பூதலூர்-தஞ்சை இடையே ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வல்லம்: தஞ்சை மாவட்டம் பூதலூர் மிக முக்கிய பகுதியாக உள்ளது. இப்பகுதி வழியாக பிரசித்தி பெற்ற பூண்டி பேராலயம், கல்லணை, திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வர சுவாமி கோயில் உட்பட பல பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் தினமும் சென்று வருகின்றனர். மேலும் தஞ்சையில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு பூதலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பைக்குகளில் தினமும் சென்று வருகின்றனர்.

ஊராட்சி சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சாலைகள் அகலப்படுத்தப்பட்டன. அந்த வகையில் தஞ்சை செல்லும் சாலையும் அகலப்படுத்தப்பட்டது. இந்த சாலையின் இடையில் உள்ள பாசன வாய்க்கால் பாலங்கள் அகலப்படுத்தப்பட வேண்டும் என்பதால் அந்த பகுதியில் மட்டும் சாலை போடப்படாமல் உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பைக்குகள், கார்கள், அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், நெல் கொள்முதல் நிலையத்திற்கு செல்லும் லாரிகள் என்று சென்று வருகின்றன.

கடந்த சில மாதங்களாக பாசன வாய்க்கால் அகலப்படுத்தப்படாமல் உள்ளதால் அந்த இடத்தில் சாலை ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. பணிகள் நடக்காமல் உள்ளது. இதனால் அந்த இடத்தை கடக்க பைக்கில் செல்பவர்கள் தடுமாறும் நிலை உள்ளது. மேலும் இரவு நேரத்தில் பணி முடிந்து பூதலூர், அய்யனாபுரம், ஒரத்தூர், ஆவாரம்பட்டி, விண்ணமங்லம் உட்பட பகுதிகளுக்கு செல்பவர்கள் தடுமாறி விழும் நிலை உள்ளது. பாசன வாய்க்கால் பணிகளை தொடங்காவிட்டாலும் அந்த பகுதியில் சாலையை உடன் சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: