. ஆண்கள் தவறு செய்யும் போது பாலியல் ரீதியாக யாரும் பேசுவதில்லை!  இதையெல்லாம் கடந்து சாதித்துக் கொண்டிருப்பவர்கள், சாதிக்க போகிறவர்கள்… இருக்கத்தான் செய்கிறார்கள்.  

அவ்வாறாக நமது நாடாளுமன்றத்துக்கும், சட்ட மன்றங்களுக்கும் அடிப்படையான அரசியல் சாசனத்தை உருவாக்கியதில் 15 பெண்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். பொதுவாழ்வுப் பங்கேற்புதான் அவர்களின் சாதனைக்கான அடிப்படைக் காரணமாக அமைந்தது. அனைத்துப் பெண்களுக்கும் சுதந்திர இந்தியாவில் வாக்குரிமை உருவாகுவதற்கு முன்பாகவே, சொத்துள்ள பெண்களுக்கு வாக்குரிமை முதலாவதாக 1921ல் வழங்கியது மதராஸ் மாகாணம். அந்த வரலாற்றுக்கு நூறாண்டு ஆன போதிலும், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கான  இட ஒதுக்கீடு இன்னும் சமமாக அறிவிக்கப்படவில்லை.

உலக அளவில் நாடாளுமன்றங்களில் பெண்களின் பங்கேற்பு குறித்து ‘இண்டர் பார்லிமெண்டரி யூனியன்’ நடத்திய ஆய்வின்படி 1995-ல் 11.3% இருந்த பெண்களின் எண்ணிக்கை 2020-ல் 24.9% உயர்ந்திருக்கிறது.

பொலிவியா, ஸ்வீடன், பின்லாந்து, தைவான், ஸ்பெயின், போர்ச்சுக்கல், நியூசிலாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் நாடாளுமன்றங்களில் பெண்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் இடம்பிடித்திருக்கிறார்கள். உலகின் 15 நாடுகளுக்கு தற்போது பெண்கள் தலைமை பொறுப்பு வகிக்கின்றனர். அவர்களில் எட்டு பேர் தங்கள் நாட்டின் முதல் பெண் தலைவர்கள் ஆவார்கள் என்று பியூ ரிசர்ச் சென்டர் என்னும் அமைப்பின் ஆய்வு கூறுகிறது. எனினும், ஐ.நா அவையில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில் 10% நாடுகளுக்குக் கூட பெண்கள் தலைமைப் பொறுப்பில் இல்லை.

அதேவேளையில் வளர்ந்து வரும் நாடுகளில் பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியவற்றைப் பொறுத்தவரை, உலகில் 193 நாடுகளில் இந்தியா 143-ஆவது இடத்தில்தான் இருக்கிறது. இதிலிருந்தே பெண்களுக்கான இட ஒதுக்கீடு எத்தனை அத்தியாவசியமானது என்பதை உணரலாம்.

அரசியலில் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை பெண்கள் மிகத் தெளிவாகவும் பொறுப்புடனும் கையாள்கிறார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பெண்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு இந்த நம்பிக்கையை நமக்கு ஏற்படுத்துகிறது. இந்தியா முழுவதும் ஏறத்தாழ

13 லட்சம் பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் இருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை தற்போதுள்ள கிராமப் பஞ்சாயத்துகள், நகர சபைகள், மாநகர மன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டைக் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற நிலை 1996-ல் உருவானது. அதற்கேற்ற வகையில் அரசியல் சாசனம் திருத்தப்பட்டது. தலித் பெண்களுக்கும் பழங்குடிப் பெண்களுக்கும் ஒதுக்கீடு தரப்பட்டது. அதனால், கணிசமான பெண்கள் தேர்தலில் வெற்றிபெற்று அரசியல் அதிகாரத்தில் பங்கேற்றனர். அரசியல் கட்சி பலம், பண பலம், சாதிய பின்புலம் எதுவும் இல்லாத பெண்கள்கூட பஞ்சாயத்துத் தலைவிகள், நகர மன்றத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆனார்கள்.

பஞ்சாயத்துத் தேர்தல்கள் மூலம் உருவாகி வருகிற பெண்களின் பங்கேற்பு மூலம் இந்தியச் சமூகத்தில் பெரும் ஜனநாயக அலை அடித்தாலும், உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதன் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான ஆய்வுகள் எவையும் நடத்தப்படவில்லை. பெண்கள் உள்ளாட்சித் தலைவர்களாகப் பணியாற்றுகிற பகுதிகளில் கல்வியிலும், சுகாதாரத்திலும் சமூகம் முன்னேறியிருக்கிறது

என்கிறது ஆய்வு.  2012-ல் நடத்தப்பட்ட ஆய்வில், கிராமப்புறங்களில் பெண் தலைவராக உள்ள பெண்களிடையே அதிகமான இலட்சியங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பெரும்பாலான பெற்றோர்கள், பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கென்றே உயர்ந்த கனவுகளைக் கொண்டிருந்தனர்.

ஆனால், பெண் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில், ஆண் மற்றும் பெண்குழந்தைகளின் எதிர்காலம் மீது பெற்றோர் கொண்டிருக்கும் ‘கனவுகளின் இடைவெளி’, பெண்கள் தேர்வு செய்யப்படாத கிராமங்களைவிட 25% குறைவாக இருந்தது. பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட மற்றும் தேர்வு செய்யப்படாத கிராமங்களைச் சேர்ந்த வளர் இளம் பருவத்தினரிடையே இந்த இடைவெளி 32% ஆக இருந்தது. பெண்கள் தலைவராக உள்ள கிராமங்களில் ஆண் குழந்தைகளின் எதிர்பார்ப்புகள் குறையவில்லை என்றாலும், பெண் குழந்தைகளுக்கான எதிர்காலம் பற்றிய கனவுகள் அதிகரித்து இருந்தது.

 

பெண்களுக்கு உள்ளாட்சி மன்றங்களில் 50% இட ஒதுக்கீட்டை 2006-ல் பீகார் மாநிலம் முதலில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட பல மாநிலங்களும் அறிவித்தது போல் தமிழகமும் அறிவித்தது. பெண்கள் அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்குக் கல்வியும், அரசியல் கல்வியும் மிக முக்கியமானவை. பெண்களுடைய அரசியல் கல்வி என்பது பெண் சம்பந்தமானது மட்டுமல்லாமல், சுற்றியுள்ள சமூகம் முழுமைக்கும் தொடர்புடையதாக இருக்கிறது. நாளுக்கு நாள் பெருகிவரும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த பெண்களின் குரல் ஆட்சி அதிகாரத்தில் ஓங்கி ஒலிக்க, சரிபாதி பெண்களின் ஆட்சி எப்போது வரும்?

Related Stories: