அயோத்தி சட்டமன்ற தொகுதி சமாஜ்வாடி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பவன் பாண்டே

அயோத்தி: அயோத்தி சட்டமன்ற தொகுதி  சமாஜ்வாடி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பவன் பாண்டே அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பாஜ புதிய வேட்பாளரை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.  உத்தர பிரதேசத்தில் உள்ள முக்கியமான தொகுதி அயோத்தி சட்டமன்ற தொகுதி. ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் இந்த தொகுதியில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தன்னுடைய சொந்த ஊரான கோரக்பூரில்தான் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவார் என பாஜ தலைமை திடீரென அறிவித்தது. அயோத்தி தொகுதியில் சமாஜ்வாடிக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது. சில மாதங்களுக்கு முன் நடந்த மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் அயோத்தி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாஜ தோல்வியடைந்தது.

இதன் காரணமாகவே, ஆதித்யநாத்தை அந்த தொகுதியில் பாஜ போட்டியிட வைக்கவில்லை என கூறப்படுகிறது. அயோத்தி தொகுதிக்கு முக்கிய கட்சிகள் எதுவும் வேட்பாளரை அறிவிக்காத  நிலையில் சமாஜ்வாடி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பவன் பாண்டே  நிறுத்தப்பட்டுள்ளார். தற்போது பாஜ எம்எல்ஏவாக இருக்கும் வேத் பிரகாஷ் குப்தா மீது அத்தொகுதி மக்கள் அதிருப்தியில் இருப்பதால் புதியவரை களமிறக்க பாஜ தரப்பில் ஆலோசனை நடந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சூரஜ் குமார் என்பவர் கூறுகையில், ‘தொகுதி மக்களின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாத எம்எல்ஏ  வேத் பிரகாஷ் மீது கடும் அதிருப்தி உள்ளது. ஒருவேளை பாஜ தனது வேட்பாளரை மாற்றினால் அக்கட்சி ஆதாயம் அடையும்’ என்றார்.

Related Stories: