காலம் மாறினால் காதல் மாறுமா?

நன்றி குங்குமம் தோழி

என்ன செய்வது தோழி

அன்புடன் தோழிக்கு,

நான் ஒரு பள்ளி ஆசிரியை . நான் சொல்லப்போகும் பிரச்னையும் பள்ளியில் தான் ஆரம்பித்தது. ஆம். பள்ளியில் படிக்கும் போதே காதலிக்க

ஆரம்பித்தேன். நானும் அவரும் படித்ததும், பிறந்ததும் ஒரே கிராமம்தான். ஆனால் பள்ளியில்தான் அறிமுகம். அவர் என்னை விட 2 வயது பெரியவர். கூட படித்தவர்கள் எல்லாம்,  ‘உன்னோட ஆளு... உன்னோட ஆளு’ என்றுச் சொல்லி... சொல்லி.. என்னை அவரோட ஆளாக மாற்றிவிட்டனர். கல்லூரி படிக்கும் போது  வீட்டில் தெரிந்து எதிர்த்தனர். தினமும் திட்டு வாங்கிக் கொண்டுதான் கல்லூரிக்கு போவேன். எங்களுக்கு இடையே இருந்த காதல் அதையெல்லாம் பெரிதாக நினைத்ததில்லை. அவரை பார்க்காமல் ஒருநாள் கூட நான் இருந்ததில்லை. தண்ணீர் எடுக்க, கழனிக்கு போக, தெருப் பெருக்க என்று அட்டவணை போட்டு வைத்திருந்த ஏதாவது ஒரு நேரத்தில் பார்த்து விடுவேன். அத்தனை காதல் அவர் மீது. கல்லூரி முடித்ததும், அவர்  வேலைக்கு போயிருந்தார். அவரது அண்ணன்கள் கல்யாணம் செய்யும் வரை காத்திருக்க வேண்டும் என்றார். நான் கல்லூரி முடிப்பதற்குள் அவர்களுக்கு அடுத்தடுத்து கல்யாணம்.  எங்கள் வீட்டில் எதிர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை.

அதனால் நான் பி.ஏ முடித்து பி.எட் படிக்கும் போதே வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். அவர்கள் எங்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பது உறுதியானதால், இரண்டு வீட்டுக்கும் தெரியாமல்  திருமணம் செய்ய முடிவு செய்தோம். கடைசிநாள் தேர்வு எழுதிவிட்டு நேராக அருகில் இருந்த மலைக் கோவிலுக்குப் போய் திருமணம் செய்தோம். அவர்கள் வீட்டில் அவரைதான் திட்டினார்கள். என்னை ஒன்றும் சொல்லவில்லை. ‘பெற்றோரை எதிர்த்துக் கொண்டு வருவதை விட எங்களிடம் சொல்லியிருந்தால் நாங்கள் பேசியிருப்போமே’ என்பதுதான் அவர்களின் ஆதங்கம். திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை இனிமையாகத்தான் போனது. பிள்ளைகள் பிறந்த பிறகுதான் எனக்கு அரசுப் பள்ளியில் வேலை கிடைத்தது. அவருக்கு தனியார் வேலை. வருவாய்க்கு குறைவில்லை. சொந்த வீடு, கார் என  வசதியாகத்தான் இருக்கிறோம். என்னுடைய பெற்றோருக்கான உறவும் இயல்பாகி விட்டது.

அதனால் வாழ்க்கையும்  இனிமையாக போய்க் கொண்டிருந்தது. அவ்வப்போது சின்ன சச்சரவுகளும் ஏற்படும். காரணம் அவர் எப்போதும் செல்போனில் பேசிக் கொண்டே இருப்பார். ‘வங்கியில் வேலை செய்வதால், லோன் விஷயமாக வாடிக்கையாளர்களிடம் அடிக்கடி  பேச வேண்டி உள்ளது’ என்பார். இந்த நிலை மாறவில்லை. இரவு மற்றும் விடுமுறை நாட்களும் தொடர்ந்தது. கேட்டால், என்னையும் அவரைப் போல் அதில் நேரம் கழிக்க சொல்வார். பெரிய பையன்  வெளியூரில்  உள்ள கல்லூரியில் சேர்ந்தான். விடுதியில் தங்கியிருக்கும் அவனிடம்  வீடியோவில் பேசலாம் என்பதற்காக ஸ்மார்ட் போன் வாங்கினேன். விடுமுறையில் வந்த பையன் முகநூலில் கணக்கு ஆரம்பித்து கொடுத்தான். தொடக்கத்தில் ஆர்வம் இல்லாவிட்டாலும்,  நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது செல்போனில்  துழாவ ஆரம்பித்துவிட்டேன். ஒருமுறை அவருடைய முகநூல் கணக்கை பார்த்த போது ஒரே காதல் கவிதைகளால் நிரம்பிக் கிடந்தது. அவரை ஏராளமானவர்கள் பின் தொடர்ந்துகொண்டு இருந்தனர். கல்யாணத்திற்கு முன்பு நிறைய கவிதைகள் சொல்வார். மகிழ்ச்சியாக இருக்கும்.

திருமணத்திற்கு பிறகு எல்லாம் குறைந்து விட்டன. ஆனாலும் முகநூலில் எங்கள் காதல்கள் கவிதையாக தொடர்வது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அதனால் முகநூலில் அவரது பக்கத்துக்கு அடிக்கடி போய் படிக்க ஆரம்பித்தேன். அவரது கவிதைகளுக்கு கருத்து  சொல்பவர்களுக்குள்

அடிக்கடி விவாதம் இருக்கும். அதில் அவரை அண்ணன் என்று சொல்வார்கள். ஆனால் அண்ணி என்று சொல்வது என்னையில்லை என்பது தாமதமாக புரிந்தது. அந்த  அண்ணி, வேறு ஒரு பெண். அதுவும் திருமணமான பெண். அவரிடம் கேட்டபோது அவர் வழக்கம் போல் மழுப்பினார். அந்த பெண்  பெயரை சொல்லி கேட்டதற்கு  அப்படி யாரையும் தெரியாது. எத்தனையோ பேர் என்னை ‘ஃபாலோ’ பண்றாங்க அவங்க எல்லாம் யாரு என்ன என்பதை தெரிந்து கொள்வதுதான் என் வேலையா’ என்று சொல்லிவிட்டார். நானும் அந்த விவகாரத்தை அப்போது விட்டுவிட்டேன். ஆனால் அவரது முகநூல் பக்கத்தை பார்ப்பதை விட்டுவிடவில்லை. அவரிடம் சண்டை போட்ட பிறகு அவரின் பக்கத்தில் எந்த பெண்ணும் கருத்துச் சொல்ல வருவதில்லை. அதையும் ஒருவர், ‘என்ன பிரதர் இப்பொதல்லாம் உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பாக்க முடியறதில்ல?’ என்று பதிவிட்டிருந்தார்.

அப்போதுதான் அது விவரமில்லை,  விவகாரம் என்று புரிந்தது. விசாரிக்க ஆரம்பித்த போது, அவரது கவிதைகளுக்கு ரசிகைகள் என்ற பெயரில் அவருடன் பலர் ஊர் சுற்றுவதும், ஒன்றாக மது அருந்துவதும் தெரிந்தது. அதில் ஒருவர் அந்த பெண். திருமணமானவள்.  அந்த பெண்ணின்  வீட்டுக்காரர் வெளிநாட்டில் இருக்கிறாராம். இவருடன் நெருக்கமாகி ஊர் சுற்றுவது தெரிந்தது. அதுமட்டுமல்ல வெளியூருக்கு  இருவரும் ஒன்றாக போய் தங்கிவிட்டு வருவதும் தெரிய வந்தது. இப்படி ஒன்றாக தெரிய வர நொறுங்கிப் போனேன். என்னை காதலித்து, கல்யாணம் செய்தவர் இன்று ஊருக்காக  காதல் கடை வைத்திருக்கிறார். அதுவும் 50 வயதை எட்டப்போகும் நிலையில்... என்னால் கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை. கேட்கவும் தயக்கம். வேலையில் மனம் லயிக்கவில்லை. பிள்ளைகளை சரியாக கவனிக்க முடியவில்லை. மனதுக்குள் புழுங்கினேன், அழுதேன். ஒருநாள் பொறுக்க முடியாமல் சண்டை போட்டேன். ஆனால் அவர் பதிலுக்கு அப்படியெல்லாம் இல்லை என்று மட்டும் மறுத்தபடியே இருந்தார். கடைசியில்  ‘நம்பினால் நம்பு.... அப்புறம் உன் இஷ்டம்’ என்று சொல்லிவிட்டார்.

அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஓய்ந்ததுதான் மிச்சம். ஒருகட்டத்தில் அவர் அமைதியாக இருப்பது போல் தோன்றியது. ஆனால் வீட்டில் இருக்கும் நேரங்களில் போனை கீழே வைப்பதில்லை. ஒருநாள் அவர் போனில் இருந்து அந்தப் பெண்ணின் எண்ணை எடுத்து அவளிடம் நேரடி யாக பேசிவிட்டேன். ஆனால் அவளோ, ‘நான் அப்படியில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர்.  நான் ரொம்ப ஆர்த்தடக்ஸ் ஃபேமிலியில் பிறந்தவள். அந்த மாதிரி தப்பு எல்லாம் பண்ண மாட்டேன்’ என்று சொல்லி அழுதாள். அழுதவளிடம்  என்ன கேட்பது  என்று விட்டுவிட்டேன். ஆனாலும் ஏனோ எனக்கு மட்டும் மனம் சமரசம் ஆகவில்லை. இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் சுமார் ஒரு மாதம்  வீட்டில் இருந்தார். அப்போது தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு  மாடி மீது  சென்று மெல்லமாக பேசிக் கொண்டிருப்பார். நாள் தவறாமல்  குறிப்பிட்ட நேரத்திற்கு மாடிக்கு செல்வது தொடர்ந்தது. அப்படி என்னதான் செய்கிறார்  என்று போனை எடுத்து பார்த்தால் உம்மா...    மணிக்கு பேசவும், காத்திருப்பேன் உடம்பு எப்போது சரியாகும்  சீக்கிரம் வேலைக்கு வாங்க என்ற ரேஞ்சிலேயே மெசேஜ்கள் இருந்தன. ஆனால் அது அவள் எண் இல்லை, புதிதாக இருந்தது. அப்புறம் அலசி ஆராய்ந்ததில் அது அவள்தான் என்பதை தெரிந்து கொண்டேன்.  

அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால், அவள் போனை எடுக்கவேயில்லை. எந்த எண்ணில் இருந்து கூப்பிட்டாலும் எடுக்கவில்லை. அவரிடம் பேசுவதற்காக அந்த எண்ணை வாங்கி  இருந்தாள். கணவரிடம் கேட்டால் வழக்கம் போல் மவுனம். அப்பா, அம்மா, அண்ணன், தம்பிகளை எதிர்த்துக் கொண்டு இவரை திருமணம் செய் தேன். உருகி உருகி காதலித்தேன். அவரும் காதலித்தார் என்று நினைத்தேன். ஆனால் அவர் ஏதோ பேருக்கு காதலித்திருக்கிறார் என்பதை நினைத்தாலே மனம் துடிக்கிறது.  அந்த ஏமாற்றத்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.   ஒவ்வொரு நாளும் நிம்மதியில்லாமல் கழிகிறது. இதுபோன்ற ஏமாற்றுப் பேர் வழியுடன் வாழ வேண்டுமா என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் அவர் திருந்தமாட்டாரா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.  திருமணமாகி குழந்தைகளும் இருக்கும் பெண்,  இன்னொருத்தியின் கணவரை அபகரிக்கலாமா? அவள்தான் அப்படி என்றால் இவருக்கு  புத்தி எங்கே போனது என்று என்னென்னவோ யோசிக்கிறேன். எல்லோரிடமும் எரிந்து விழுகிறேன். என்ன செய்யலாம் விவாகரத்து செய்து விடலாமா?  வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் நிலையில் விவாகரத்து சரி வருமா இல்லை அவரை திருத்த வாய்ப்பு இருக்கிறதா? இல்லை நான் கண்டும் காணாமல் இருக்க வேண்டுமா?   என்ன செய்வது தோழி எனக்கு வழிகாட்டுங்கள்?

இப்படிக்கு

பெயர் வெளியிட விரும்பாத வாசகி

நட்புடன்  தோழிக்கு,

உங்கள் கடிதத்தை படிக்கும் போது உங்கள் வருத்தத்தையும், வலியையும் புரிந்து கொள்ள மட்டுமல்ல, உணரவும் செய்கிறேன். பெற் றோர்  விருப்பத்தை மீறி திருமணம் செய்து  இருக்கிறீர்கள். பல ஆண்டுகளாக மகிழ்ச்சியாக குடும் பம் நடத்தி இருக்கிறீர்கள். இந்நிலையில் இப்படி கணவரால் ஏமாற்றப்பட்டு இருப்பதை எளிதில் ஜீரணிக்க முடியாதுதான். உங்கள் கணவரும், அந்தப் பெண்ணும் சேர்ந்து உங்களை மட்டும் ஏமாற்றவில்லை, அவளது கணவரையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.  மொத்தத்தில் அவர்கள் இருவரால் 2 குடும்பங்கள் ஏமாந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு  இந்த சமூகம் அங்கீகாரம் தரப்போவதில்லை. அதைவிட முக்கியம், ஒருபோதும்  உங்கள் மன உறுதியை இழந்து விட வேண்டாம்.  தேவையற்ற யோசனைகள் உங்கள் மனநலம், உடல் நலத்தை கெடுக்கும். நீங்கள் எந்த தவறும் செய்யாத போது நீங்கள் வருந்த வேண்டிய அவசியமில்லை. தவறு செய்பவர்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சி யாகவும் இருக்கும் போது, நீங்கள் கவலைப் படுவதால் பிரச்னை தீர்ந்துவிடாது. எனவே உங்கள் கணவருடன் உட்கார்ந்து பேசுங்கள்.

அவரது ‘தவறான உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும்’ என்று உறுதியாக சொல்லுங்கள். அழுது, ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள். உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வேண்டுமானால் ஒருமுறை ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள் தவறில்லை. அந்த உறவை துண்டிக்காவிட்டால்  நாம் பிரிவதை தவிர வேறு வழியில்லை என்பதை அவரிடம் தெளிவாக சொல்லுங்கள்.  அதை விட்டுவிட்டு ‘எனக்கு தெரியாது... அப்படி ஏதுமில்லை’ என்ற போலி சமாதானங்களை ஏற்காதீர்கள்.  நீங்களும், பிள்ளைகளும் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துச் சொல்லுங்கள். உங்களால் பேச முடியவில்லை என்றால்,  அவரது பெற்றோர், அவரது சகோதரர்களை விட்டு பேசச் சொல்லுங்கள்.  எப்படி பேசினாலும், அவர் தவறை ஒப்புக் கொண்டு, மாறினால் மகிழ்ச்சி. மாறிய பிறகு,  பழைய விவகாரங்களை சுட்டிக்காட்டாமல்,  பழையபடி  வாழ்க்கையை தொடருங்கள்.  இந்த சம்பவத்தை வைத்து உங்கள் காதலை,  உங்கள் திருமணத்தை சந்தேகப்படாதீர்கள். அவரின் தவறான வாழ்க்கையை மறந்து விடுங்கள் . ஒருகாலத்தில் உங்களுக்கு அவர் உண்மையாக இருந்திருக்கிறார்.

அது உங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப  உதவும். அதே நேரத்தில், அவர் தவறை திருத்திக் கொள்ளவில்லை என்றால்,  முடிவு  உங்கள் கையில்.... நீங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் விவாகரத்து மட்டும் தீர்வாகி விடாது. பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலத்தையும் பார்க்க வேண்டும்.  வேண்டுமானால் நீங்கள் இருவரும் மனநல மருத்துவரையோ,  மனநல ஆலோசகரையோ அணுகுங்கள். உங்கள் பிரச்னைகளை சொல்லுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். நீங்கள் உறுதியானவர் என்பதை,  உங்கள் கடிதமே சொல்கிறது. உங்கள் கணவர் குறித்த விவரங்களை சேகரித்த முறையே அதை சொல்கிறது. அதுமட்டுமல்ல  உங்கள் காதல், திருமணத்தின் போது எப்படி உறுதியான முடிவுகளை எடுத்தீர்களோ, அதுபோல் இப்போதும் உறுதியாக முடிவெடுங்கள். கூடவே வலுவாக இருங்கள். வாழ்த்துகள்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி

பகுதிக்கான கேள்விகளை எழுதி

அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’

குங்குமம் தோழி,

தபால் பெட்டி எண்: 2924

எண்: 229, கச்சேரி சாலை,

மயிலாப்பூர், சென்னை - 600 004

Related Stories: