கேன்சரை உருவாக்கும் வைரஸ்கள்!

நன்றி குங்குமம் தோழி

‘‘உலக மயமாக்கல் தொடங்கியதிலிருந்து ஆங்கில வழக்காடு தமிழில் இரண்டற கலந்துவிட்டது. அந்த வகையில் புற்றுநோய் என்ற சொல்லையும் நவீன தமிழ், கேன்சர் என்றே அழைக்கிறது. தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்வது என்பதற்கு கேன்சரை காட்டிலும் சிறந்த உதாரணம் வேறெதுவும் இருக்கவும் முடியாது’’ என்கிறார் புற்றுநோய் நிபுணர் டாக்டர் அனிதா ரமேஷ்.

‘‘சிகரெட், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்தும் நபர்கள், மது அருந்துபவர்கள், அதிக உடல் எடை, ஊட்டச்சத்து இல்லாத ஜங்க் உணவு பழக்கம், உடல் உழைப்பு குறைவு உள்ளவர்களே கேன்சரால் பாதிக்கப்படுகிறார்கள். மாயாஜாலத்தைக் காட்டிலும் அற்புதமான விந்தைகளை நமது உடல் தினமும் நிகழ்த்தி, நம்மை உயிர் வாழச் செய்கிறது. ஓய்வறியாமல் அணுக்கள் உற்பத்தி ஆவதும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பின் அவை அழிந்து கழிவுகள் மூலமாக வெளியேறுவதும் உடல் என்ற உற்பத்தி ஆலையில் ஆச்சரியமான விஷயம். செத்துப்போகும் அணுக்கள் கழிவாக வெளியேறாமல், உடலில் எங்காவது குவியலாக சேர்ந்து கட்டி ஆகிறது. இந்த கட்டி தான் கேன்சர் எனப்படுகிறது. இவை தொடக்க கட்டத்தில் தெரியாமல், ஒரு கட்டி மேலும் பல கட்டியாக உடலை ஆக்ரமிப்பு செய்யும் போது தான், உண்மை தெரிய வந்து, காப்பாற்றுவதிலும் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, கேன்சருக்கு வைரஸ் காரணம் என்பதோ அல்லது கேன்சர் உள்ளவர்கள் பிறருக்கு அதை பரப்புவார்கள் என்பதும் மூடநம்பிக்கை. இதில் புகையிலை பழக்கம் மட்டுமே 22% கேன்சருக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக தெரிவிக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரத்தில், உலகளவில் 6 நொடிக்கு ஒரு கேன்சர் மரணம் எனும் பகீர் தகவலும் இடம் பெற்றுள்ளது. உடலின் இந்த உறுப்பைத்தான் கேன்சர் தாக்கும் என குறிப்பிட்டு கூற  முடியாது. வாயில் தொடங்கி கர்ப்பப்பை வரை உடலின் நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம், தொண்டை... என கேன்சரால் எங்கு வேண்டுமானாலும் செங்கோல் நடத்த முடியும். கேன்சரை 100 சதவீதம் குணமாக்கும் மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. அதே சமயம் கேன்சருக்கு தற்போது அளிக்கப்படும் மருத்துவமும், பாதிப்பு நபரின் மன உறுதியும் விரைவாக குணமாவதற்கு அத்தாட்சி. இப்படி மனிதரை ஆட்கொள்ளும் கேன்சர், தற்போது வைரஸ் ரூபத்திலும் உடலை ஆக்ரமிக்கத் தொடங்கி இருக்கிறது என்பது தான் மருத்துவ அறிவியல் வட்டாரங்களை அதிர வைத்துள்ளது.

ஆம். உடலில் ஏற்படும் கட்டிக்கு, உயிரற்ற அணுக்களே காரணம் என்ற நிலையுடன், கண்ணுக்குத் தெரியாத வைரஸ்களும் மனித உடலில் கேன்சரை உருவாக்குகிறது என்று கூறும் மருத்துவ வல்லுநர்கள், நவீன மருந்துகளை கண்டுபிடிக்கவும், புதியவகை சிகிச்சைக்கான வழிமுறைகளை கண்டறியவும் அவசியம் ஏற்பட்டு உள்ளதாக கவலை தெரிவித்து உள்ளனர். அந்த வகையில், கோவிட்-19 வைரசும் கேன்சரை உருவாக்கும் காரணியாக அமையும் என்பதை ஒதுக்கிவிட முடியாது என்றும், தற்போது உருவாகும் கேன்சரில், 15 சதவீதம், வைரஸ்களால் ஏற்படுபவை என தெரிவிக்கும் வல்லுநர்கள், இந்த சதவீதம் மேலும் அதிகரிக்கும் எனவும் மிரட்டல் எச்சரிக்கை விடுக்கின்றனர். இந்த சாத்தியக்கூறு உண்மையா, பொய்யா என நிரூபிக்கும் புள்ளி விவரம் இதுவரை திரட்டப்படவில்லை. கோவிட்-19 உள்ளிட்ட வைரஸ்களால் உருவாகும் கேன்சரை தவிர்க்கும் வழிமுறைகள் அல்லது அதற்கான நவீன மாற்று மருந்து மற்றும் சிகிச்சை என்ன என்பது பற்றி ஆராய்ச்சி  செய்ய வேண்டிய அத்தியாவசிய கால கட்டத்தில் மருத்துவ உலகம் உள்ளது’’ என்கிறார் டாக்டர் அனிதா ரமேஷ்.

கண்டுபிடிக்கும் புதிய மருந்துகள் பொருளாதார ரீதியில் வாங்கும் சக்திக்கு உட்பட்டும், பாதுகாப்பானதாகவும், ‘‘கேன்சரை முற்றிலும் ஒழிக்கும் ஆற்றல் கொண்டதாகவும் இருக்க வேண்டும்’’ எனும் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். ‘‘வளர்ச்சி கண்டு வரும் நானோ மருத்துவம் மற்றும் இயற்கை சிகிச்சை முறைகளே வைரஸ் கேன்சருக்கு சிறப்பான சிகிச்சையாக அமையும்’’ என்று கூறும் இவர், ‘‘வைரஸ் வகை கேன்சர்கள் தலை, கழுத்து, தோலின் மேற்பகுதி மற்றும் சில உள்ளுறுப்புகளை தாக்கும். உயிரணு மற்றும் மரபணுக்களின் இயல்பு தன்மையை சீர்குலைத்து, கேன்சருக்கு வைரஸ் வழி வகுக்கும்.

கல்லீரல், கணையம் போன்ற உடல் உள்ளுறுப்புகளை பாதித்து மஞ்சள்காமாலை ஏற்பட காரணமாக இருக்கும் ஹெபடைடிஸ் பி மற்றும் சி தொற்றுகளால் உலகில் 40 கோடி மக்கள் பாதிக்கப்படுவதும், அவர்களில் பலரும் கேன்சர் தொற்றுக்கு உள்ளாகிறார்கள். அதுபோல கர்ப்பப்பை மற்றும் மார்பக கேன்சராலும், ஆண்டுக்கு மூன்று லட்சம் பெண்கள் இறக்கின்றனர். ஆக மொத்தம், பாரம்பரிய மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள கேன்சர் மருந்து மாத்திரைகளும், சிகிச்சைகளும் வைரஸ் கேன்சரை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்றும், புதிய நவீன மருந்துகள் கண்டுபிடிப்பு மற்றும் இயற்கை சிகிச்சை முறைகளே அதற்கான ஒரே தீர்வாக இருக்கும்’’ என்கிறார் டாக்டர் அனிதா ரமேஷ்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: