நோய் தீர்க்கும் தற்காப்பு கலை!

நன்றி குங்குமம் தோழி

அடிமுறை, நம் தமிழ்நாட்டின் தற்காப்புக் கலை விளையாட்டுகளில் ஒன்று. அடிமுறை விளையாட்டில் கையாலும் காலாலும் தாக்கி எதிராளியை வீழ்த்துவர். தமிழர் மரபுக் கலைகளான சிலம்பம், வர்மம், ஓகம் போன்றவைகளுடன் அடிமுறை, பிடிமுறை போன்ற கலைகளும் முக்கியமானதாகும். ஆயுதமும் இல்லாத நிலையிலும் எதிராளியின் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் ஒரு சிறந்த மரபுக்கலையாகும்.

சமீபத்தில் வெளியான தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தில் இந்த கலைப் பற்றியே இடம் பெற்றிருக்கும். திரைப்படத்தில் வந்த பிறகுதான் இப்படி ஒரு கலை இருப்பது குறித்து தமிழர்களுக்கு தெரிய வந்தது. இந்தக் கலைக்குள் ஆயிரம் போர் தந்திரங்கள் ஒளிந்துள்ளது. வெளிநாடுகளில் கொண்டாடும் நம் பாரம்பரிய கலையான அடிமுறையினை சிஜிலி என்பவர் தன் கணவருடன் இணைந்து பயிற்சி அளித்து வருகிறார்.

இவர் நாகர்கோவில் மேலச்சூரங்குடியில் ‘லெமுரியா’ என்ற தற்காப்பு பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார். இவரது கணவர் செல்வன், கடந்த 12 ஆண்டு

களாக கைப்போர் எனப்படும் நாட்டு அடிமுறை தற்காப்புக் கலையில் தேர்ந்தவர். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு வரை சிஜிலிக்கு இந்தக் கலை பற்றி தெரியாதாம். தற்போது தொடர்ந்து நாட்டு அடிமுறையை கற்று வரும் இவர் பல இளம்பெண்களுக்கும் கற்றுத்தருகிறார்.

நாட்டு அடிமுறை பற்றி சொல்லுங்களேன்?

சிலம்பம், குத்துவரிசை, வாள்வீச்சு, களறி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வடிவமே நாட்டு அடிமுறை. இதை வர்ம அடிமுறை என்றும் கைப்போர் என்றும் கூறுகிறார்கள். முந்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த மன்னர் மார்த்தாண்டவர்மனின் தளபதி அனந்த பத்மநாபன் இந்த தற்காப்புக் கலையை உருவாக்கி னார். இதற்காக நாடு முழுவதும் 108 களறி பயிற்சி மையங்களை அமைத்திருந்தார். பண்டைய காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டிற்கு ஒருவர் இக்கலையில் சிறந்து விளங்கினர். இப்போது குமரி மாவட்டத்தில் ஊருக்கு 4 பேர் இந்தக் கலையை பயின்று வருகிறார்கள்.

இதை எப்படி தற்காப்புக் கலை என்கிறீர்கள்?

தங்களை தாக்க வருபவர்களிடம் இருந்து பாதுகாப்பு கொள்வதற்காக தடுப்பு முறையை கையாளுதல் மற்றும் தக்க பதிலடி தருதல் என இந்தக் கலை 2 வகைப்படும். வெறும் கையால் தாக்குவது மற்றும் ஆயுதம் ஏந்தியும் தாக்குதல் நடத்தலாம். இந்த தாக்குதலில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு கால் அடி தான் முக்கியம். சுவடு- கால் தடம் என்று கூறப்படும் இந்த அடிகளில் நிலச்சுவடு, பிரிவு சுவடு என ஒவ்வொன்றிலும் 12 பிரிவுகள் உள்ளன.

நிலச்சுவடு. பிரிவு சுவடு பற்றி கூறுங்களேன்?

நின்ற இடத்தில் இருந்தபடி தாக்கும் முறை நிலச்சுவடு. அப்போது ஒரு கால் தரையில் நிற்க மற்றொரு காலும் 2 கைகளும் எதிரிகளை பதம் பார்க்கும் வகையில் தாக்குதலில் ஈடுபடும். பிரிந்து ஒழிந்து தாக்குவது பிரிவு சுவடு ஆகும். இதில் துள்ளிக் குதித்து தாக்குவார்கள். இந்த தாக்குதலின் போது மன்னிப்பு கோருதல், காட்டாங்குஸ்தி முறை பின்பற்றப்படும் முதுகில் மண் ஒட்டும் வகையில் கீழே விழுந்தவர் தோற்றவராக கருதப்படுவார். ஒருவர் இந்தக் கலையில் மன்னிப்பு கோரினால் அவரை மன்னித்து விட்டுவிட வேண்டும்.

நாட்டு அடிமுறைக்கு என பிரத்யேக உடைகள் எதுவும் உள்ளனவா?

கராத்தே பயிற்சி போல இதற்கும் தனித்தனி உடைகள் உள்ளன. கராத்தேயில் பிரவுன், கிரீன், பிளாக் பெல்ட் என உடை அடிப்படையில் பிரிப்பதை போல் இதிலும் பல வகைகள் உள்ளன. அவை கருப்பு, கருநீலம், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு, வெண்மை. கராத்தே உடம்பை முறுக்கேற்றி வைக்கும் முறை. ஆனால் நாட்டு அடி முறை வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது. இதனால் தான் இந்த பயிற்சியை சிறுவர், பெண்கள், முதியோர் என அனைவரும் எளிதாக கற்கலாம். நாட்டு அடிமுறைக்கு அடிப்படையே உடம்பை வளைத்தல், டைவ் அடித்தல் தான். டைவ் அடிக்க முதலில் பெண்கள் தயங்குவார்கள். பின்பு சர்வ சாதாரணமாக டைவ் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்தக் கலை நோய் தீர்க்கும் வல்லமை கொண்டதா?

நாட்டு அடிமுறை பெண்களை சோம்பேறிகளாக இருக்கவிடாமல் செய்கிறது. கொரோனா பரவும் இந்த காலத்தில் சிறந்த எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் முறையாக நாட்டு அடிமுறை விளங்குகிறது. உடல் எடையை குறைக்கவும் பார்வை குறைபாட்டை சரிசெய்யவும் உதவுகிறது. தற்போது சிங்கப்பூர், அமெரிக்கா, கத்தார், ஜப்பான் என 17 நாடுகளை சேர்ந்தவர்கள் எங்களிடம் ஆன்லைன் முறையில் பயிற்சி பெறுகிறார்கள்.

உலக சாதனை ஏதாவது செய்துள்ளீர்களா?

தெலுங்கானாவில் உள்ள பெத்தஹள்ளியில் கடந்த ஆண்டு ஜனவரியில் மூன்றாயிரம் பேர் பங்கேற்ற நாட்டு அடிமுறை பயிற்சி நடத்தப்பட்டது. இது உலக சாதனையாக அறிவிக்கப்பட்டது.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: