வீர-தீர செயல் புரிந்த 8 பேருக்கு அண்ணா பதக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று நடந்த குடியரசு தினவிழாவில் சென்னை தலைமை செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் திமுக பிரமுகர் தனியரசு உள்ளிட்ட 8 பேருக்கு வீர-தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி அவர்களை கவுரவித்தார். முதல்வரிடம் இருந்து அண்ணா பதக்கம் பெற்ற 8 பேரின் வீர, தீர செயல்பாடுகள் குறித்த தகவல்கள் வருமாறு: சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சாலையோரத்தில் வசிக்கும் ஏழ்மையான பெண்களுக்கு இவர் பல்வேறு உதவிகளை செய்து பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் 11ம்தேதி திடீரென பெய்த கன மழையின் போது கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்ட வளாகத்தில் மயங்கி கிடந்த உதயகுமார் என்ற வாலிபரை தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், ஓட்டேரி பகுதியில் புயல் பாதுகாப்பு ரோந்து பணியின் போது இடிந்த வீட்டுக்குள் தவித்த கணேஷ் என்ற இளைஞரை காப்பாற்றியதுடன், காணாமல் போன பழனி என்ற சிறுவனை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்துள்ளார். இதற்காக அவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

திமுக பிரமுகரான தனியரசு திருவொற்றியூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஆபத்தான நிலையில் இருந்ததை அறிந்து அங்கு வசித்த மக்கள் அனைவரையும் வெளியேற்றினார். இவர் உடனடியாக செயல்பட்டு மக்களை வீடுகளை விட்டு வெளியே கொண்டு வந்த சிறிது நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது. சரியான நேரத்தில் தனியரசு பொதுமக்களை வெளியேற்றினார். அனைவரும் உயிர் பிழைத்தனர். இதன் காரணமாக தனியரசுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவத்தி அருகே உள்ள ஆதிவூரைச் சேர்ந்த ராஜீவ் காந்தி என்ற தீயணைப்பு வீரர் எடையாறு கிராமத்தில் உள்ள தென்பெண்ணையாறு கரையோரம் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரை காப்பாற்றியதற்காக விருதை பெற்றிருக்கிறார்.

  கோவை அன்னூர் அருகே உள்ள சர்க்கார் சாமக்குளம் பகுதியைச் சேர்ந்த வன கால்நடை மருத்துவர் அசோகன், கோவை வனப்பகுதியில் பொதுமக்கள் 7 பேரை கொன்று உயிர்களுக்கும், உடமைகளுக்கும் கடும் சேதம் விளைவித்த சின்னதம்பி யானையை பிடிக்கும் பணியில் தனது உயிரை பொருட்படுத்தாமல் அதன் மிக அருகில் சென்று மயக்க ஊசியை செலுத்தி உள்ளார். இதன் காரணமாக அந்த யானை பிடிபட்டுள்ளது. ேமலும் சங்கர் என்ற யானையை பிடிக்கும் பணியிலும் இதேபோன்று தீரத்துடன் செயல்பட்டு உள்ளார். இதற்காக அவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று விபத்தில் சிக்கியதில் நிலைதடுமாறி அருகில் இருந்த கண்மாய்க்குள் விழுந்து விட்டது. அப்போது அந்த காருக்கு பின்னால் வேறு ஒரு காரை ஓட்டி வந்த ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் என்பவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் காருடன் தண்ணீரில் மூழ்கி கொண்டிருந்தவர்களை காப்பாற்றினார். இதற்காக அவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.  இதேபோன்று திருச்சி மாவட்டம் புதுக்கோட்டை கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த தாய்-மகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட சிறுவன் லோகித்துக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சொக்கநாதன் என்பவரும் வீர-தீர செயலுக்காக அண்ணா பதக்கம் பெற்றுள்ளார். இவர் அப்பகுதியில் குளிக்க சென்ற 6 சிறுமிகள் வாய்க்காலில் இழுத்துச் செல்லப்பட்ட போது அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று திருப்பூர் மாவட்டம் கள்ளிமேட்டுபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க சென்ற மாணவிகள் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட போது அவர்களை காப்பாற்றியதற்காக அதே பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற பெண்ணுக்கும் வீர-தீர செயலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: