பாலியல் மாஃபியாவை தடுத்து 2000 குழந்தைகளை மீட்ட பெண்

நன்றி குங்குமம் தோழி

1982ஆம் ஆண்டு, வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகவும் அவர்களது உரிமைகளை பாதுகாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4ஆம் நாளை இக்குழந்தைகளைப் பாதுகாத்துப் போற்றும் சர்வதேச தினமாக ஐ.நா சபை அறிவித்தது. இத்தினத்தின் நோக்கம் உலகம் முழுவதும் உடல் ரீதியாக, மன ரீதியாக மற்றும் உணர்வுப் பூர்வமாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிர்கொண்ட வலியை அங்கீகரிப்பதாகும்.

இதே சமயத்தில் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த இந்திராணி சின்ஹா, பெங்காலின் பாலியல் தொழிலின் மாஃபியாவிடமிருந்து இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிறுமிகளை மீட்டுள்ளார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்துப் போராடியவர். கொல்கத்தாவில் ஒரு பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியராக சில காலம் பணியாற்றிய போது, பெண் விடு தலைக்காக போராடுவதில்தான் தன் உண்மையான மகிழ்ச்சி யுள்ளது என்பதை அறிந்துகொண்டு அவரது வேலையைத் துறந்தார். பெண்கள் பிரச்சினைகளுக்காக சில ஆண்டுகள் பணியாற்றிய போது, ஒரு கிராமத்திற்கு சென்றிருக்கிறார். அங்குச் சிறார்கள் குறிப்பாக சிறுமிகளும், பெண்களும் கிராமத்தில் இருந்து காணாமல் போனது தெரியவந்துள்ளது. விசாரித்ததில், அவர்கள் கொல்கத்தாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதற்கு பின் எந்த தகவலும்  இல்லை என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இந்திராணி ​​1987ம் ஆண்டில் ”சன்லாப்” என்ற அமைப்பை தொடங்கினார். சன்லாப் என்றால் உரையாடல் என்று பொருள். 1989-1990ல் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஆய்வு ஒன்று, இந்திராணியைக் கொல்கத்தாவிலும் அதன் புறநகரிலும் அமைந்திருந்த பாலியல் தொழில் செய்யும் பகுதிகளுக்கு அழைத்துச்சென்றது. கொல்கத்தாவின் சிவப்பு விளக்கு பகுதிகளில், ​​நூற்றுக் கணக்கான பெண்களையும் சிறுமிகளையும் சந்தித்தார். அவர்கள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், தெரியாதவர்கள் எனப் பலராலும் ஏமாற்றப்பட்டு அங்கு வேறு வழியின்றி, தங்களின் விருப்பமின்றி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். திரும்பிப்போக வழியில்லாமல், யாருடைய ஆதரவும் இல்லாததால், தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும், இதற்குப் பின் இருக்கும் மாஃபியாவிற்கு பயந்து தங்கியிருப்பதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.

முறையான மருத்துவ வசதி, சட்டரீதியான உதவி என எந்த பாதுகாப்பும் இல்லாமல் தினமும் சித்திரவதையில் வாழ்வதாக முறையிட்டுள்ளனர். இந்த அனுபவத்திற்குப் பின், இவர்களைக் காப்பதே தன் முக்கிய நோக்கமாக்கிக் கொண்டார். அந்த சமயத்தில் பாலியல் தொழிலாளர்களுக்கு உதவச் சரியான வழிமுறைகளும் விதிகளும் இல்லாததால் அவர்கள் ஒவ்வொருவரிடமும் கலந்தாலோசித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை திட்டங்களாக அமைத்தார்.

“எந்த ஒரு பெண்ணும் விரும்பி இந்த தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆதரவில்லாமல் கையறு நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் வேறு வழியில்லாமல் இதில் ஈடுபடுகிறார்கள். அதே சமயம் இச்சமூகத்தில் வாழும் அனைவரும், இந்த வன்முறை தொடராமல் இருக்க, சமமான உரிமைகள், வாய்ப்புகள், அவர்கள் வாழ்க்கையை தேர்வு செய்யும் சந்தர்ப்பமும் அளிக்கவேண்டும்” என்பது பாலியல் தொழிலை சட்டமாக்குதல் குறித்து இந்திராணியின் கருத்தாய் இருந்தது.

‘சன்லாப்’ சிறுமிகளின் கடத்தலை தடுத்து, மனித உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பாக உருவானது. 1990ல் சிவப்பு விளக்கு பகுதிகளில் பிறக்கும் குழந்தைகளை மீட்ட சன்லாப் அமைப்பு, பிற்காலத்தில் அக் குழந்தைகளுக்குச் சிறப்பு பராமரிப்பும் பாதுகாப்பும் தேவை என்பதை உணர்ந்து, 1992ல் அக்குழந்தை களுக்கான தங்குமிடமும் உருவாக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு இறுதியில் சன்லாப் மேலும் வளர்ந்து, பரந்த சிந்தனையுடன் பல ஆர்வலர்கள், அனுபவங்களுடன் பணியாற்றி வந்தது. அப்போது நாட்டில், கட்டாயப்படுத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமிகளை அரசு அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவர்களை மீண்டும் தங்கள் குடும்பத்திடம் ஒப்படைக்கும் முயற்சியின் போது, சில கும்பல் போலியான பெற்றோர்களைக் கொண்டு வந்து அவர்களை அழைத்துச்சென்று, மீண்டும் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவங்கள் நடந்துள்ளன.

இதனால் சன்லாப் அமைப்பு, குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அங்கீ கரிக்கப்பட்ட அமைப்பாக மாறி, குழந்தைகளை அவர்களின் உண்மையான குடும்பத்தை கண்டறியும் முயற்சியிலும், குடும்பத்துடன் சேர்ந்த சிறுமிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பணியில் இறங்கினர். இதனால் இந்திராணி சின்ஹாவிற்கும் அவர் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல்களும் கூட தொடர்ந்து வந்தன. பாலியல் தொழில், வன்கொடுமை எனப் பல வன்முறைகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை மீட்டு, அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து, கல்வியும் வாழ்வாதாரமும் அமைத்து தரும் சிறப்பு அமைப்பாகவும் அவர்களை குடும்பங்களுடன் இணைக்கும் முயற்சியிலும் இந்தியாவில் பல இடங்களில் சன்லாப் தொண்டர்கள் தற்போது இயங்கி வருகின்றனர். கடந்த இருபது ஆண்டுகளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குழந்தைகளை மீட்டு, பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.

தங்களிடம் அடைக்கலம் அடைந்த சிறார்களின் திறன்களைக் கண்டறிந்து அதற்கேற்ப அவர்களை பள்ளியில் சேர்த்தும், சுய தொழில் செய்யப் பயிற்சி களும், கல்வி முடிந்து வேலையில் சேர ஏற்பாடுகளும் செய்யப்படு கிறது. ஆனால் இந்த பணிகளுக்கு நடுவே 2015ல் இந்திரா சின்ஹா மரணம் அடைந்தார். ஆனால் அவர் பாதையில் சன்லாப் அமைப்பு நூற்றுக்கணக்கான ஆர்வலர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பலரை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தரும்

முயற்சியில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இல்லங்களில் தங்கி தங்கள் வாழ்க்கையை மீட்ட பெண்கள் சிலர் இணைந்து ‘சன்வத்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இப்பெண்கள் நடனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மனதளவில் ஊக்கமும் தைரியமும் அளிக்கும் சிகிச்சை முறையைப் பின்பற்றுகின்றனர். உதவி பெற்றவர்களே உதவி வழங்குபவர்களாக மாறியிருப்பது தான் இந்திராணியின் பெரும் சாதனை.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: