விபத்தில் சிக்கியவர்களை தனியார் மருத்துவமனைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் கொண்டு செல்வதாக புகார்: சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு  கொண்டு செல்வதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சிறப்பு புலனாய்வு குழுவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகன விபத்து தொடர்பாக போலி காப்பீடு கோரிய விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2021ல் உத்தரவு பிறப்பித்திருந்து.

 இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு ஓசூரில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் 11 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 84 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதி, இதுகுறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களை அழைத்து அவர்களின் ஒப்புதலுடன்தான் வழக்கறிஞர்கள் இந்த வழக்குகளை திரும்ப பெற்றார்களா என்று விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையக் குழுவிற்கு உத்தரவிட்டார். விசாரணையின் போது, சாலை விபத்துகளில் சிக்குபவர்களை 108 ஆம்புலன்ஸ்கள் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லாமல் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதாக வழக்கறிஞர் விஜயராகவன் புகார் தெரிவித்தார். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு எதிரான இந்த புகார் குறித்து காப்பீடு மோசடி குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து ஏப்ரல் 4ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: