வேலூர் கோட்டை கோயிலில் தண்ணீர் புகுந்த விவகாரம்: அகழிநீர் வெளியேறும் மதகு திறக்கும் பணி பாதியில் கைவிடப்பட்டது

வேலூர்: வேலூர் கோட்டையில் இருந்து அகழிநீர் வெளியேறும் மதகு திறக்கும் பணியை பாதியில் கைவிட்ட தொல்லியல் துறை அதிகாரிகளால் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிகளவிலான மழை பெய்தது. அதேபோல், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களிலும் அதிகளவில் மழை பெய்ததால், வேலூர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதேபோல் வேலூர் கோட்டை அகழியிலும் நீர்மட்டம் உயர்ந்தது. இதன் காரணமாக அகழியில் இருந்து கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குள் அகழி நீர் புகுந்தது. இதையடுத்து, அகழியில் இருந்து தண்ணீர் வெளியேறும் மதகு எங்கு உள்ளது? என்று கண்டறிய முடியாமல் இருந்தது. இதையடுத்து தொல்லியல்துறை, மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து அகழியின் மதகை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அகழிநீர் வெளியேறும் மதகினை கண்டறிந்த நிலையில் அதனை எப்படி திறப்பது என்று தெரியவில்லை.

இதனால் கோட்டைக்குள் இருந்து தண்ணீர் வெளியேற்ற முடியாத நிலை தொடர்ந்தது. இதற்கிடையே தற்காலிக நடவடிக்கையாக, ேகாட்டையில் இருந்து பைப்மூலம் அகழிநீர் வெளியேற்றப்பட்டது. பின்னர், மழையும் நின்றதால் படிப்படியாக அகழியில் இருந்து நீர்மட்டம் குறையத்தொடங்கியது. ஆனால், அகழியில் இருந்து தண்ணீர் வெளியேற்ற மதகை திறப்பது எப்படி என்று கடைசி வரையில் கண்டறியாமல், அந்த பணியை அப்படியே விட்டு விட்டனர்.

தொல்லியல் துறை அதிகாரிகளும் இதனை கண்டுகொள்ளவில்லை. மீண்டும் ஒரு முறை அதிகளவில் மழை பெய்தால், கோட்டை கோயில் முழுவதும் தண்ணீரில் மிதக்கும். எனவே அதுபோன்ற பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க மதகை திறப்பது எப்படி? என்று கண்டறிந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மீன் மார்க்கெட்டில் இருந்து வெளியேறும் புழுக்கள்

ேவலூர் ேகாட்டை அகழிநீர் வெளியேறும் கிணறு, மீன்மார்க்கெட் அருகே உள்ளது. இதனால் மீன்மார்க்கெட்டில் இருந்து வெளியேறும் கழிவுகளும், இந்த அகழிநீர் வெளியேறும் கிணற்றில் விழுந்து, பின்னர் தான், வெளியேறுகிறது. இந்த கிணற்றில், மீன்மார்க்கெட்டில் இருந்து வெளியேறும் கழிவுகளில் அதிகளவிலான புழுக்கள் நெளிந்துகொண்டு செல்கிறது. இந்த புழுக்கள் கெட்டுப்போன மீன்களில் இருந்து வெளியேறுவதாக கூறப்படுகிறது.

எனவே மீன்மார்கெட் சுகாதாரமான முறையில் தான் இயங்குகிறதா? தரமான மீன்கள் தான் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்று சுகாதாரத்துறையினரும், உணவு பாதுகாப்புத்துறையினரும் ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: