21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகளுக்கு பிப்.19ல் ஒரே கட்டமாக தேர்தல்: காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு; நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்; பிப்.22ம் தேதி வாக்கு எண்ணிக்கை

சென்னை: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரேகட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை 22ம் தேதி நடைபெறும் என்றும், மேயர், துணை மேயர், தலைவர்கள் தேர்வு மார்ச் 4ம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில், பெரும்பான்மையான இடங்களை திமுக கைப்பற்றியது.

இந்நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஜனவரி 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுத் தேர்தல்களை நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. தேர்தலை சந்திக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது ஒரேகட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர். தொடர்ந்து தேர்தல் நடத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 25ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது. எனினும் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகள், கட்டுப்பாடு, பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்தலை நடத்தலாம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்தசூழலில் வருகிற பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் பேரில் 27.9.2021 அன்று வழங்கிய ஆணையில் நான்கு மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டவாறு ஒரேகட்டமாகத் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொண்டுள்ளது.

 வார்டு மறுவரையறை செய்யப்பட்ட அறிவிக்கையினை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வாக்குச்சாவடி பட்டியல்கள் கடந்த 9.11.2021 மற்றும் 4.1.2022 அன்றும், வாக்காளர் பட்டியல்கள் 9.12.2021 மற்றும் 10.1.2022 அன்றும் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தேர்தல் அறிவிக்கையினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 28.1.2022 அன்று வெளியிடும். வேட்பு மனு தாக்கல் 28.1.2022 (வெள்ளிக்கிழமை) அன்றே துவங்கும். வேட்பு மனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். வாக்குப்பதிவு 19.2.2022 (சனிக்கிழமை) அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை கோவிட்-19 அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி அன்று காலை 8 மணிக்கு தொடங்கும்.

21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 138 நகராட்சிகளுக்கு உட்பட்ட 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் 490 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.மாநகராட்சி மன்ற உறுப்பினர், நகராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய அனைத்து பதவியிடங்களுக்கான தேர்தல்கள் கட்சி அடிப்படையில் நடைபெறும்.

தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த வேட்பாளர்களுக்கு, பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.500, நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தேர்தல் ரூ.1,000, மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தேர்தல் ரூ.2 ஆயிரம் வைப்பு தொகை செலுத்த வேண்டும். இதர வகுப்பை சேர்ந்த வேட்பாளர்களுக்கான தேர்தல் வைப்பு தொகை என்னவென்றால், பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.1,000, நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தேர்தல் ரூ.2 ஆயிரம், மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தேர்தல் ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்டும்.

இந்த தேர்தல்களுக்கென மாநகராட்சிகளில் 15,158 வாக்ச்சாவடிகள், நகராட்சியில் 7417 வாக்குச்சாவடிகள், பேரூராட்சிகளில் 8,454 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 31,029 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு  நடைபெறும். சென்னை மாநகராட்சியில் மட்டும் 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் 1,37,06,793 ஆண் வாக்காளர்களும், 1,42,45,637 பெண் வாக்காளர்களும், 4.324 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,79,56,754 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.இதில், மாநகராட்சிகளில் 76,39,538 ஆண் வாக்காளர்களும் 78,42,109 பெண் வாக்காளர்களும், 2,960 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 1,54,84,607 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

நகராட்சிகளில் 31,51,528 ஆண் வாக்காளர்களும், 33,40,346 பெண் வாக்காளர்களும், 861 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 64,92,735 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். பேரூராட்சிகளில் 29,15,727 ஆண் வாக்காளர்களும், 30,63,182 பெண் வாக்காளர்களும், 503 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 59.79,412 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். சென்னை மாநகராட்சியில் பட்டும் 30,23,803 ஆம் வாக்காளர்களும், 30,93,355 பெண் வாக்காளர்ககும், 1,576 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 61,18,734 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

சாதாரண நேரடி தேர்தல்கள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைக்கொண்டு பின்வரும் பணியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல்கள் 4.3.2022 அன்று நடைபெறும். அதன்படி மாநகராட்சி மன்ற மேயர் 21 பதவியிடங்களுக்கும், துணை மேயர் 21 பதவியிடங்களுக்கும், நகராட்சி மன்ற தலைவர் 138 பதவியிடங்களுக்கும், நகராட்சி மன்ற துணை தலைவர் 138 பதவியிடங்களுக்கும், பேரூராட்சி மன்ற தலைவர் 490 பதவியிடங்களுக்கும், பேரூராட்சி மன்ற துணை தலைவர் 490 பதவியிடங்கள் என மொத்தம் 1298 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான நிலையான செயல்முறைகளை பின்பற்றி சமூக இடைவெளி மற்றும் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.வேட்புமனுக்கள் தாக்கல் செய்தல், வேட்புமனுக்களை ஆய்வு செய்தல், வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆகிய நிகழ்வுகளை கண்காணிப்புக் கேமரா மூலம் பதிவு செய்திட ஆணையத்தால் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உரிய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்தேர்தலில் ஒரு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒருவர் என்ற வீதத்தில் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதில் சென்னை மாநகராட்சிக்கு மட்டும் மூன்று தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.மேலும், இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் பேரூராட்சி மற்றும் நகராட்சி ஒன்றிற்கு ஓர் அலுவலர் வீதமும், மாநகராட்சியினைப் பொருத்தமட்டில் ஒரு மண்டலத்திற்கு ஓர் அலுவலர் வீதமும் வட்டார தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இத்தேர்தல்களுக்கென 649 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 1,644 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்தல்களுக்கென சுமார் 80 ஆயிரம் காவலர்கள்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் வீதம் சுமார் 1.33 லட்சம் அலுவலர்கள் வாக்குப்பதிவுப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவுக்கு பயன்படுத்துவதற்காக பாரத மின்னணு நிறுவனத்தினரால் சுமார் 55,337 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 1,06,121 வாக்குப்பதிவு கருவிகள் முதல்நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவினக் கணக்குகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் உரிய அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யத் தவறுபவர்கள் மீது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிட இயலாதவாறு தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். பேரூராட்சி வார்டு உறுப்பினர் என்றால் ரூ.17 ஆயிரம், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் (முதல் மற்றும் இரண்டாம் நிலை) ரூ.34 ஆயிரம், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் (தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை) ரூ.85 ஆயிரம், மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் (சென்னை நீங்கலாக) ரூ.85 ஆயிரம், பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ரூ.90 ஆயிரம் அதிகபட்சமாக செலவிட வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. எனவே, அரசியல் கட்சிகளும். வேட்பாளர்களும், தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் நடைபெற எல்லா விதத்திலும் தேர்தல் ஆணையத்தோடு ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் கூறினார்.

* தேர்தல் அட்டவணை

வேட்புமனு தாக்கல் தொடக்கம்    ஜன.28

மனு தாக்கல் இறுதிநாள்    பிப்.4

வேட்பு மனுக்கள் ஆய்வு    பிப்.5

வேட்பு மனு திரும்ப பெறுதல்    பிப்.7

வாக்குப்பதிவு நாள்    பிப்.19

வாக்கு எண்ணிக்கை    பிப்.22

தேர்தல் நடவடிக்கை முடிவு    பிப்.24

தேர்வானவர்கள் பதவி ஏற்பு    மார்ச் 2

மறைமுகத் தேர்தல்    மார்ச் 4

* தேர்தல் டெபாசிட் தொகை

உள்ளாட்சிகள்    ஆதி திராவிடர் பழங்குடியினர்    பொது

பிரிவினர்

பேரூராட்சி கவுன்சிலர்    ரூ.500    ரூ.1000

நகராட்சிகவுன்சிலர்    ரூ.1000    ரூ.2000

மாநகராட்சி கவுன்சிலர்    ரூ.2000    ரூ.4000

* தேர்தல் செலவு

பேரூராட்சி வார்டு உறுப்பினர்    ரூ.17000

நகராட்சி வார்டு உறுப்பினர்(முதல் மற்றும்

2வது நிலை)    ரூ.34000

நகராட்சி வார்டு உறுப்பினர்(தேர்வுநிலை

மற்றும் சிறப்பு நிலை)    ரூ.85000

மாநகராட்சி வார்டு உறுப்பினர்(சென்னை தவிர)    ரூ.85000

மாநகராட்சி வார்டு உறுப்பினர்(சென்னை)    ரூ.90000

நேரடி தேர்தல் நடைபெறும் பதவியிடங்கள்

* 21 மாநகராட்சிகள்

* 138 நகராட்சிகள்

* மொத்தம் 649 உள்ளாட்சிகள்

* 1,374 கவுன்சிலர்கள்

* 7,621 கவுன்சிலர்கள் மொத்தம்

* 12,838 கவுன்சிலர்கள்

* 21 மாநகராட்சிகளின் வார்டு எண்ணிக்கை

மாநகராட்சியின்

பெயர்    மாவட்டத்தின்

பெயர்    வார்டு

எண்ணிக்கை

தாம்பரம்    செங்கல்பட்டு    70

சென்னை    சென்னை    200

கோயம்புத்தூர்    கோயம்புத்தூர்    100

கடலூர்    கடலூர்    45

திண்டுக்கல்    திண்டுக்கல்    48

ஈரோடு    ஈரோடு    60

காஞ்சிபுரம்    காஞ்சிபுரம்    51

நாகர்கோவில்    கன்னியாகுமரி    52

கரூர்    கரூர்    48

ஓசூர்    கிருஷ்ணகிரி    45

மதுரை    மதுரை    100

சேலம்    சேலம்    60

தஞ்சாவூர்    தஞ்சாவூர்    51

கும்பகோணம்    தஞ்சாவூர்    48

தூத்துக்குடி    தூத்துக்குடி    60

திருச்சிராப்பள்ளி    திருச்சிராப்பள்ளி    65

திருநெல்வேலி    திருநெல்வேலி    55

திருப்பூர்    திருப்பூர்    60

ஆவடி    திருவள்ளூர்    48

வேலூர்    வேலூர்    60

சிவகாசி    விருதுநகர்    48

* மறைமுக தேர்தல் பதவியிடங்கள்

மாநகராட்சி மேயர்    21

மாநகராட்சி துணை மேயர்    21

நகராட்சி மன்ற தலைவர்    138

நகராட்சி மன்ற துணை தலைவர்    138

பேரூராட்சி மன்ற தலைவர்    490

பேரூராட்சி மன்ற துணை தலைவர்    490

மொத்தம்    1,298

Related Stories: