பெண் மைய சினிமா - தங்க மீன்

நன்றி குங்குமம் தோழி

உலகின் மிகச்சிறந்த 100 திரைப்படங்களை பட்டியலிட்டால் நிச்சயமாக ‘தி ஒயிட் பலூனு’க்கும் ஓர் இடம் இருக்கும். தங்க மீன் வாங்க சென்ற ஒரு சிறுமியின் கதை இது. சிறுமி ரசியா தன் வீட்டிற்கு முன்னால்  இருக்கும் தொட்டியில் பல தங்க மீன்களை அன்போடு வளர்த்து வந்தாள். அவளுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். இன்னும் சில மணி நேரங்களில் புது வருடம் பிறக்கப்போகிற அறிவிப்பை ஆங்காங்கே இருக்கும் ஒலிபெருக்கிகள் அறிவித்துக் கொண்டிருக்க, ஏழு வயதான ரசியாவும் அவளின் அம்மாவும் புது வருடப்பிறப்பிற்கு தேவையான பொருட்களை வாங்க சந்தைக்கு வரும்போது ரசியா ஒரு வண்ண மீன்கடையில் இருக்கும் தங்க மீனைப் பார்த்து விடுகிறாள்.

புதுவருட கொண்டாட்டத்தைவிட அந்த மீனை வாங்க வேண்டும் என்பதே அவளின் பெரிய விருப்பம். எல்லோரும் புதுவருடத்தை கொண்டாட இருக்கும்போது அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வீட்டிலேயே நிறைய மீன்கள் இருந்தாலும் தான் விருப்பப்பட்ட மீனை வாங்க வேண்டும் என்ற பயணத்திற்கான வேலையில் கவனத்துடன் இருக்கிறாள்அம்மாவிடம் தன் விருப்பத்தை ரசியா சொன்ன போது புது வருடத்திற்கான வேலையில் மும்முரமாக இருக்கும் அம்மா அதை கண்டுகொள்ளவே இல்லை. அந்த நேரத்தில் ரசியாவின் அப்பா குளித்துக்கொண்டு இருந்தார். ரசியா தான் வாங்க நினைக்கும் மீனை பற்றி மீண்டும் மீண்டும் அம்மாவிடம் சொன்னபோது கிடைத்தது திட்டும், ஏமாற்றமும் தான். ரசியா என்ன செய்வது என்று தெரியாமல் அழுதுகொண்டிருந்த போது அதைப் பார்க்கும்

அண்ணன் தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறான் அம்மாவிடம் கெஞ்சி 5000 ஈரானிய ரியால் மதிப்புள்ள ஒரு நோட்டை தங்கைக்கு வாங்கி தருகிறான்.

அம்மா அந்தப் பணத்தை வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு புது வருட அன்பளிப்புக்கு தர வைத்திருந்தது. ரசியாவிற்கு மீனை வாங்கிய பின் மீதி சில்லறையை பத்திரமாக கொண்டு வரவேண்டும் என்ற செய்தி காதுக்கு எட்டிய பின் மகிழ்ச்சி துள்ளலில் மீனை வாங்க ஒரு கண்ணாடி குவளையை எடுத்துக்கொண்டு அந்த குவளைக்குள் பணத்தை போட்டுக்கொண்டு அந்த குறுக்கும் நெடுக்குமான சந்துக்களில் தன் விருப்பத்தை நிறைவேற்ற ஓடுகிறாள். ரசியா புதுவருடங்கள், உறவினர்களின் வருகை,கொண்டாட்டங்கள் எல்லாத்தையும் மறந்து தன் விருப்பமான அந்த தங்க மீனை வாங்க செல்லும் பயணத்தில் பல மனநிலைகளில் படம் பார்க்கும் நம் ஒவ்வொருவரையும் உடன் அழைத்து செல்கிறாள். நாம் மீண்டும் அவளை போல ஒரு குழந்தையாகிறோம். நாம் குழந்தையாக இருந்த போது நமக்கு விருப்பமான, ஆசையான் ஒன்றை வாங்க நம் பெற்றோரிடம் அழுது அடம்பிடித்த அந்த நினைவுகள் மென்மையாக நமக்குள் ஓடுகிறது.

ரசியா மீனை வாங்க போகிற வழியில் பணத்தை தொலைத்துவிடுகிறாள். ரசியா கடைக்கு போய் தான் கொண்டு வந்திருக்கும் குவளைக்குள் இருக்கும் பணத்தை பார்க்கும் போதுதான் பணம் வருகிற வழியில் தொலைந்துவிட்டது என்று தெரியும். ரசியாவுடன் சேர்ந்து நாமும் பணத்தை தேட ஆரம்பிக்கிறோம். ரசியா பணம் ஒரு கடையின் முன்னாடி இருக்கும் குழியின் மேல்புறத்தில் இருக்கும் ஜன்னல் போன்ற கம்பிகளின் மேலே இருப்பதை பார்த்தவுடன் மகிழ்ச்சியுடன் பணத்தை எடுக்க ஓடும்போது அந்தவழியாக வந்த ஒரு வாகனத்தில் வெளிப்பட்ட காற்று பணத்தின் மீது பட்டவுடன் ரசியா வருவதற்கு முன்பே அந்த பணம் குழிக்குள் விழுந்து விடுகிறது. பணத்தை கடையை திறந்தால் தான் எடுக்க முடியும். மீனை வாங்க போன தங்கையை தேடி வரும் அண்ணன் பணம் குழிக்குள் விழுந்துவிட்ட விவரத்தை அறிகிறான். பல முயற்சிகள் செய்தும் பணத்தை அவர்களால் எடுக்க முடிவதில்லை. அந்த வழியாக ஒரு சிறுவன் பலூன் விற்றுக்கொண்டு வருகிறான். அவன் பலூனை ஒரு குச்சியில் கட்டியிருந்தான்.

அந்த குச்சியின் முனையில் ஒரு சுவியிங்க் கம்மை ஒட்டி வைத்து குழிக்குள் பணம் இருக்கும் இடத்திற்குள் விடும் போது பணம் சுவியிங்க் கம்முடன் ஒட்டி விடுகிறது . குச்சியை மேலே இழுக்கும் போது பணம் சுவியிங்க் கம்முடன் சேர்ந்து மேலே வருகிறது. ரசியா மகிழ்ச்சியில் திளைக்கிறாள். ஒரே ஓட்டமாக ஓடி தான் விருப்பப்பட்ட மீனை வாங்கி கொண்டு வீட்டிற்கு மகிழ்ச்சியாக தன் அண்ணனுடன் செல்கிறாள்.  அங்கே அந்த பலூன் விற்கும் சிறுவன் எங்கே செல்வது என்று தெரியாமல் கையில் பணத்தை எடுக்க உதவிய அந்த குச்சியில் கட்டப்பட்டு விற்பனைக்காக காத்து இருக்கும் ஒரு வெண்ணிற பலூன் அவனின் வாழ்க்கையை பற்றிய கேள்விகளை நம் மனதிற்குள் துளைத்து எடுப்பதோடு படம் நிறைவு பெறுகிறது. படத்தின் இயக்குனர் ஜாபர் பனாஹி.

தொகுப்பு: த.சக்திவேல்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: