வாழ்க்கை சிறக்க காதல் வசப்படுங்கள்!

நன்றி குங்குமம் தோழி

‘‘வாழ்க்கை என்றாலே பல போராட்டங்கள் இருக்கும். அதை எல்லாம் சமாளித்துதான் நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்து வருகிறோம். இதனை எதிர்கொள்ள முடியாதவர்கள் தவறான முடிவினை தேர்வு செய்கிறார்கள். எந்த ஒரு சிக்கலாக இருந்தாலும், சோர்ந்து விடாமல் எதிர்கொள்ளும் நுணுக்கத்தை தெரிந்தவர்கள் வாழ்க்கையில் சாதனையாளராக  உருவாகிறார்கள். வாழ்க்கையை சந்தோஷமாக வாழ கற்றுத்தருகிறோம்’’ என்கிறார் சென்னையை சேர்ந்த டில்லி பாபு. இவர் ‘மெய்யுணர்வு மையம்’ என்ற  அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இதன் மூலம் மக்கள் மனதில் சந்தோஷம் மற்றும் அன்பினை வளர்த்து உறவினை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று பயிற்சி அளித்து வருகிறார்கள்.

‘‘நான் ஒரு பிசினஸ்மேன். தொழிலை பொறுத்தவரை எல்லாமே நல்லபடியாகத்தான் போய்க் கொண்டு இருக்கிறது. அதே போல் குடும்ப வாழ்க்கையிலும் எந்த சிக்கலும் இல்லை. என்னதான் வாழ்க்கை நதி போல் சீராக பாய்ந்து கொண்டு இருந்தாலும், ஏதோ ஒரு வெறுமை ஏற்பட்டது போன்ற உணர்வு இருந்தது. 2006ம் ஆண்டு ஒரு நாள் நானும் என் நண்பரும் எங்களின் குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவதற்காக சென்று இருந்தோம். பள்ளி விடும் நேரம் காத்திருந்து போது, நானும் அவரும் பல விஷயங்களை பேசுவது வழக்கம். அப்படி பேசிக் கொண்டு இருந்த போதுதான் என்னவோ வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் அன்பு, சந்தோஷம் இல்லாத போன்ற உணர்வு ஏற்படுவதாக தெரிவித்தேன். அப்போது தான் அவர் இந்த மையம் பற்றி விவரித்தார். இப்பயற்சியினை மலேசியாவை சேர்ந்த தமிழரான சிவசாமி என்பவர் நடத்துகிறார் என்றும் என்னையும் பயிற்சியில் கலந்துகொள்ள சொன்னார்.

நண்பரின் அழைப்புக்கு இணங்க பயிற்சிக்கு சென்றேன்.  அப்படித்தான் அந்த மையத்தில் இணைந்து செயல்பட ஆரம்பிச்சேன். இப்போது அந்த மையத்தில் தமிழ்நாடு அளவில் சேர்மேனாக இருக்கிறேன்’’ என்றவர் மையத்தின் செயல்பாடு பற்றி விவரித்தார். ‘‘இது ஒரு வார பயிற்சி. ஒருவர் தன் வாழ்க்கை முறையை எவ்வாறு சந்தோஷமாக வாழவேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கிறோம்.எல்லாரிடமும் ஏதாவது ஒரு பலவீனம் இருக்கும். கோவம், தற்பெருமை, ஈகோ, பயம்... இது போன்ற பலவீனங்கள் ஒருவரின் வளர்ச்சிக்கு தடையாக மாறும். சின்ன விஷயமாகத்தான் இருக்கும். அதில் அண்ணன், தம்பிக்குள் சண்டை ஏற்படும். இதனால் இரண்டு உறவுகளிலும் பாதிப்பு ஏற்படும். இது அவசியமற்றது. யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்தால், உறவுகளில் பிளவு ஏற்பட வாய்ப்பே இருக்காது. துன்பம் வரும் போது, அதை பக்குவமாக சமாளிக்க தெரிந்தாலே போதும். அதைத்தான் நாங்க சொல்லித் தருகிறோம்.

அன்புதான் பிரதானமானது.

அதை புரிந்து கொண்டால் எல்லா பிரச்னையையும் நாம் எளிதாக ஓரங்கட்டிவிடலாம். கணவன்- மனைவி, அப்பா-மகன், அக்கா-தங்கை, மாமியார்- மருமகள்... இப்படி எல்லா உறவுமுறையிலும் ஒருவர் மற்றொருவரின் உணர்வை மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும். அதே போல் நாம் வாழும் வாழ்க்கை முறையில் ஒரு சின்ன மாற்றம் செய்தால் போதும். உதாரணத்திற்கு ஒருவர் நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேட்கும் போது, சாதாரணமாக நல்லா இருக்கிறேன் என்று சொல்லாமல், சிறப்பாக இருக்கிறேன் என்று சொல்லிப்பாருங்க. உங்களின் பாசிடிவ் எனர்ஜி மற்றவரையும் தொற்றிக்கொள்ளும். நம்முடைய கையில் எல்லா விஷயங்களும் இருக்கு... அதை நாம் புரிந்து செயல்பட வேண்டும்.

ஏழுநாள் நடைபெறும் பயிற்சியில் பல விஷயங்களை சொல்லித் தருகிறோம். தியானம் செய்வது, யோகாசனம், கணவன்- மனைவிக்குள் ஏற்படும் ஈகோ பிரச்னை. அதை நீக்கி இருவருக்கு இடையே இருக்கும் அன்பை எவ்வாறு பலப்படுத்த வேண்டும், உணவு முறை, தொழில் செய்பவர்கள் என்றால் அவர்கள் தொழிலில் எவ்வாறு மேம்படவேண்டும், பள்ளி படிக்கும் மாணவர்கள் என்றால் அவர்களின் இலக்கு நோக்கி எவ்வாறு பயணிக்க வேண்டும் என பல்வேறு வயதினருக்கும் ஏற்ப இந்த நிகழ்ச்சி இருக்கும். அன்பை உணர்வதை எப்படி என்று தெரிந்து கொண்டு அன்பிற்கு முக்கியத்துவம் அளித்து நடைமுறை வாழ்க்கையை வழிநடத்தும் போது நல்லதொரு வளர்ச்சியினைக் காண முடிகிறது. இதுவே அவர்களின் வாழ்க்கை சிறக்க ஒரு வழியினை அமைத்து தரும். சின்ன வயதில் அப்பா, அம்மா அன்பா இருக்கணும்னு சொல்லித்தராங்க. ஆனால் எப்படி அன்பா இருக்கணும்னு சொல்லித் தந்ததில்லை.

நாங்கள் அந்த அன்பை உணர செய்து பயிற்சி மூலமாக செயல்படும் போது, அது நம்மில் தானாகவே மாற்றத்தை ஏற்படுத்தும்’’ என்றவர் மாதம் ஒரு முறை இந்த பயிற்சி நடைபெறுவதாக தெரிவித்தார். ‘‘மாதம் ஒரு முறை தான் நாங்க பயிற்சி அளிக்கிறோம். தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பூர் போன்ற இடங்களில் மட்டுமே பயிற்சி நடக்கிறது. ஏழு நாள் நடைபெறும் பயிற்சியில் முதல் ஐந்து நாட்கள் மாலை ஆறு மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கும். வார இறுதி நாட்கள் மட்டும் காலை முதல் மாலை வரை நடைபெறும். இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேல் உள்ளவங்க பயிற்சி எடுத்து இருக்காங்க. ஒரு பெரிய கல்யாண மண்டபத்தில் பயிற்சி நடைபெறும். மேலும் நிகழ்ச்சியின் நேரத்திற்கு ஏற்ப உணவும் வழங்கப்படும்.

நாங்க எங்களின் பயிற்சி குறித்து எந்த விளம்பரமும் அளிப்பதில்லை. வாய்மொழியாகத்தான் எங்களின் நிகழ்ச்சி மக்களை சென்றடைந்துள்ளது. தற்போது சமூக வலைத்தளம் மூலமும் இது குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறோம். எங்களின் நிகழ்ச்சியை யுடியூபில் ‘வாழ்வியல் ரகசியம்’ என்ற தலைப்பில் வெளியிடுகிறோம். தற்போது குறிப்பிட்ட இடங்களில்தான் செயல்படுத்தி வருகிறோம். இந்தாண்டு கொரோனா தொற்றால், எங்களால் முழுமையாக செயல்பட முடியவில்லை. அதனால் அடுத்த ஆண்டு மேலும் சில இடங்களில் மையத்தின் செயல்பாட்டினை துவங்க இருக்கிறோம். அதே போல் மாதம் இருமுறை நிகழ்ச்சி நடத்தும் எண்ணமும் உள்ளது’’ என்றார் டில்லி பாபு.

தொகுப்பு: ஷம்ரிதி

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: