இன்னொரு குழந்தைக்கு அவர் நண்பர் மறுக்கிறார்!

நன்றி குங்குமம் தோழி

என்ன செய்வது தோழி?

அன்புடன் தோழிக்கு,எனக்கு 31 வயது. பள்ளி இறுதியை முடித்த சில ஆண்டுகளில்  திருமணம். இப்போது 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.  மாமனார், மாமியார், நாத்தனார் எல்லோரும் ஒன்றாக வசிக்கிறோம். கணவர் படித்திருந்தாலும் விவசாய வேலைதான். சொந்தமாக நிலம் இருப்பதால் எல்லோரும் விவசாய வேலைகளை செய்வோம். என் கணவருக்கு மனைவி, குடும்பம் என்பதில் எல்லாம் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. அலட்சியமும் கிடையாது. ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான். அவர் இயல்புக்கு  எதிலும் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார். ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்பார்களே அப்படி. யாரையும் குறைத்து பேச மாட்டார்.  

அதே நேரத்தில் வேலை செய்யவும்  தயங்கமாட்டார். வீட்டில்  நிறைந்திருக்கும் பொருட்களெல்லாம் அவர் உழைப்பின் அடையாளம் தான். அவரது பெற்றோர், ‘எங்க பையன் உழைக்க ஆரம்பிச்ச பிறகுதான் நிலம், வசதி, வாய்ப்புகள் எல்லாம்  ஒண்ணுக்கு ரெண்டா ஒசந்துச்சி’ என்று அடிக்கடி சொல்வார்கள். கூடவே ‘எனக்கு குழந்தை இல்லை’ என்பதையும் அடிக்கடி சொல்வார்கள். ஆரம்பத்தில்  சுட்டிக்காட்டி வருத்தப்பட்டவர்கள் பிறகு குத்திக்காட்டி  ஊரெல்லாம் குறையாக  சொல்ல ஆரம்பித்தார்கள்.

திருமணமாகி 5 ஆண்டுகளாக எங்களுக்கு குழந்தையில்லை. மாமியாரின் குத்தல் பேச்சுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கண்ணீர் மட்டும்தான் விட முடிந்தது. அவரிடம் சொன்னால்,  ‘அட விடு வயசானவங்க ஏதாவது பேசிட்டுதான் இருப்பாங்க.... நமக்கு  கொழந்த  பொறக்கும்’ என்று சொல்லிவிட்டு வெளியில் போய் விடுவார். அவருக்கு பக்கத்தில் இருக்கிற நகரத்தில் ஒரு நண்பர் உண்டு. நெருக்கமான நண்பர். அரசு வேலையில் இருக்கிறார். வேலை இல்லாத நாட்களில் அவரை பார்க்க கிளம்பி சென்று விடுவார்.

குழந்தை இல்லாததற்கு நான் மட்டும்தான் காரணம் என்பது போல் மாமியார் வீட்டில் திட்டிக் கொண்டிருந்தனர்.  எங்கள் இல்லற வாழ்க்கை அத்தனை மோசமில்லை. ஆனாலும் ஏன் குழந்தை பிறக்கவில்லை என்பது தெரியவில்லை. அவரிடம், ‘டாக்டரிடம் போகலாம்’ என்றேன். அவரோ, ‘என்ன அவசரம்... நமக்கு ஒண்ணும் வயசாகிடல.... கட்டாயம் பிறக்கும். டாக்டருக்கு எதற்கு வீண் செலவு’ என்று சொல்லி என் வாயை அடைத்து விடுவார். அவரது நகரத்து நண்பரிடம் எனக்கும் அறிமுகம் உண்டு. அவர் சொன்னால் இவர் கேட்பார் என்பதால் அவரை தொடர்பு கொண்டு விவரத்தை சொன்னேன். அவரும் தனது நண்பரிடம் பேசுவதாக சொன்னார். அதன்பிறகும் என் வீட்டுக்காரரின் குணம் மாறவேயில்லை. அவரது நண்பர் பேசினாரா என்றுசந்தேகம் வந்தது.

எனவே அவர் நண்பரிடம் மீண்டும் பேசினேன். அப்போது அவர், ‘இந்த விஷயத்தை தனது நண்பரிடம் பேச தயக்கமாக இருப்பதாக தெரிவித்தார். எனக்கு வேறு வழியில்லாததால் அவரிடம்  அடிக்கடி பேசி  வற்புறுத்தினேன். ஒருகட்டத்தில் நாங்கள் இருவரும் பேச ஆரம்பித்தோம். மெல்ல, மெல்ல எங்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. தயக்கமில்லாமல் எல்லா விஷயங்களையும் பேசினோம். இருவரும் நேரில் சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருந்தோம். அந்த வாய்ப்பினை நாங்களே உருவாக்க ஆரம்பித்தோம். நகரத்தில் இருந்த கம்ப்யூட்டர் சென்டரில் கணவரை வற்புறுத்தி சேர்ந்தேன். அதன்பிறகு நாங்கள் நேரிலும் சந்திக்கும் வாய்ப்புகள் தானாகவே உருவாகின.

ஒருமுறை அவரது நண்பரை அழைத்துக் கொண்டு டாக்டரிடம் எனக்கு சோதனை செய்தேன். அது எனது கணவருக்கு தெரியாது. சோதனையில் எனக்கு எந்த குறையும் இல்லை என்று தெரிந்தது. எங்களுக்குள் இருந்த நெருக்கம் காரணமாக அவரின் நண்பர் மூலமாக குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். முதலில் ஒப்புக் கொண்டவர், பிறகு தனக்கு கல்யாணமாகி குழந்தைகள் இருப்பதால் பிறக்கப் போகும் குழந்தையால் ஏதாவது பிரச்னை வருமோ என்று யோசித்தார்.

நான் அவரிடம், ‘இந்த முடிவால் என் பிரச்னை தீரும். அதுமட்டுமல்ல நம்முடைய அன்பின் அடையாளமாக மட்டும்தான் இந்த குழந்தை இருக்கும். உங்களை ஒருபோதும் வெளிப்படையாக நானோ, குழந்தையோ உரிமை கொண்டாட மாட்டோம்’ என்று உறுதி அளித்தேன். அதன் பிறகு மெல்ல தெளிந்த அவர் எனது விருப்பத்திற்கு ‘சரி’ என்றார். நேரில் சந்திக்க வாய்ப்புகள் உருவாக்கிய நாங்கள், தனிமையில் இருப்பதற்கான சூழலை ஏற்படுத்தினோம். நான் கருவுற்றேன். எனக்கு மட்டுமல்ல எங்கள் வீட்டில் எல்லோருக்கும் என் கணவர் உட்பட மகிழ்ச்சி. அழகான பெண் குழந்தை பிறந்தது. குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது. கூடவே எனக்கும் அவரது நண்பருக்கும் மகிழ்ச்சிதான்.

நாங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.இப்போது ஓராண்டாக மீண்டும் பிரச்னை. அதுதான்  இந்த கடிதத்தை உங்களுக்கு எழுத வைத்தது. என் மாமியாருக்கு  பேத்தி மட்டும் போதாதாம். பேரன் வேண்டுமாம். ‘இவ்வளவு சொத்துகளை ஆள ஒரு ஆம்பிள புள்ள வேணாமா’ என்றுச் சொல்லி இன்னொரு பிள்ளை, அதுவும் ஆண் பிள்ளை பெற்றுக் கொள்ள சொல்லி வற்புறுத்த ஆரம்பித்து விட்டார்.

என் கணவரோ வழக்கம் போல் ‘பார்க்கலாம்’ என்று சொல்லி விட்டார். உண்மை நிலைமை எனக்குதான் தெரியும். என்ன செய்வது என்று புரியவில்லை. இந்த ஊரடங்கு காலத்தில் அவரது நண்பரை நேரில் சந்திக்க முடியவில்லை. செல்போனில் பேசினேன். அவரோ யோசிக்கிறார். ‘நமது பழக்கம் யாருக்கும் தெரியாதவரை பிரச்னையில்லை. தெரிந்தால் அந்த குழந்தைகளின் வாழ்க்கையும் பாதிக்கும். என் குடும்ப வாழ்க்கையும்தான் பாதிக்கும் ’என்று தயக்கத்துடன் சொன்னார்.

எனக்கும் வெளியில் தெரிந்தால் என்னவாகுமோ என்ற பயம் இப்போது ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரை மறக்கவும் முடியவில்லை. என் கணவருக்கு துரோகம் செய்கிறேனே என்ற உறுத்தலும் இருக்கிறது. என் கணவருக்கு உண்மையான மனைவியாக, குழந்தைக்கு நல்ல அம்மாவாக, என் மாமியாருக்கு நேர்மையான மருமகளாக இருக்க வேண்டும் என்று அவ்வப்போது தோன்றுகிறது. இடையில் அவரது நண்பரோ, ‘நாம் வழக்கம் போல் பழகலாம்’ என்கிறார். ஆனால் இன்னொரு குழந்தை மட்டும் வேண்டாம் என்கிறார். நான் அதைப்பற்றி பேசினால்  தவிர்க்கிறார். என் மாமியாரோ ‘ஆம்பள புள்ள  எப்போது பெத்துக் குடுக்கப் போற’ என்று நச்சரித்துக் கொண்டே இருக்கிறார்.

என்ன செய்வது  என்று தெரியவில்லை. உலகப் பார்வையில் தகாத உறவாக இருந்தாலும் அவரை மதிக்கிறேன். அவரை நேசிக்கிறேன்.  ஒரு தவறு செய்தவள் இன்னொரு தவறுக்கு ஆசைப்படுகிறாளே என்று உங்களுக்கு தோன்றும். எனக்கு வேறு வழி தெரியவில்லை? எனக்கும் அந்த உறுத்தல் இருக்கிறது. ஒருவேளை அவர் ஒப்புக் கொண்டு மீண்டும் குழந்தை பிறந்தால் அது ஆண் குழந்தையாக இருக்குமா  என்ற உத்தரவாதமில்லை என்பதும் புரிகிறது. இதை வெளியில் சொல்ல முடியவில்லை எனக்கும் வேறு வழித் தெரியவில்லை. இந்த பிரச்னைகளை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை? நான் செய்வது சரியா? எனக்கு தீர்வு கிடைக்குமா? என் மாமியாரை மாற்ற முடியுமா? எனக்கு ஒரு நல்ல வழியைகாட்டுங்கள் தோழி?

இப்படிக்கு, பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

ஒரு  தம்பதி குழந்தையை பெற்றெடுக்க முடியாதபோது, அதில் பெண் மட்டும் குற்றச்சாட்டுக்கு ஆளாவது தொடர்கதையாக இருக்கிறது. உங்களுக்கும் அதே பிரச்னை. இயலாமைக்கும், இல்லாமைக்கும்  பெண்களை  மட்டும்  பொறுப்பாளிகளாக கருதுவது நியாயமற்றது. அதில் ஆண்களுக்கும் சரிபாதி பங்கு இருப்பதை சமூகம்  கண்டு கொள்ளுவதில்லை. எல்லோரும் அதை  வசதியாக மறந்து விடுகிறார்கள், பெண்களை மட்டும் எளிதாக குறை சொல்லி விடுகின்றனர்.

முதலில்  இப்போது இருக்கும் பிரச்னை குறித்து  பார்ப்போம். நீங்கள்  சிக்கலான சூழலில் இருக்கிறீர்கள் என்பதை  உணர்கிறேன். ஒரு குழந்தை பெண்ணா, ஆணா என்பது முக்கியமில்லை. அந்த குழந்தையை, பெற்றோர்களாகிய நாம் எப்படி  வளர்க்கிறோம். கூடவே  எதிர் பாலினத்தை மரியாதையுடன் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதையும் குழந்தைகளுக்கு கற்பிக்கிறோம் என்பவைதான் முக்கியம். அப்படி செய்தால் நாட்டில் பெரும்பாலும்  சட்டவிரோத நடவடிக்கைகள் குறைந்துவிடும்.

துரதிர்ஷ்டவசமாக ஆண் குழந்தையின் மேலாதிக்கத்தை  நம்பும் பல குடும்பங்கள் இன்றும் உள்ளன. பெண்ணோ, ஆணோ எதுவாக இருந்தாலும் நம் குழந்தை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.  உங்கள் கணவர் மூலமாக அவரது குடும்பத்தினரை தெளிய வைக்கலாம். அதுவே பாதி பிரச்னையை தீர்த்து வைத்து விடும். முக்கியமாக உங்கள் கணவரின் நண்பருட னான உங்கள் உறவு ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட வேண்டும். அதுதான் நல்லது. ஏனென்றால் உங்கள் குழந்தை, கணவரின் நண்பரால்தான் பிறந்தது என்பது வெளியே தெரிய வந்தால்..... அது கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.  உங்கள் குழந்தையின் மனநிலையை பாதிக்கும். கூடவே  உங்கள் கணவர், அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, அவருடைய நண்பருக்கும், உங்களுக்கும் சங்கடத்தையும், பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.  

ஏதோ ஒரு சூழ்நிலையில் நீங்கள் அவரிடம் நெருக்கமாகி இருக்கிறீர்கள்.  நீங்கள் நிச்சயமாக அவரை மதிக்க வேண்டும்.  நீங்கள் அவரை நேசிக்கவும் செய்யலாம். இப்போது காரணங்களை ஆராயத்தேவையில்லை.  இருப்பினும் எங்காவது ஒரு இறுதி புள்ளி இருக்க வேண்டும். அதுதான் இருவருக்கும் நல்லது. அதை விட்டுவிட்டு உங்கள் கணவரின் நண்பர் மூலம் மீண்டும் ஒரு  பிள்ளையை பெற்றுக் கொள்ள முயற்சிப்பது சரியான தீர்வல்ல.

ஒருவேளை அவரும் ஒப்புக் கொண்டு நீங்கள்  முயற்சி செய்தாலும்.... நீங்கள் சொன்னது போல்,  அவர் மூலம்  ஆண் குழந்தையைதான்  பெறுவீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்..  மீண்டும் மகளாகவும் இருக்கலாம். அப்போது உங்கள் மாமியார் மீண்டும்  ‘ஆண் பிள்ளை’ கேட்டு உங்களை தொல்லை செய்யலாம்.  அவரை சமாதானம் செய்ய வேண்டியிருக்கும்.  இல்லாவிட்டால் ‘கடவுளின் கருணை அவ்வளவுதான்’ என்று சொல்ல வேண்டியிருக்கும். அதை இப்போதே சொல்லலாம்.

உங்கள் கணவரின் நண்பருக்கு இன்னொரு குழந்தை பெறுவதில் விருப்பமில்லை என்பதை, நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.  ‘அது கட்டாயப்படுத்தும் உரிமை உள்ள உறவு  அல்ல’ என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  அது தொடர முடியாத உறவு என்பதற்கு அதுவும் ஒரு உதாரணம். உங்கள் கணவருடன் பேசுங்கள்.  அவருடைய அன்பை வெல்ல முயற்சியுங்கள்.  அதனால் உங்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாகும். நீங்கள் சொல்வதில் இருந்து அவர் நல்லவராகவே தெரிகிறார். அவர் மூலம் குழந்தையை பெறுவதில் ஆர்வம் காட்டுங்கள்.  உங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தீர்கள். ஆனால் அவருக்கு சோதனை செய்யாமல் நீங்களே  அவருக்கு பிறக்காது என்று முடிவு செய்து விட்டீர்கள். அதன் பிறகு நீங்களாகவே ஒரு முடிவை எடுத்து விட்டீர்கள். அது சரியல்ல.

இந்த நவீன உலகில் மருத்துவ வசதிகள் பெருகி உள்ளன. முயற்சி செய்யுங்கள், உரிய மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள். கூடவே உங்கள் திருமண வாழ்க்கையிலும்  உங்கள் குழந்தையின் நலத்திலும்  கவனம் செலுத்துங்கள். அவை உங்கள் வாழ்க்கையில் பயமற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

முக்கியமாக உங்கள் கணவரின்  நண்பரிடம் பேசுங்கள்,  அவருடனான  உங்கள்  உறவை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். மீண்டும் சொல்கிறேன். அது எல்லோருக்கும் நல்லது.

உங்கள் மாமியாரை திருப்திப்படுத்த தொடர்ந்து முயற்சிக்காதீர்கள் . அதற்கு முடிவே இருக்காது. அவரிடம் நல்ல பெயர் எடுக்க,  உங்கள் பெயரை

மட்டுமல்ல, குடும்பத்தினரின் பெயரையும் கெடுத்து விடாதீர்கள். ஒரு மகன் இருப்பதால்,  எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடப்போவதில்லை. உங்கள் கணவர் மூலமாக ஒரு மகன்  பிறந்தால்  அது நல்லது. அதற்கு முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் தற்போதைய வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள்.  பலன் ஏதும் எதிர்பார்க்காமல்,  உங்களால் முடிந்ததை செய்ய முயற்சியுங்கள். அதன்மூலம் ஒரு நல்ல மருமகளாக இருங்கள். உங்கள் மகளுக்கு நல்ல கல்வி கற்பித்தல் மட்டுமல்ல அதிகாரம் அளித்தல் அவசியம். அவளை ஒரு சுதந்திரமான மற்றும் இரக்கமுள்ள மனுஷியாக வளருங்கள்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை செய்யுங்கள். பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. எல்லாவற்றையும் அமைதியாக மட்டுமல்ல, நம்பிக்கையுடனும், உறுதியுடனும் எதிர்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி பகுதிக்கான கேள்விகளை எழுதி

அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’

குங்குமம் தோழி,

தபால் பெட்டி எண்: 2924

எண்: 229, கச்சேரி சாலை,

மயிலாப்பூர், சென்னை - 600 004

வாசகிகள் கவனத்துக்கு,

பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: