பெண்களை மையப்படுத்தும் ஓவியம்

நன்றி குங்குமம் தோழி

'' பெண்களின் அக அழகு மிக அற்புதமானது. அதை சமூகத்திற்கு உணர்த்துவதன் மூலம் பெண்கள் மீதான வன்முறை எண்ணங்களை குறைக்க முடியும். அதை வெளிப்படுத்தும் வகையில் தான் பெண்களை மையப்படுத்தி ஓவியம் வரைகிறேன்’’ என்ற அதிரடி சிந்தனையுடன் தொடங்கினார் ஓவியர் லதா.

சென்னை ஈஞ்சம்பாக்கம் சோழமண்டல ஓவியர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது தந்தை கே.எஸ் கோபால். பிரபல ஓவியர். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதற்கு ஏற்ப லதாவும் சிறந்த ஓவியராக மிளிர்கிறார். இவர் படித்தது எம்.ஏ., எம்.பில். தந்தையை போல் இவர் ஓவியக்கல்லூரியில் சென்று படிக்காவிட்டாலும் தந்தை வரையும் ஓவியங்களை பார்த்து வளர்ந்ததால், இவருக்கு சிறு வயதிலேயே ஓவியக்கலை மேல் ஈடுபாடு ஏற்பட்டது. இவரின் தந்தை மட்டுமே அந்த கிராமத்தில் ஓவியர் இல்லை.

இவர் வசிக்கும் கிராமத்தில் இருப்பவர்கள் அனைவருமே ஓவியர்கள் தான். தந்தையின் ஓவியங்கள் மட்டும் இல்லாமல் கிராமத்தில் உள்ள மற்றவர்களின் ஓவியங்களையும் இவர் பார்த்து வளர்ந்ததால், அந்த கலை மேல் உள்ள ஆர்வம் மேலும் அதிகமானது. சோழமண்டல் ஓவிய கிராமத்தை கடந்த 1966ம் ஆண்டு கே.சி.எஸ் பணிக்கர் என்ற ஓவியர் உருவாக்கினார். அது குறித்து லதா பேசத் துவங்கினார். ‘‘வங்கி பணி உள்பட பல வேலைகளை செய்து வந்த நான் கடந்த 2012ல் தான் முழு நேர ஓவியராக மாறினேன். அக்ரலிக் கேன்வாஸ் கொண்டு நவீன பாணி ஓவியங்களை வரைந்து வருகிறேன். எனது ஓவியங்களுக்கு இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவை சேர்ந்தவர்களும் ரசிகர்களாக உள்னனர். பொதுவாக பெண்களை மையப்படுத்தியே நான் ஓவியம் வரைந்து வருகிறேன். நவீன பாணி ஓவியம் என்பதால் பெண் சிகப்பாக இருக்கவேண்டும் அல்லது கருப்பாக தான் வரையவேண்டும் என்ற விதிமுறை எதுவும் இல்லை.

எனது மனதுக்கு தோன்றுவதை வரைகிறேன். அதில் பெண்கள் மீதான வன்முறையை குறிக்கும் சிந்தனைகள் மேலோங்கி நிற்கிறது. பொதுவாக நான் வரையும் ஓவியங்களில் உள்ள பெண்களின் கண்கள் மிக ஈர்ப்பு கொண்டதாக இருப்பதாக எனது ஓவியங்களை வாங்கி செல்பவர்கள் கூறுகின்றனர். கிட்டத்தட்ட நான்கு மாத காலமாக கொரோனா என்ற அரக்கன் பிடியில் உலகமே சிக்கி தவித்து வருகிறது. அதை மனதில் கொண்டு கன்னத்தில் கைவைத்தபடி கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிந்த பெண் ஓவியம் உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனாவின் பாதிப்பை எனது ஓவியத்தில் பிரதிபலித்து இருக்கிறேன்.

வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் பெண்கள் என்பதை வலியுறுத்தியே நத்தை தோற்றத்தில் பெண்ணை வரைந்துள்ளேன். கொரோனாவால் பலரது நிதி நிலைமை மோசமடைந்துள்ளது. சின்னஞ்சிறுவர்களுக்கு ஊரடங்கின் போது பட்டம் பறக்கவிடுவது, நீரில் கப்பல் விடுவது என்ற சிந்தனைகள் மேலோங்கி நிற்பதை வலியுறுத்தவே அதை ஓவியமாக்கியுள்ளேன். ஆன்மிக நாட்டமுள்ள பெண்கள் கோயில் குளம் செல்லமுடியாமல் தவிப்பதையும், இசை பயில்பவர்கள், பள்ளியில் படிப்பவர்கள் அதை இழந்து தவிப்பதையும் எனது ஓவியங்களில் வரைந்து வருகிறேன்’’ என்றார் லதா.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Related Stories: