கொரோனா காலத்து மன அழுத்தங்கள்

நன்றி குங்குமம் தோழி

லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்குக் காரணமான கொரோனா உலக பொருளாதாரத்தையே அடித்து வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல் இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தொழிற்சாலைகள், ஐ.டி நிறுவனங்கள், ஊடகத்துறை என யாவும் நலிவடைந்து வேறு வழியின்றி ஆட்குறைப்பு செய்து வருகின்றன. நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என்று கௌரவமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் திடீரென வேலை இல்லையெனில் என்ன செய்வார்கள்? குடும்பச் செலவோடு கடன் சுமைகளும் இருந்தால் வேறு வேலை கிடைக்கும் வரை சமாளிப்பது மிகவும் சிரமம். சேமிப்பு கைவசமிருந்தால் சிலகாலம் தள்ளலாம். சேமிப்புமில்லாமல் உறவுச் சிக்கல்களும் கொண்டவர்கள் மனஅழுத்தம் தாங்காமல், மனமுடைந்து தற்கொலைவரை செல்வதையும் காண்கிறோம்.

தற்கொலைக்குக் காரணங்கள் பெரும்பாலும் அவமானம், குற்றவுணர்ச்சி, சுயஇரக்கம், நோய் போன்றவையே தற்கொலைகளுக்குக் காரணமாக இருக்கும். ஆனால் இந்த பேரிடர் காலத்தில் நாம் மட்டும் வேலை இழக்கவில்லை, உலக அளவில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். வேலை இழப்புக்கு நாம் காரணமில்லை சமூகப் பொருளாதார நெருக்கடியே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தற்கொலைக்கு மற்றுமொரு முக்கிய காரணம் தெரியாத ஒன்றைப்பற்றிய பயம். வேறுவேலை கிடைக்காவிட்டால் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடுமோ? பிள்ளைகளின் படிப்பு பாழாகிவிடுமோ? கடன்காரன் திட்டி அவமானப்படுத்தி விடுவானோ? கையில் காசு இல்லாவிட்டால் பெண்டாட்டி பிள்ளையே மதிக்க மாட்டார்களோ போன்ற தெரியாத விஷயங்களைக் குறித்து பயந்து, செய்வதறியாது தற்கொலைக்கு முயல்வது அல்லது ஊரை விட்டு ஓடிப்போவது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். சூழல் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்ப தொடர்ந்து முயற்சி செய்பவர்களே அதிலிருந்து ஃபீனிக்ஸ்

பறவையாய் மீண்டு வருவார்கள்.

என்ன செய்ய வேண்டும்?

*வேலை போனதை குடும்பத்தில் மறைக்காமல் சொல்லி குழந்தைகள் உள்ளிட்ட எல்லோருடைய ஒத்துழைப்பையும் பெற முயற்சிக்க வேண்டும்.

*அனாவசிய செலவுகளைத் தவிர்த்து அவசியமானவற்றிற்கு மட்டும் சிக்கனமாக திட்டமிட்டு  செலவு செய்யலாம்.

*நண்பர்கள் உள்ளிட்ட தொடர்புகளைப் பயன்படுத்தி வேலை தேட முயற்சிக்கலாம். பிறர் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கம் தேவையில்லை.

*வேலைக்குத் தேவையானத் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள நேரத்தைப் பயன் படுத்தலாம்.

*கிடைத்திருக்கும் நேரத்தை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவிடலாம்.

*மன அழுத்தம் மிகுந்து தற்கொலை எண்ணம் வந்தால் மனநல ஆலோசகரை அணுகுவது அவசியம்.

எந்த பிரச்சனைக்கும் மரணம் தீர்வல்ல. இந்த சூழல் விரைவில் மாறும் என்ற நம்பிக்கை அவசியம். நேர்மறை எண்ணம், மனஉறுதி, தன்னம்பிக்கை, விடாமுயற்சி இவையே இப்போது அவசியமான அருமருந்துகள்.

தொகுப்பு: பிரியசகி

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: