குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற 3 அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் காட்சிப்படுத்தப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: டெல்லி குடியரசு தின விழாவில் நிராகரிக்கப்பட்ட 3 அலங்கார ஊர்திகள் தமிழக குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டது. அவற்றை தமிழகம் முழுவதும் காட்சிப்படுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவற்றை நேற்று தொடங்கி வைத்தார். சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  அம்மூன்று அலங்கார ஊர்திகளையும் முதற்கட்டமாக, கோவை, ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் காட்சிப்படுத்தப்படுத்தும் பொருட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதல் அலங்கார ஊர்தியின் முகப்பில், வேலூர் கோட்டையில்  1806ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுடன் போர் புரிந்த மருது சகோதரர்கள், சிவகங்கையை மீட்ட வீரமங்கை வேலு நாச்சியார், வெள்ளையர்களின் ஆயுதக் கிடங்கினைத் அழித்து தன்னுயிரைத் தியாகம் செய்த வீராங்கனை குயிலி. ஆங்கிலேயர்களின் ஆட்சியினை எதிர்த்து முதன்முதலில் தீரமாய்ப் போரிட்டுத் தூக்கு கயிற்றினை வீரமுடன் ஏற்றுக்கொண்ட விடுதலைப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

அவரது படையில் தளபதியாக விளங்கிய தூத்துக்குடி மாவட்ட கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கம், அன்னியப் படைகளை தனியாகச் சென்று அழித்த ஒண்டிவீரன், மாவீரன் பூலித்தேவன், மாவீரன் அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள் உருவாக்கிய காளையார் கோயில் கோபுரம் உள்ளிட்ட பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் உயிருடன் காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அலங்கார ஊர்தி மதுரை வண்டியூர் தெப்பக்குளம் அருகில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.

இரண்டாவது  அலங்கார ஊர்தியில், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தனது புரட்சிகரக் கவிதைகளால் விடுதலை வேள்விக்கு வித்திட்ட மகாகவி பாரதியார், செக்கிழுத்தச் செம்மல்  வ.உ. சிதம்பரனார், தமிழகத்தில் விடுதலைத் தாகத்திற்கு வித்திட்ட தியாகி சுப்பிரமணிய சிவா, சேலம் விஜயராகவாச்சாரி உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கோவை மாநகர் வ.உ.சிதம்பரனார் பூங்கா அருகில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.

மூன்றாவது  அலங்கார ஊர்தியில், மூதறிஞர் ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கர்மவீரர் காமராஜர், ரெட்டைமலை சீனிவாசன், வீரன் வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, கொடிகாத்த திருப்பூர் குமரன், வ.வே.சு. ஐயர், காயிதேமில்லத், தஞ்சாவூர் ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா, கக்கன் ஆகியோரின் புகழினை வெளிப்படுத்துகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related Stories: