பட்டுக்கோட்டை பகுதியில் 30 தெரு நாய்களை பிடித்தனர்: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் நாய் தொல்லை அதிகமாகி இருந்தது. சாலைகளில் செல்பவர்களை நாய்கள் துரத்துவது வாடிக்கையாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் தெருக்களில் விளையாடி கொண்டிருக்ககூடிய குழந்தைகளையும், தெரு நாய்கள் குறைத்து துரத்துவதால் குழந்தைகள் மிகுந்த அச்சத்தில் ஓடி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் குழந்தைகளையும் நாய்கள் கடித்து விடுகிறது. மேலும் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருக்கும்போது நாய்கள் குறுக்கே வருவதால் ஏராளமானோர் கீழே விழுந்து பலர் காயமடைந்து வருகின்றனர்.

பட்டுக்கோட்டை நகராட்சி பகுயில் சுமார் 500க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகிறது. எனவே சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து நாய்களை பிடிக்க வேண்டும் என்று தினகரன் நாளிதழிலில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று மாலை முதற்கட்டமாக பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான பேருந்துநிலையம், நாடியம்மன் கோயில் ரோடு, பழனியப்பன்தெரு, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டது.

அவற்றை இனப்பெருக்கத்தடை அறுவை சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் நாய் தொல்லை குறித்து படத்துடன் செய்தி வெளியிட்டு நாய்களை பிடிக்க மிகவும் உறுதுணையாக இருந்த தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம் என்றனர்.

Related Stories: