பள்ளிக்கல்வி துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி டியூஷன் வாத்தியார் அதிரடி கைது: போலி பணி நியமன ஆணை வழங்கியது அம்பலம்; அரசு முத்திரைகள், பிரின்டிங் மெஷின் பறிமுதல்

சென்னை: பள்ளிக்கல்வி துறை இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் பணி வாங்கி தருவதாக கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று, போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்த டியூஷன் வாத்தியாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி பணிநியமன ஆணைகள், அரசு முத்திரை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தாம்பரம் பகுதியை சேர்ந்த பாலசுப்புலட்சுமி என்பவருக்கு, ராயப்பேட்டை பி.வி.கோயில் தெருவை சேர்ந்த டியூஷன் வாத்தியார் ராஜேந்திரன் (30) என்பவரின் நட்பு கிடைத்தது. அப்போது, பள்ளிக்கல்வி துறை இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக பாலசுப்புலட்சுமியிடம் உறுதியளித்த ராஜேந்திரன், அதற்காக ரூ.2 லட்சம் கேட்டுள்ளார். அதன்படி, பாலசுப்புலட்சுமி கடந்த 6 மாதங்களுக்கு முன், முன்பணமாக ரூ.30 ஆயிரத்தை ராஜேந்திரனிடம் கொடுத்துள்ளார்.

பிறகு பள்ளிக்கல்வி துறை இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளராக நியமிக்கப்பட்டதற்கான பணி நியமன ஆணையை ராஜேந்திரன், பாலசுப்புலட்சுமியிடம் கொடுத்துள்ளார். பிறகு மீதமுள்ள பணத்திற்காக பாலசுப்புலட்சுமியின் அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, ராஜேந்திரன் கொடுத்த பணி நியமன ஆணையை பள்ளிக்கல்வி துறை இயக்குநர் அலுவலகத்திற்கு பாலசுப்புலட்சுமி கொண்டு சென்றபோது, அது போலியானது என தெரியவந்தது.

இதுகுறித்து பாலசுப்புலட்சுமியின் சகோதரன் வெங்கடேசன், ராஜேந்திரனிடம் கேட்டபோது, பள்ளிக்கல்வி துறை இயக்குநர் அலுவலகத்திற்கு வந்து, உங்கள் சகோதரி கொடுத்த ரூ.30 ஆயிரத்தை பெற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளார். இதுபற்றி பாலசுப்புலட்சுமி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நேற்று முன்தினம், வெங்கடேசனிடம் ரூ.30 ஆயிரத்தை ராஜேந்திரன் திருப்பி கொடுத்தபோது, அங்கு மறைந்து இருந்த போலீசார் ராஜேந்திரனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விசாரணையில், டியூசன் வாத்தியாரான ராஜேந்திரன், தேனாம்பேட்டையில் உள்ள மகளிர் கல்லூரி அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருவதும், அந்த கடையில் போலி பணி நியமன ஆணைகளை தயாரித்து, அதன் மூலம் பலரிடம் பணம் பெற்று போலியான பணி நியமன ஆணைகளை வழங்கி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதும்  தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர் ஜெராக்ஸ் கடையில் போலீசார் அதிரடியாக சோதனை செய்து, போலி பணி நியமன ஆணைகள், அதை தயாரிக்க பயன்படுத்திய அரசு முத்திரைகள், பிரின்டிங் மெஷின் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவரிடம் மோசடி தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: