இந்திய அணிக்கு இது தற்காலிக பின்னடைவு தான்: சாஸ்திரி சொல்கிறார்

மஸ்கட்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்த நிலையில், ‘இந்திய அணிக்கு இது தற்காலிக பின்னடைவு தான். விரைவில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும்’ என்று முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயனம் மேற்கொண்ட இந்திய அணி, முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 1-2 என தோல்வியை சந்தித்தது. அடுத்து நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் ஹாட்ரிக் தோல்வியுடன் 0-3 என ஒயிட்வாஷ் ஆனது.

இது குறித்து ரவி சாஸ்திரி நேற்று கூறியதாவது: ஒரு தொடரில் தோற்றதுமே கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி விடுகிறீர்கள். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க முடியாது. விளையாட்டில் வெற்றியும் இருக்கும்... தோல்வியும் இருக்கும். இந்திய அணியின் தரம் திடீரென எப்படி தாழ்ந்து போகும்? ஐந்து ஆண்டுகளாக உலகின் நமப்ர் 1 அணியாக இருந்திருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த காலகட்டத்தில் அணியின் வெற்றி விகிதம் 65% ஆக இருக்கும்போது கவலை எதற்கு? உண்மையில், எதிரணிகள் தான் கவலைப்பட வேண்டும்.

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது, கோஹ்லியின் தனிப்பட்ட முடிவு. அதற்கு மதிப்பளிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் உள்ளது. இதற்கு முன்பு கூட சச்சின், கவாஸ்கர், தோனி போன்ற மிகச்சிறந்த வீரர்கள் தங்களின் ஆட்டத்தில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இப்போது கோஹ்லி அதை செய்துள்ளார். தென் ஆப்ரிக்க தொடரில் நடந்த ஆட்டங்களை நான் பார்க்காவிட்டாலும், கோஹ்லியிடம் மிகப் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது என்றே நினைக்கிறேன்.

Related Stories: