என்ன செய்வது தோழி? வாழ்க்கை இவரோடு முடியவில்லை

நன்றி குங்குமம் தோழி

அன்புடன் தோழிக்கு,

கை நிறைய காசு இருந்தால் போதுமா? மனசு நிறைய நிம்மதி இருக்க வேண்டாமா? என்று கேட்பார்கள். என் வாழ்க்கையில் இவை திரும்ப திரும்ப கேட்கும் கேள்விகளாகி விட்டன. கை நிறைய காசுடன் தான் வாழ்க்கை தொடங்கியது. ஊரில் வசதியான குடும்பம் எங்களுடையது. கூட்டுக் குடும்பம். வசதி மட்டுமல்ல கல்வியிலும் குறைவு கிடையாது. பொறியியல் படிக்கும் போதே எனக்கு கைநிறைய சம்பளத்துடன் மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. படித்து முடித்து விட்டு அந்த வேலையில் இணைந்தேன்.

அப்போதுதான் முதல்முறையாக தனியாக, அதுவும் பெருநகரம் ஒன்றில் வசிக்கும் சூழல் ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி எல்லாம் எங்கள் ஊருக்கு பக்கத்திலேயே இருந்ததால் தினமும் சென்று வர முடிந்தது. தங்கியிருந்த விடுதியில், வேலையில் இருந்த தோழிகள் மூலம் தனிமை பெரிதாக தெரியவில்லை. தொடர் விடுமுறையில் ஊருக்கு சென்று வருவேன். அப்படி ஒருமுறை சென்ற போதுதான் ‘மாப்பிள்ளை’ பார்த்திருப்பதாக சொன்னார்கள். எங்கள் வீட்டில் காதல் திருமணம் அரிது என்பதால், எனக்கு மறுப்பேதும் இல்லை. ஆனால் இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து பார்க்கலாமே என்று நினைத்தேன்.

அதை சொன்ன போது அப்பவோ, ‘தாத்தா, பாட்டி இருக்கும் போதே  செய்யலாமே’ என்று அவர் விருப்பத்தை சொன்னார். அதனால் 4 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றம் சூழ திருமணம் நடந்தது. அவரும் பெரிய நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளர்தான். நான் இருக்கும் பெருநகரிலேயே வேலை. அதனால் விடுதி வாழ்க்கையில் இருந்து தனிக்குடித்தனம் போனோம். அவர் தோற்றத்தில் மட்டுமல்ல குணத்திலும் என்னை ஈர்த்தார். என்னிடம் எப்போதும் அன்பாகவும், இணக்கமாகவும் நடந்து கொள்வார். அவரும் வசதியான குடும்பம்தான். ஆனால் அது குறித்து எந்த பெருமிதமும் அவருக்கு இருந்ததில்லை.

‘நமக்கு வயது இருக்கிறது. அதனால் உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம்’ என்று சொன்னார். என் விருப்பமும் அதுவாக இருந்ததால், மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்க்கையும் அப்படிதான் சென்றது.விடுமுறை என்றாலே எங்காவது சுற்றுலா செல்வது என்று நாட்கள் உற்சாகமாகவே கழிந்தன. வேலை நிமித்தமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து மாநிலத்திற்கு இடமாற்றமானது. உடனடியாக வேலையில் சேர வேண்டும் என்பதால், அவர் மட்டும் அங்கு சென்றார்.

நானும் அந்த ஊருக்கு இடமாற்றல் கேட்டேன். எங்கள் நிறுவனத்தில் கிடைக்கவில்லை. ‘வேலையை விட்டுவிடவா’ என்று கேட்டதற்கு, அவரோ ‘வேண்டாம்... கொஞ்ச நாள்தானே’ என்றார். அதனால் நாங்கள் ஆளுக்கு ஒரு ஊரில் குடித்தனம் செய்தோம். விடுமுறை நாளில் அவர் இங்கு வந்து செல்வார். நானும் அங்கு போய் வருவேன். இப்படி தனித்தனியாக இருப்பது சிரமமாக இருந்ததால் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.

அதற்கேற்ப கொரோனா பிரச்னை பெரிதாக, வீட்டிலிருந்து வேலை செய்யும் சூழல் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் அவரது ஊருக்கு சென்று அங்கிருந்து வேலை செய்ய ஆரம்பித்தோம். அவரது உறவினர்கள் எல்லோரும் அங்கு வந்து விட்டதால் வேலை நேரம் போக மிச்ச நேரமெல்லாம் குதூகலமாக இருக்கும். முக்கியமாக கணவர் உடனான அன்பும், நெருக்கமும் அதிகரித்ததுஇந்நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு அவர் அலுவலகத்தில் இருந்து வரச் சொன்னதாக கூறினார். விமானங்களும் இயக்கப்பட்டதால், ஈ பாஸ் வாங்கிக் கொண்டு போனார்.

அவர் ஊருக்கு போன சில வாரங்களில் நான் கருவுற்று இருப்பதை தெரிந்து கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அவரிடம்தான் சொல்ல வேண்டும், அதுவும் நேரில்தான் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால் எங்கள் வீட்டிலோ, அவர்கள் வீட்டிலோ சொல்லவில்லை. ஆனால் அவரோ ஊருக்கு ‘வர முடியவில்லை’ என்று சொன்னார். அப்போதும் அவர் வரும்வரை காத்திருக்கலாம் என்று யாருக்கும் விஷயத்தை சொல்லவில்லை. இடையில் போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகும் ‘அதே காரணத்தை’ சொல்லிக் கொண்டு இருந்தார்.

அதனால் பொறுக்க முடியாமல், ‘ஒரு முக்கியான விஷயம் இருக்கிறது. உங்களிடம்தான் சொல்ல வேண்டும். அதை வேறு யாரிடமும் சொல்ல முடியாது’ என்று சொல்லி அழுதேன். கல்யாண வாழ்க்கையில் அதுதான் நான் முதல் முறையாக அழுதது. என்ன நினைத்தாரோ ஊருக்கு வந்தார்.குடும்பத்தினர் ஒவ்வொருவராக நலம் விசாரித்துக் கொண்டு இருந்தனர். நானோ ‘எங்கள் வாரிசு வளர்வதை’ எப்போது சொல்வது என்று காத்திருந்தேன். ஒருவழியாக சொந்தங்கள் நகர, நாங்கள் தனிமையில் இருக்கும் போது ‘நீங்கள் அப்பாவாக போகிறீர்கள்’ என்று உற்சாகம் பொங்கச் சொன்னேன்.

ஆனால் அவர் லேசான புன்னகையுடன் என் கைகளை பிடித்துக் கொண்டார். வேறு எதுவும் பேசவில்லை. கொரோனா பீதி, நீண்ட தூர பயணம்... அதனால் ஏற்பட்ட களைப்பு என்றுதான் அப்போது நினைத்தேன். இரவு தூங்க போகும் போது, ‘குழந்தை உண்டாகி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீ சொன்னதும் திடீர் உற்சாகத்தால் ஏதும் பேச முடியவில்லை தவறாக நினைக்காதே’ என்றார். கூடவே உங்கள் வீட்டுக்கும் சொல்லு, காலையில் இங்கிருப்பவர்களுக்கு சொல்லலாம்’ என்றார்.

அதனால் உடனடியாக போன் செய்து எனது அம்மா, அப்பாவுக்கு தகவல் சொன்னேன். அவர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி... ‘ஏன் இவ்வளவு நாட்கள் சொல்லவில்லை என்பதில் இருந்து..... இனி எப்படி கவனமாக இருக்க வேண்டும்’ என்று அம்மா நீண்ட நேரம் பாடம் எடுத்தார். மறுநாள் காலை அவரது அப்பா, அம்மாவுக்கு சொன்னோம். அவர்களுக்கும் உற்சாகம். அவர்களுக்கும் ஏன் உடனடியாக சொல்லவில்லை... இப்படி அலட்சியமாக இருக்கலாமா’ என்று வருத்தப்பட்டனர்.

பிறகு காரணத்தை தெரிந்து கொண்டவர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.அன்றிரவு அவர் ‘உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்’ என்று சொன்னவர், ‘வேண்டாம் நாளைக்கு சொல்கிறேன்’ என்று கூறிவிட்டார். நானும் என்ன சொல்ல போகிறார் என்று ஆவலோடு இருந்தேன். ஆனால் அவர் சொன்னது என் வாழ்க்கைக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்து விட்டது.

மாற்றலாகி சென்றவருக்கு அங்கு ஒரு பெண் அறிமுகமாகி உள்ளார். அதன்பிறகு விபத்து ஒன்றில் சிக்கிய அந்தப் பெண்ணின் அப்பா, அம்மா இருவரும் இறந்து விட்டார்களாம். அவர்களுக்கு ஒரே பெண் என்பதால் வேறு யாரும் அந்தப் பெண்ணுக்கு உதவியாக இல்லையாம். அதனால் இவர் போய் உதவியாக இருந்து இறுதி காரியங்களை செய்துள்ளார்.

அதனால் ஏற்பட்ட பழக்கத்தால் இருவரும் நட்பாகி உள்ளனர். ஒருகட்டத்தில் அந்தப் பெண் தனியாக இருக்க பயப்பட்டதால் இவர் போய் உடன் தங்கியுள்ளார். அந்த நெருக்கம் காதலாகி விட்டதாம். கொரோனா வந்த பிறகு ஊருக்கு சென்றவர், அந்த பெண்ணை திருமணமும் செய்து கொண்டாராம் என்று பட்டியல் போட்டவர் முடிவில், ‘அந்த பெண்ணை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். பாவம் அவளுக்கு யாருமில்லை’ என்று முடித்தார்.

என்னால் அந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு நல்ல விஷயம் சொல்ல பல நாட்கள் காத்திருந்த, அதுவும் அவரிடம்தான் முதலில் சொல்ல வேண்டும் என்று தவமிருந்த என்னால் அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் சொல்வது விளையாட்டாக கூட இருக்குமோ என்று நினைத்தேன். அவளை விட்டு விட்டு வந்து விடுங்கள் என்று அழுது கெஞ்சி பார்த்தேன். ஆனால் அவரோ, ‘உன்னை ஒரு போதும் கைவிட மாட்டேன். நான் ஏற்கனவே திருமணம் ஆனவன் என்று அந்தப் பெண்ணுக்கு தெரியும். எந்த பிரச்னையும் வராது. உன்னிடம் எதையும் மறைக்கக்கூடாது என்பதற்காக உண்மையை சொன்னேன்’ என்று சொன்னார்.

நான் சண்டை போட்ட போது, அவர், ‘அவளால் என்னை ஒரு நிமிடம் கூட பிரிந்திருக்க முடியாது. அந்தளவுக்கு என்மீது அன்பு வைத்து இருக்கிறாள். நீயோ ஆண்டுக்கணக்கில் பிரிந்து இருக்கிறாய்.... யாருக்கு என் மீது அன்பு அதிகம் என்பது புரிகிறதா’ என்று கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது. இந்த விஷயம் அவர் வீட்டிற்கும் தெரியவந்தது. புத்திமதி சொன்னார்கள். அவர் கேட்கவில்லை, ஊருக்கு புறப்பட்டு போய்விட்டார். விஷயம் தெரிந்து என்னை எங்க வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டனர். இவ்வளவு பேசியும் கேட்காதவரிடம் ஏன் கெஞ்ச வேண்டும்.... விவாகரத்து செய்து விடலாம் என்றனர். கர்ப்பத்தையும் கலைத்து விட்டு வேறு திருமணம் செய்து கொள் என்றனர் என் உறவினர்கள்.

எல்லோரும் என் முடிவுக்காக காத்திருக்கின்றனர். எனக்கோ என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை. குழம்பிப்போய் இருக்கிறேன். வேலையையும் விட்டுவிட்டேன். என் குழந்தை குறித்து பல கனவுகளை சுமந்துக் கொண்டு இருக்கிறேன். அதை கலைப்பதா.... வேண்டாமா... அது என்ன பாவம் செய்தது என்று பல கேள்விகள் என்னை துளைக்கின்றன.

அப்பா இல்லாமல் வளர்த்தாலும், அப்பா என்று அவர் பெயர்தானே போட வேண்டும். கூடவே நம்பிக்கை துரோகியின் கருவை சுமப்பதா என்ற அவமானமும் என்னை வாட்டுகிறது...என்ன செய்வது என்று புரியவில்லை. எனது சகோதரியின் ஆலோசனையின்படி இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். நீங்கள் தான் உதவ வேண்டும். என்ன செய்வது... எனக்கு நல்ல வழியை காட்டுங்கள் தோழி.

இப்படிக்கு பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

உங்களின் கடிதம் கண்டேன் தோழி. உங்களின் நிலைமை புரிகிறது. உங்கள் விருப்பத்தின் படியே திருமணம் நிச்சயிக்கப்பட்டு நடந்துள்ளது. நீங்களும் அந்த வாழ்க்கையில் மனநிறைவுடன் இருந்துள்ளீர்கள். உங்களின் கணவர் உங்களை நன்றாக பார்த்துக் கொண்டதாக கூறியுள்ளீர்கள். ஆனால் சிறிது காலம் பிரிந்து இருக்கும்பொழுது உங்களை விட்டு இன்னொரு பெண் பால் அவர் ஈர்க்கப்படுகிறார் என்றால் உங்கள் இருவருக்கும் இடையே உள்ள புரிதல் முழுமையானதாக  தெரியவில்லை.

அவரின் செய்கைக்கு அவர் தரும் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. அந்தப்பெண்ணின் சூழ்நிலை கருதி அந்தப் பெண்ணை நான் ஏற்றுக்கொண்டேன் என்று சொல்வதெல்லாம் அவர் செய்கையை நியாயப்படுத்த அவர் முயல்கிறார். இதில் ஆணாதிக்க மனநிலை தான் மேலோங்கி உள்ளது. இவ்வாறு ஒரு பெண் திருமணமான பின் ஒருவருடன் தொடர்பு கொண்டு அதை ஏற்றுக் கொள்ளும்படி கணவரிடம் சொன்னால் அவர் அதை ஏற்றுக் கொள்வாரா?

அவர் ஆண் என்பதால்,  அவர் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் வாழலாம் என்ற தொனியிலேயே அவருடைய விளக்கம் இருக்கிறது. அவர் உங்களின் மேல் அக்கறை கொண்டதாக தெரியவில்லை.  அதிலும் இந்த மாதிரியான ஒரு சமயத்தில் அவரின் குழந்தைக்கு தாயாகி உள்ளீர்கள். இந்த ஒரு சூழ்நிலையில் கூட ‘நான் உன்னுடனும் வாழ்கிறேன்... அவளையும் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறுவது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.

அவர் உங்களின் மேல் வைத்துள்ள மதிப்பீடு சரியாக இல்லை. இப்படிப்பட்ட ஒருவர் இப்பொழுது மட்டுமல்ல வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் அவர் செய்யும் செயல்களை நியாயப்படுத்தி அவரின் விருப்பம்போல் செயல்படுவார் என்று தோன்றுகிறது.

இப்படிப்பட்ட ஒருவர் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் கடைசிவரையில் துணையாக இருப்பார் என்றும் தோன்றவில்லை. அவர் கொடுக்கும் விளக்கம் பொருத்தமற்றது. அவரைப் புரிந்து கொள்வதில் உங்களுக்கு சிக்கல் இருந்திருக்கலாம். அவர் மட்டும் உங்களின் எதிர்காலம் அல்ல... உங்களுக்கும் எதிர்காலம் உள்ளது.

கட்டாயத்தின் பேரில் ஒருவரை திருமண உறவில் நிர்பந்திப்பது கடினம். உங்களுக்கான முடிவை நீங்களே எடுங்கள். கணவர் இப்படி ஏமாற்றியதை ஏற்றுக்கொள்ள வருத்தமாகத்தான் இருக்கும். ஆனாலும் நீங்கள் இதைக் கடந்துதான் போகவேண்டும்.உங்களின் இயல்பு, உங்களின் குணம் திருமண வாழ்க்கைக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன என்பது உங்களுக்குத்தான் தெரியும்.

கணவரை பிரிந்து வாழும் வாழ்க்கைக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளும் உரிமை, அவரின் குழந்தையை  சுமக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்யும் உரிமை உங்களுக்கு உண்டு. எந்த முடிவு எடுத்தாலும் உங்களுக்கு எது நன்மை பயக்கும்? உங்களை எது வசதியாக வைத்துக்கொள்ளும்? என்பவற்றை யோசித்து முடிவெடுங்கள். உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு.

‘கல்லானாலும் கணவன்’ என்று யோசித்து முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை. கணவரிடம் நம்பிக்கையை இழக்கும் போது, அவர் நமக்கானவர் இல்லை என்ற நிலை வரும்போது அவரை விட்டு விலகுவதில் தவறு இருப்பதாக தோன்றவில்லை. இருப்பினும் நீங்கள் எடுக்கும் முடிவுகளால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டு அறிவுப்பூர்வமா யோசித்து முடிவெடுத்து முன்னே செல்லுங்கள். உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். உங்களின் வாழ்க்கை இவரோடு முடியவில்லை உங்களுக்கான வாழ்க்கை இன்னும் உள்ளது. தைரியமாக வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி

பகுதிக்கான கேள்விகளை எழுதி

அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’

குங்குமம் தோழி,

தபால் பெட்டி எண்: 2924

எண்: 229, கச்சேரி சாலை,

மயிலாப்பூர், சென்னை - 600 004

வாசகிகள் கவனத்துக்கு,

பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: