வைரஸ் போடும் கணக்கு

நன்றி குங்குமம் தோழி

அட எப்போ போகும் இந்த கொரோனா??... எப்போ எங்களுக்கு விடுதலை?? என்ற அந்த ஒற்றை கேள்வியை நாம் எல்லோரும் தினமும் கேட்க தொடங்கி விட்டோம். தமிழகமும் அப்படி இப்படி என்று லட்சத்தை தொட்டுவிட்டது. இது இப்படியே தொடர்ந்தால் என்னவாகும் என்ற பீதி மனதை கிளற எல்லோரும் மனரீதியாக பெரிதாக பாதிக்கப்பட்டுதான் உள்ளனர். இதுவரை பார்த்ததில் மக்கள் தொகை அடர்த்தியை பொறுத்தும் ஒவ்வொரு நாட்டின் லாக்டவுன் மற்றும் மருத்துவ வசதியை பொறுத்தும் இந்த வைரஸின் தாக்கம் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. மார்ச் மாசம் ஒவ்வொரு  நாளும் ஆயிரம் பேரை இழந்து கொண்டிருந்த இத்தாலியை பார்த்து எல்லோரும் “உச்” கொட்டினோம். அதிர்ந்தும் போனோம். ஆனால் இப்போது இத்தாலி நிலையான இடத்தை அடைந்துவிட்டது. 6 கோடி மக்கள் தொகை கொண்ட, அதுவும் முதியவர்கள் தொகை அதிகம் வாழும் நாடான இத்தாலி கிட்டதட்ட இரண்டரை லட்சம் பேரை தொற்றுக்கு விலை கொடுத்து “34000” பேரை பலி கொடுத்து இன்று ஒருவாறு தன்னுடைய வரைப்படத்தை நிலை செய்துவிட்டது. தொற்றும் மரணமும் கொஞ்சம் கொஞ்சமாக குறையவும் தொடங்கிவிட்டது.

ஐரோப்பிய நாடுகள் பலவும் ஏற்கனவே இவ்வாறு தொற்றிலிருந்து மீள தொடங்கிவிட்டதென்னவோ உண்மைதான். இப்போது தமிழகமும் கிட்டதட்ட இத்தாலி அளவுக்கு மக்கள் தொகைதான். ஏற்கனவே லட்சத்தை தொட்டுவிட்ட நாம் ஜூலை இறுதியில் இரண்டு லட்சம் கடந்து விட வாய்ப்புள்ளது. அதன் பிறகு நிச்சயம் வரைப்படத்தின் வளைவில் சரிவு வர வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது. ஆனால் உயிரிழப்புகள் இத்தாலி அளவுக்கு “நிச்சயம் இருக்காது” என்பது ஆறுதலான விசயம்தான். இத்தாலியின் அதிக உயிரிழப்புகளுக்கு அதன் மக்கள் தொகையில் எழுபது சதவிகிதம் முதியவர்கள் என்பதும் ஒரு காரணம். அதுவே இந்தியாவில் மில்லினியல்ஸ் என அழைக்கப்படும் இளம் தலைமுறையினரே அதிகம். ஆக கொரோனாவால் இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்து காணப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமே. கொரோனா வைரஸ் பரவும் வேகம் வைரசின் வீரியத்தன்மை மற்றும் அது பரவக்கூடிய இடங்கள் மற்றும் அதன் சார்புடைய மக்கள் தொகை என்று பல்வேறு நிலைப்பாடு கொண்டு கணிக்கப்படுகிறது.

மேலும் சீரான டெக்னாலஜியை கொண்டும் பல கணிப்புகள் ஏற்கனவே வெளிவந்துவிட்டது. ஒரு அளவுகோலாக இத்தாலியை எடுத்துக் கொண்டால் ஆறு கோடி மக்கள் தொகைக்கு இத்தாலிக்கு இந்த நிலை என்றால் இந்தியாவின் 130 கோடி மொத்த மக்கள் தொகைக்கு குறைய தொடங்கும் நேரம் கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் பேருக்கு மேல் கூட தொற்றுக்கு ஆளாக நேரிடலாம்.. (இது ஒரு சாதாரண வாய் கணக்கு மற்றும் கணிப்புதான்,  இந்த அளவு கூடவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளது). இன்னும்சில கணிப்புகள் இந்தியாவின் பாதி மக்கள் தொகை அதாவது 65 கோடி மக்கள் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்றும் கூறுகிறது. இவையெல்லாம் நடந்தால் நிச்சயம் இறப்பு சதவிகிதமும் அச்சமூட்டும் வகையில் ஏறிவிடும். ஆனால் அந்த அளவிற்கெல்லாம் போக வாய்ப்பிருக்காது என்றும் சில ஆய்வுகள் கூறுகிறது. இப்போதுள்ள நிலையினை கணித்து பார்த்தால் கிட்டதட்ட 50% மக்கள் உலகெங்கும் தொற்றிலிருந்து குணமாகிவிட்டனர். ஆறுதல் அளிக்கக்கூடிய கவனிக்கத்தக்க மிக நல்ல செய்தி. ஆக படிப்படியாக ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகைக்கேற்ப தொற்றும், குணமும், மரணமும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இதில் நமது உடலின் எதிர்ப்பு சக்தியும், தொற்று மேலும் பரவாமல் இருக்க நாம் மேற்கொள்ள போகும் வழிமுறைகளும் மிக முக்கியம். ஒரு நாள் மிக மிக நிதானமாக இந்த தொற்றுகள் முடிவுக்கு வரும் அல்லது மேலும் தொற்று பரவ ஆளின்றி ஓயும் (herd immunity). அது வரை உலகம் பாதுகாப்பாக காத்திருக்க வேண்டியதுதான். அதற்குள் தடுப்பூசி வந்து விட்டால் இந்த கணக்கெல்லாம் நிச்சயம் வேலையற்று போய்விடும் . இது வரை உற்றுப் பார்த்ததில் ஒரு இடத்தில் இருந்து முடிந்தவரை பலரை தொற்றுக்கு ஆளாக்கிவிட்டு பின்பு நிதானமாக காலம் கடக்க கொரோனா வைரஸும் கடந்து போகிறது. இதான் வைரஸின் கணக்காக உள்ளது. ஆனால் அந்த சீனா போட்ட கணக்குதான் இப்போது வரை ஏதும் புரியல !!!

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: