தன்னம்பிக்கை கொண்ட கருப்பின பெண்ணாகவே வளர்க்கப்பட்டேன்!

நன்றி குங்குமம் தோழி  

அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்

“பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது, அது தொடர்பாக குறைகூறிக் கொண்டிருக்காதே; அந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடு” என்று தனது தாய் சியாமளா கூறிய வார்த்தைகளை எப்போதும் நினைவுப்படுத்திக் கொள்கிறார் கமலா ஹாரிஸ்.  சமீப நாட்களாக உலகமெங்கும் செய்தித்தாள்களில் தலையங்கமாக உச்சரிக்கப்படும் பெயர். அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் ஆப்பிரிக்க அமெரிக்க பெண். இன்னுமொரு சிறப்பு இவர் இந்திய அமெரிக்கரும். இன்னும் சொல்லப் போனால் தமிழ்ப் பெண்.

ஆம்… தமிழகத்திலிருந்து 1960 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற ஷியாமளா கோபாலனுக்கும், ஜமைக்காவிலிருந்து பொருளாதாரம் படிப்பதற்காக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த டொனால்டு ஜெ.ஹாரிஸுக்கு மகளாக கலிஃபோர்னியாவிலுள்ள ஆக்லாண்டில், 1964 ஆம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி பிறந்தார் கமலா ஹாரிஸ். 1986 ஆம் ஆண்டு ஹோவர்டு (Howard) பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற கமலா, கலிஃபோர்னியாவிலுள்ள ஹாஸ்டிங்ஸ் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். அங்கு பயிலும்போது கறுப்பின சட்ட மாணவர்கள் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றியது அவரது அரசியல் வாழ்க்கைக்கு ஓர் உந்துதலாக அமைந்தது.

 

1990  ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவிலுள்ள அலாமேடா கவுன்ட்டியில் மாகாண வழக்கறிஞராகவும், 1998ஆம் ஆண்டு சான் ஃபிரான்சிஸ்கோ மாகாண வழக்கறிஞர் டெரென்ஸ் ஹாலினன் கீழ் துணை மாகாண வழக்கறிஞராகவும் பணியாற்றிய கமலா, 2004ஆம் ஆண்டு சான் ஃபிரான்சிஸ்கோ மாகாண வழக்கறிஞருக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த வேற்று நிறத்து அமெரிக்கர் முதன்முறையாக சான்ஃபிரான்சிஸ்கோ மாகாண வழக்கறிஞராகப் பதவி வகித்தார் என்கிற பெருமையையும் கமலா அடைந்தார்.  

வழக்கறிஞராகப் பதவிவகித்த காலம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்த கமலா, 2010ஆம் ஆண்டு நடைபெற்ற கலிஃபோர்னியாவின் தலைமை வழக்கறிஞர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக, 'முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க, ஆசிய -அமெரிக்க மற்றும் கலிஃபோர்னியாவின் முதல் பெண் தலைமை வழக்கறிஞர்’ என்ற வரலாற்றுச் சாதனைக்கு சொந்தக்காரரானார். இதே பதவிக்கு 2014ஆம் ஆண்டில் நடந்த தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அரசியல் பயணம் 2015ஆம் ஆண்டு கலிஃபோர்னியா செனட் சபைக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்தவரை, கலிஃபோர்னியாவின் ஜனநாயகக் கட்சி 2016ஆம் ஆண்டு செனட் உறுப்பினர் பதவிக்காக அங்கீகரித்தது. இவர் சக ஜனநாயகக் கட்சி வேட்பாளரான லோரெட்டா சான்செஸுக்கு (Loretta Sanchez) எதிராகப் போட்டியிட்டு வென்றார். செனட் உறுப்பினராகப் பதவியேற்ற பின் ட்ரம்பின் பல்வேறு நடவடிக்கைகளைப் பொதுவெளியில் விமர்சித்து வந்தார். குறிப்பாக, அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு எதிரான சட்டங்களைக் கடுமையாக எதிர்த்தார்.

கடந்த பத்து வருடங்களில் செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்க பெண் கமலா ஹாரிஸ்தான். ஜனநாயகக் கட்சியின் இடதுசாரிகளுக்கே தனது ஆதரவை அளித்துவந்த கமலா, கடந்த 2019ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாள் அன்று, தான் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கு போட்டியிடப் போவதாக அறிவித்தார். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக அதிலிருந்து விலகிக்கொண்டார். இவரது குற்றவியல் நீதித் திட்டம், பெரும்பாலும் முற்போக்குத் திட்டங்களை உடையதாகவே இருந்தது. அதே சமயம் வழக்கறிஞராகப் பணியாற்றியபோது, தான் எதிர்த்த திட்டங்களையும் இதில் சேர்த்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

கமலா ஹாரிஸ், ஜோ பிடெனால் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்றே தனது தாய்வழிச் சமூகத்தைப் பற்றி பொதுவெளியில் பேசினார். தனது கலாசார பின்னணி காரணமாக இங்குள்ள ஒடுக்கப்பட்டவர்களின் நிலை பற்றி தனக்குத் தெரியும் என்றும் கூறினார். இந்த ஆண்டின் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுக்கான விவாதத்திலும், அவரது இந்த போர் குணம் நன்றாகவே வெளிப்பட்டது. அவரை துணை அதிபர் வேட்பாளராக தற்போது தேர்ந்தெடுத்துள்ள ஜோ பிடனையே கமலா ஹாரிஸ் தனது காட்டமான சாடல்களால் திக்குமுக்காடச் செய்தார்.

நிறவெறிக்கு எதிரான பிடனின் நிலைப்பாட்டை அப்போது அவர் மீண்டும் மீண்டும் கேள்விக்குறியாக்கினார். எனினும், அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிய பிறகு, ஜோ பிடனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். தற்போது, விவாதத்தின்போது தன்னை எதிர்த்து சண்டையிட்ட கமலா ஹாரிஸையே துணை அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஒரு வகையில், விவாதத்தின்போது நிற சமத்துவம், பெண்கள் உரிமைக்காக கமலா ஹாரிஸ் எழுப்பிய குரல்தான் அவரை ஜோ பிடன் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்.

ஜனநாயகக் கட்சி என்பது வெள்ளை இன ஆணுக்கோ, தன்னைப் போன்ற வயதானவர்களுக்கோ உரித்தானது இல்லை என்பதை, கமலா ஹாரிஸைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் ஜோ பிடன் உணர்த்தியிருக்கிறார். இது, வேட்பாளர் தேர்வு விவாதத்தின்போது கமலா ஹாரிஸ் நடத்திய போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்கிறார்கள். கமலா ஹாரிஸின் அரசியல் பயணம் இத்துடன்  நிறைவடைந்துவிடப் போவதில்லை. உலகிலேயே மிகுந்த சக்தி வாய்ந்த பதவியாகக் கருதப்படும் அமெரிக்க அதிபர் பதவி அவருக்காகக் காத்திருக்கிறது. அதனை அடைவதற்கான முதல் படிதான் தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள துணை அதிபர் பதவி. ஒருவேளை அந்த உச்சத்தை அவர் அடுத்த அதிபர் தேர்தலில் அடையலாம்.

இந்தியர்களுக்கு சுதந்திர வாழ்த்து தெரிவித்து பேசிய கமலா ஹாரிஸ், “இன்று ஆகஸ்ட் 15. தெற்காசிய பூர்வீகத்தைக் கொண்ட அமெரிக்காவின் முதல் துணை அதிபர் வேட்பாளராக நான் உங்கள் முன் நிற்கிறேன். என் அம்மாவிற்கு 19 வயதாக இருக்கும்போது கலிஃபோர்னியா வந்திறங்கினார். அப்போது அவரிடம் எதுவுமில்லை. ஆனால், அவரது பூர்வீகத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மட்டுமே இருந்தது. என் அம்மாவின் பெற்றோர், அதாவது எனது பாட்டி ராஜன் மற்றும் தாத்தா பி.வி.கோபாலன் இருவரும் இந்த உலகில் எங்கு அநியாயம் நடந்தாலும், அதைத் தட்டி கேட்க வேண்டிய கடமை உனக்கு இருக்கிறது என்று அம்மாவிற்கு நிறைய கற்றுக் கொடுத்தார்கள்.

நாங்கள் வளரும்போது அம்மா என்னையும் என் தங்கை மாயாவையும் மெட்ராசுக்கு அழைத்து செல்வார். ஏனெனில் அவர் எங்கிருந்து வந்தார், எங்கள் மூதாதையர்கள் குறித்து நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என அம்மா விரும்பினார். அதோடு எங்களுக்கு இட்லியை சாப்பிட பழக்க வைக்க வேண்டும் என்று முயன்றார். மெட்ராசில் என் தாத்தாவுடன் நான் நீண்ட நடைப்பயிற்சிகளுக்குச் செல்வேன். அப்போது அவர் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் எப்படி உருவானது என்பது குறித்தும் அதற்காக போராடியவர்கள் குறித்தும் என்னிடம் கூறுவார். அவர்கள் விட்டுச்சென்ற இடத்தில் இருந்து எடுத்துச் செல்வது நம் கடமை என்பார். நான் இங்கு இந்த இடத்தில் நிற்பதற்கு மிகப்பெரிய காரணம் அவர் கூறிய கதைகள். நாங்கள் வாழச் சென்ற இடம் என்னையும் எனது சகோதரியையும் கருப்பின பெண்களாகத்தான் பார்க்கும். எனவே நாங்கள் தன்னம்பிக்கை கொண்ட கருப்பின பெண்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: