மியான்மரின் குட்டி செஃப்!

நன்றி குங்குமம் தோழி

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் நம் வீட்டுக் குழந்தைகள் பலர் தொலைக்காட்சி மற்றும் செல்போன் என்று கதியே இருக்கின்றனர். இதில் அபூர்வமாக சில குழந்தைகள் மட்டுமே கதைப்புத்தகம், பசில்கள், குடும்பத்தினருடன் நேரங்களை செலவிடுதல் போன்றவற்றை செய்கிறார்கள். மேலும் சில பள்ளிகள்,  நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதால், பள்ளி பாடங்களை செய்ய சில மணி நேரம் ஒதுக்குகிறார்கள்.

உலகம் முழுக்க ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுக்கு மியான்மரும் விதிவிலக்கல்ல. அங்கும் நாடு முழுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை நல்ல விதமாக பயன்படுத்தி வருகிறாள் 8 வயது சிறுமி மோ மியான்ட் மே தோ (Moe Myint May Thu). இவள் லாக்டவுன் நேரத்தில் சும்மா இருக்க பிடிக்காமல், அதனை வருமானமாக்கிக் கொண்டிருக்கிறாள். தினமும் 525 ரூபாய் சம்பாதிக்கிறார். அதுவும் சமையல் செய்து. நம்ம பிள்ளைகள் பாத்திரத்தை தொட்டாலே ‘கரி ஒட்டிக்கும்... நீங்களே கழுவுங்க மம்மி’ என்று சொல்லும் நிலையில் மோ குட்டி வகை வகையாக சமையல் செய்து அசத்துகிறார். அதுவும் அசைவ உணவுகள் என்றால், பின்னி பெடல் எடுக்கிறார்.

சமையலறைக்குள் ஒரு செஃப் போலவே நுழையும் அந்த குட்டி ஒரு கடாயை எடுத்து, அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, சில இறால்களை போட்டு வதக்கி எடுக்கிறார். காரசாரமாக இருக்கும் அந்த அசைவம் அவளின் ஃபேவரைட் உணவு என்பதால் அதை தன் தாயிடம் இந்த ஊரடங்கு காலத்தில்தான் கற்றுக் கொண்டுள்ளார். தாய் சமையல் செய்யும் போது கூடமாட உதவி செய்து வந்த மோ, இப்போது 15 உணவுகளை சமைக்க கற்றுக்கொண்டுள்ளார். அவற்றை தினமும் விற்பனை செய்து பணமும் சம்பாதிக்கிறார். மீன், கறி முதல் பன்றி வறுவல் வரை சமைத்து அசத்துகிறார். Tomato fish paste curry, Pork stew, Spicy fried frog ஆகிய உணவுகளை செய்வதில் கைதேர்ந்தவராக  உள்ளார் மோ. மியான்மர் மக்களின் காலை உணவான அரிசியால் ஆன நூடுல்ஸ் மற்றும் வேகவைத்த கெளுத்தி மீன் இவரது கைப்பக்குவத்தில் பல வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.   

இவர் சமையல் செய்யும்  வீடியோ ஒன்றை இவரது தாய் யூடியூப்பில் கடந்த ஏப்ரலில் பதிவிட அதை 2 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். கடந்த ஏப்ரலில்தான் இவர் சமையல் செய்ய கற்றுள்ளார். தினமும் தான் சமையல் செய்யும் அசைவ உணவுகளை விற்பது மட்டுமல்லாமல், இவரின் சமையல் வீடியோக்கள் யூடியூப்பில் பதிவேற்றப்படுவதால், அதன் மூலமும் ஒரு வருமானம் பெறுகிறார் மோ. மியான்மரின் குட்டி சமையல் கலை நிபுணராக விளங்கும் மோ, சம்பாதித்த பணத்தை அவரின் படிப்பு செலவிற்கு பயன்படுத்தவும், அவருக்கென வங்கிக் கணக்கு ஒன்றை திறக்கவும் திட்டமிட்டுள்ளனர் மோவின் பெற்றோர்.             

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: