கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறை கண்டுபிடித்த இந்திய வம்சாவளி மாணவி!

நன்றி குங்குமம் தோழி

கொரோனா வைரஸின் முள் போன்ற புரோட்டீன் பகுதியைக் கட்டுப்படுத்தி செயலிழக்க செய்யும் மூலக்கூறு ஒன்றை கண்டுபிடித்து இளம் விஞ்ஞானி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டீன் ஏஜ் இளம்பெண் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் ஆண்டுதோறும் ‘3எம் இளம் விஞ்ஞானி’ போட்டி நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்கின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த இளம் விஞ்ஞானி போட்டியிலும் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களில் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான அனிகா செப்ராலு போட்டியில் வென்று 25 ஆயிரம் டாலர் (ரூ.18.30 லட்சம்) பரிசுத் தொகை பெற்றுள்ளார். கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், சார்ஸ் -கோவிட்-2 வைரஸின் ஸ்பைக் புரதத்தை கட்டுப்படுத்துவதற்கான மூலக்கூறை உருவாக்குவதற்கு ‘இன்-சிலிகோ’ முறையைப் பயன்படுத்தி மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி முறையை உருவாக்கி, இந்தப் பரிசை வென்றுள்ளார்.

இதுகுறித்து அந்த நிறுவன வலைத்தளத்தில் வெளியிட்ட தகவலில் “கடந்த ஆண்டு கடுமையான வைரஸ் காய்ச்சலால் அனிகா பாதிக்கப்பட்டார். அந்த தாக்கம் காரணமாக, வைரஸ் காய்ச்சலுக்கான வலுவான மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் எழுந்துள்ளது. ஆனால், கொரோனா பாதிப்பு, அவருடைய எண்ணத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

“அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சியளிக்கிறது. ‘3எம்’ அறிவியல் ஆராய்ச்சியாளா–்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அவர்களின் உதவி மூலம், எனது கண்டுபிடிப்பை மேலும் மேம்படுத்த முடியும் என்று நம்புகிறேன். கொரோனா பாதிப்பை குணப்படுத்த வலுவான மருந்தை கண்டுபிடித்து, நோய்த் தொற்று பரவல் மற்றும் உயிரிழப்பை கட்டுப்படுத்த போராடி வரும் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுவதுதான் எனது அடுத்த இலக்கு” என்று அனிகா கூறியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான ‘3எம்’ இளம் விஞ்ஞானிகள் போட்டியில் வெற்றிபெற்ற 10 பேரில் ஒருவராக அனிகா செப்ராலுக்கு பரிசுத் தொகையுடன், ‘3எம்’ ஆராய்ச்சியாளர்களின் கல்வி வழிகாட்டுதலைப் பெறும் சலுகையும்  வழங்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸின் மேல்பகுதியில் முள் போன்ற அமைப்பு காணப்படுகிறது. இது புரதத்தால் ஆனது. சோப்பு போட்டு கை கழுவும் போது, வைரஸின் மேல் பகுதியில் இருக்கும் முள் போன்ற இந்த புரத பகுதி சிதைந்து விடும். வைரஸின் மேல் பகுதியில் இருக்கும் முள் மூலம்தான் நமது உடலுக்குள் நுழைகிறது. பின்னர் பெருகி தொற்று நோயாக மாறுகிறது.

இதைத் தடுக்க உலக நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இந்த முள் போன்ற புரதத்துடன் பிணைந்து வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கும் மூலக்கூறு ஒன்றைதான் பள்ளியில் 8-வது கிரேடு மாணவியான அனிகா கண்டுபிடித்துள்ளார். இந்த மூலக்கூறை செலுத்தும் போது, வைரஸின் மேல் பகுதியில் உள்ள முள் போன்ற அந்த அமைப்புடன் பிணைந்து ஒன்றாகி விடும். அத்துடன் வைரஸின் புரத பகுதியை செயல்பட விடாமல் முடக்கி விடும்.

கொரோனா வைரஸைத் தடுக்க சக்தி வாய்ந்த நேரடி தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கு பதில், வைரஸுடன் மூலக்கூறு எவ்வாறு, எங்கு பிணைக்கப்படும் என்பதை அடையாளம் காண பல கணினி நிரல்களைப் பயன்படுத்தி உள்ளார் அனிகா. இதற்கான மருந்துக்கு எந்த மூலக்கூறு சரியாக இருக்கும் என்பதை கண்டறிய, சிலிகா மெதடாலஜி முறையை அனிகா பயன்படுத்தி உள்ளார். இதன்மூலம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இந்த மூலக்கூறு பெரிதும் உதவும் என்று கூறுகின்றனர். இந்த மூலக்கூறுகளை வைத்து பரிசோதனை செய்யப்பட்டதா என்ற விவரம் வெளியாகவில்லை.

தொகுப்பு: அன்னம் அரசு

Related Stories: