பொன் மகள் வந்தாள்

நன்றி குங்குமம் தோழி

சமகாலத்தில் பெண் பிள்ளைகளுக்கு நிகழ்ந்த கொடூரங்களை பதிவு செய்துள்ள படம். கொரோனா தொற்றால் திரையரங்குகள் மூடப்படவே அமேஸான் பிரைமில் வெளியாகி இருக்கிறது. “வாழ்க்கையில யாருக்கும் எதுக்கும் பயப்படக்கூடாது.. துணிஞ்சு நில்... எதிர்த்துப் போராடு... என் சிங்கம்ல...” என ஜோதிகா சொல்லும்போது நாம் வெறும் செய்திகளாய் பார்த்துக் கடந்த ஆஷிஃபா, ஹாசினி, நந்தினி, சமீபத்தில் நெருப்பிட்டு கொளுத்தப்பட்ட ஜெயஸ்ரீ, பொள்ளாச்சியில் கதறக்கதற வன்முறைக்கு ஆளான பெண்கள் என அத்தனை சம்பவங்களும் ஞாபகத்தில் வரும். அந்தக் குழந்தைகளும் இப்படித்தானே கதறியிருப்பார்கள். அவர்களின் பெற்றோருக்கு எவ்வளவு ரணம் இருக்கும்.

அவற்றை வெறும் செய்தியாய் மட்டும் பார்த்த நமக்கு, நம் குழந்தைக்கு பாதிப்பில்லையே. எங்கோ? யாரோ ஒருவரது குழந்தைக்கு நடந்த அராஜகம்தானே என கடந்திருக்கலாம். ஆனால் திரைப்படத்தில்  வரும்  வெண்பாவின் வலியை அனைவராலும் உணர முடியும்.  காரணம், பெண்  குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமையை பற்றியதே படத்தின் மையக்கதை. 15  ஆண்டுகளுக்கு  முன்னர் ஊட்டியில் 5 குழந்தைகளை கடத்திக் கொன்றதாக ஜோதி என்ற  பெண் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்படுவதாய் படம் ஆரம்பிக்கிறது. குழந்தைகளைக் கடத்திவந்த பெண், அவளைப் பின் தொடர்வதால் கொல்லப்படும் இரு இளைஞர்கள் எனச் செல்லும் படத்தில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த என்கவுண்டர் பொய் என்று மீண்டும் அதே ஊரில் வசிக்கும் பெத்துராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். ஜோதி சார்பில் பெத்துராஜின் மகள் வெண்பா வழக்கறிஞராக வழக்கில் ஆஜராகிறார். விசாரணை சூடு பிடிக்க இறந்த ஜோதியின் உண்மையான கதை வெளிச்சத்திற்கு வருகிறது.

வழக்கில் வழக்கறிஞர் வெண்பா சொல்வதுபோல், “எங்கோ ஒரு இடத்தில் யாரோ ஒருவரால் அல்லது நமக்கு தெரிந்த நபர்களால் நம் பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு வரலாம். அப்போது நாம் கட்டி வைத்திருக்கும் பலரின் புனித பிம்பங்கள் உடஞ்சு சுக்கல் சுக்கலாக நொறுங்கும்.”  நம் வீட்டுப்  பெண் குழந்தைகளும் அப்படியான மனிதர்களிடம் சிக்கிவிடாமல் இருக்கவே நாம் பதட்டப்படுகிறோம். பல இடங்களில் வசனங்கள் சுளீர்.  “என்ன மேடம், வெண்பா வெண்பாவாப் பேசுறீங்க… லாயர் மாதிரி பேசுங்க” என எதிர்தரப்பு வழக்கறிஞர் ராஜரெத்தினம் சூடேற்றும் காட்சியில், வெண்பாவாக வரும் ஜோதிகா, சிறுமிகளுக்காகவும், பெண்களுக்காகவும் பேச நிறைய விசயங்கள் இருக்கு லாயர் சார்” என்பதும், அதைத் தொடரும் வசனங்களும் நம்மை ரொம்பவே சிந்திக்க வைக்கும் ரகம்.

‘பெண்கள் தனக்கு நேர்ந்த பாலியல் வக்கிரத்தை தைரியமாய் வெளியில் சொல்ல மாட்டார்கள் என்கிற பொதுபுத்தியினை கிரிமினல்கள் தங்களின் பாதுகாப்பு வளையமாய் கொண்டு தப்பிக்கிறார்கள்.

அவமானம்னு நாம மறைக்கும் சின்ன உண்மைல கூட எத்தனையோ கெட்டவங்க நல்லவங்க ஆயிடுறாங்க. அவர்கள் முகத்திரையை கிழிக்க, பாதிக்கப்பட்ட பெண்கள், தனக்கு நேர்ந்த அநியாயத்தை தைரியமாய் வெளியே சொல்ல முன்வர வேண்டும்’ என்கிற கருத்தையும் படம் அழுத்தமாய் விதைக்கிறது.

‘ஆண்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதை பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதைப்போல’ பெண்களை எப்படி பார்க்க வேண்டும், அவர்களிடத்தில் எப்படி பழக வேண்டும் என்பதையும் ஆண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டிய முக்கியத்துவத்தையும் படம் பேசுகிறது. நடிகர் சூர்யா தயாரிப்பில், நடிகை ஜோதிகா இரட்டை வேடம் ஏற்று ஜோதியாகவும் வெண்பாவாகவும் நடித்திருக்கிறார். ஜே.ஜே.ப்ரெட்ரிக் இயக்கத்தில்  நடிகர் பார்த்திபன்,  பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். நேரடியாக  ஓடிடி தளத்தில் வெளியான முதல் படம் என்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு. கட்டாயம் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க வேண்டிய படம்.

தொகுப்பு: ஜி.சிவக்குமார்

Related Stories: