ஏர் இந்தியா விமான நிறுவனம் டாடாவிடம் இன்று ஒப்படைப்பு

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் இன்று டாடா குழுமத்திடன் ஒப்படைக்கப்பட உள்ளது. கடன் சுமையினால் சிக்கி தவித்த ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. ரூ.70,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்ததால் விமானங்களை பராமரிப்பதிலும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் நிர்வாக ரீதியிலாக சிக்கல் ஏற்பட்டது. இதனால், அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் முன்வந்தது. இந்நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏர் ஏசியா, விஸ்தாரா விமான நிறுவனங்களை நடத்தி வருகிறது.

டாடா குழுமத்தின் ஏல விவரங்களை ஏற்றுக்கொண்ட ஒன்றிய அரசு ரூ.18,000 கோடிக்கு ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் வாங்கியதாக கடந்த அக்டோபர் 8ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதில் ரூ.2,700 கோடியை ரொக்கமாகவும், மீதமுள்ள ரூ.15,300 கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் கடனை ஏற்கவும் டாடா நிறுவனம் ஒப்புக் கொண்டது. மேலும், பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அக்டோபர் 25ம் தேதி ஒன்றிய அரசு அறிவித்தது. இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படுவது தொடர்பான அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்தவுடன் டாடா குழுமத்திடம் இன்று ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஒன்றிய அரசுக்கும் டாடாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை முழுமையாக கையாளவும், ஏர் இந்தியாவின் சரக்கு போக்குவரத்தை கையாளுதலில் 50 சதவீதமும் டாடாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Related Stories: