முதல் பெண் பாடி பில்டர்

நன்றி குங்குமம் தோழி

ரூபி ப்யூட்டி

பெண் மென்மையானவள், நளினமானவள், கொடியிடையால் என்று வர்ணிக்கப்பட, அதையெல்லாம் மனதில் ஏற்றிக்கொள்ளாமல், கடுமையான பயிற்சிகளால் தன் உடல் அமைப்பையே மாற்றி அமைத்து, தமிழகத்தின் முதல் பெண் பாடி பில்டர் என்ற பெருமையோடு மிஸ் வேர்ல்ட் பட்டத்தையும் பெற்றிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பாடி பில்டர் ரூபி ப்யூட்டி.

எனக்குத் திருமணமாகி எனது மகனின் இரண்டரை வயது வரை நான் ஹவுஸ் வொய்ஃப் எனச் சொல்லும் நிலையில்தான் இருந்தேன். அப்போது என்னிடம் இருந்த கல்விச் சான்றிதழ் பி.எ.பி.எட். மட்டுமே. என் மகன் வளர்ந்து பள்ளிக்குச் சென்றதும், நானும் ஆசிரியர் பணிக்குச் செல்ல வேண்டும் என்பதே அப்போதைய எனது விருப்பமாய் இருந்தது. ஆனால் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட சவால்கள் எதிர் நீச்சல் போட எனக்குக் கற்றுத்தர இன்று ‘மிஸ் வேர்ல்ட்’ பட்டத்தோடு, தமிழ்நாட்டின் முதல் பெண் ‘பாடி பில்டர்’ ரூபி ப்யூட்டி எனச் சொல்லும் அளவிற்கு பிரபலம் என்கிறார் ரூபி கண்ணை மூடி தான் கடந்து வந்த மேடு பள்ளங்களை அசைபோட்டபடி.

திருமணமாகி தாய்மை அடைந்தபோது  45 கிலோ எடையில் இருந்த நான் 85 கிலோவாக எடை அதிகரிக்க ரொம்பவும் குண்டான தோற்றத்திற்கு மாறினேன். குழந்தை பிறந்த பிறகு ஏழு கிலோ மட்டுமே குறைந்து 78 கிலோ எடையில் இருந்தேன். என் தோற்றத்தைப் பார்த்த என் கணவர் என்னை ஒதுக்கத் தொடங்கினார். குடும்பத்தையும் அவர் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவரின் தொழில் வளர்ச்சிக்காக  என்னிடம் இருந்த நகை, பணம், என் சேமிப்பு என எல்லாவற்றையும் கொடுத்திருந்தேன். அவரின் தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு அவரிடம் இருந்து  எந்த வருமானமும் வீட்டுக்கு வரவில்லை. அவர் என்னதான் செய்துகொண்டிருக்கிறார் என்பதையும் எனக்குத் தெரியப்படுத்துவதில்லை.

எங்களுக்குள் பிரச்சனை பெரிதாகிக்கொண்டே இருக்க என் வாழ்க்கையில் அந்த காலகட்டங்கள் ரொம்பவே கொடுமையாக இருந்தது. மனரீதியாக நான் மிகப் பெரும் போராட்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. கையிறுப்பு எதுவும் இல்லாத நிலையில் என் குழந்தையோடு தெருவுக்கு வந்துவிடுவேனோ என்ற பயம் என்னைத் தொற்றியது. வாழ்க்கையில் நம்பிக்கை எத்தனை முக்கியமான விசயம். அதுவும் கணவன்- மனைவி உறவுக்குள், நம்பிக்கை ஆணிவேராய் ஆழமாக வேரூண்ட வேண்டும். அது இல்லாத என் வாழ்க்கை ரொம்பவே போராட்டமாக நகர்ந்தது. எங்கள் பிரச்சனையால் குழந்தையின் மனநிலை பாதிக்கப்பட்டு

விடக் கூடாது என இருவரும் மியூட்சுவலாக பிரிந்தோம்.

திருமணத்திற்கு முன்புவரை நான் 90 ஆயிரம் சம்பளத்தில் ஏர் ஹோஸ்டராய் பணியில் இருந்தேன். ஆங்கிலம் எனக்கு சரளமாய் வர, தொடர்ந்து கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ்வாகவும் பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய பெர்சனாலிட்டியும் பார்க்க பளீரென்று இருக்கும். கடந்துபோன என் வாழ்க்கை எனக்குள் வெறியூட்ட, எனக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்தும் முயற்சியில், என் பழைய தோற்றத்தை மீட்கும் முயற்சியினைக் கையில் எடுத்தேன். என் உடல் எடையைக் குறைக்கும் வேலையில் தீவிரமாய் களமிறங்கினேன். உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றி, காலை மாலை எனத் தொடர்ந்து வெறித்தனமாய் நடைபயிற்சி செய்ததில் நான்கே மாதத்தில் 52 கிலோவிற்குள் வந்தேன். அதைத் தொடர்ந்து ஜிம்மிற்கும் சென்று பயிற்சி செய்யத் தொடங்கினேன்.  அப்போதைய ஜிம்மில் டிரெயினராக பணியாற்றலாம் என்பது என் எண்ணம் மட்டுமே.

பயிற்சியில் நான் காட்டிய தீவிரத்தைக் கண்ட பயிற்சியாளர்,  நீங்கள் ஏன் வெயிட் லிஃப்டிங் மற்றும் பவர் லிஃப்டிங் செய்யக் கூடாது எனக் கேட்டார்? என் மூளைக்குள் பல்ப் எரிய ஜிம் குறித்த தேடலில் இறங்கி நிறைய தெரிந்து கொண்டேன். ஆங்கில நாளிதழ் ஒன்றில் தீபிகா சௌத்ரி எனும் பாடி பில்டரின் நேர்காணலைப் படிக்க நேர்ந்தது. பெண்களுக்கும் ‘பாடி பில்டிங்’ இருப்பது எனக்கு தெரிய வந்தது. வடநாட்டில் நிறையப் பெண்கள் பாடி பில்டிங் செய்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பெண்கள் யாரும் பாடி பில்டராக அடையாளப் படுத்தப்படவில்லை என்பதும் தெரிய வர, நான் ஏன் அதை முயற்சிக்கக் கூடாது என யோசித்ததோடு, அதற்கான வேலைகளில் சட்டென இறங்கிவிட்டேன்.

பெண்கள் பாடி பில்டிங் செய்வது ரொம்பவே கஷ்டம். அவர்களுக்கு எப்படி பயிற்சி தரவேண்டும் என்பது கூட இங்கு யாருக்கும் தெரியாது என்று என்னுடைய ஜிம் பயிற்சியாளர் தெரிவிக்க, நானோ தமிழ்நாட்டில் யாருமே செய்யாத ஒன்றை நான் கட்டாயமாகச் செய்வேன் என தீர்க்கம் காட்டினேன். 2015ல் ஜிம்மிற்கு செல்லத் தொடங்கிய நான் 2017ல் பாடி பில்டிங் பயிற்சியை ஆரம்பித்தேன். எனக்கான பயிற்சியாளராக கார்த்திக் என்பவர் இருந்தார். ஒரு வருட தீவிரப் பயிற்சிக்குப் பின் 2018 பிப்ரவரியில் முதல் பாடி பில்டர் போட்டி அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்தது. என் முதல் தங்க வேட்டை அங்கே தொடங்கியது. அடுத்து சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த பாடி பில்டர் போட்டியிலும் தங்கம் கிடைக்க மிஸ் சென்னை பட்டத்தை வென்றேன்.

தொடர்ந்து ராசிபுரத்தில் நிகழ்ந்த மிஸ்டர் அண்ட் மிஸ் இந்தியா நிகழ்ச்சியிலும் தங்கம் வென்றேன். அப்போது நான் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ‘பிரிக்கேட் பிட்னஸ்’ சென்டரின் பிரான்ட் அம்பாஸிட்டர். அதைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற மிஸ் வேர்ல்ட் போட்டியிலும் பங்கேற்று டைட்டிலைப் கைப்பற்ற நான் பிரபலமானேன். உலகம் என்னைத் திரும்பிப் பார்க்கத் தொடங்கியது. ஊடகங்களிலும் என் நேர்காணல்கள் வெளியானது. தொடர்ந்து என் வெற்றிச் செய்திகள் வெளிவரத் தொடங்கின. பெண்களுக்கு மஸில்ஸ் வர வைப்பது ஆண்களைப்போல் அத்தனை எளிதல்ல. மஸில்ஸ் பில்ட் செய்ய குறைந்தது 2 ஆண்டுகள் உணவு பழக்க வழக்கத்தோடு கடுமையாக உழைப்பும் இருக்க வேண்டும்.  

காலை மாலை ஜாக்கிங், வாக்கிங், கார்டியா பயிற்சி, வெயிட் ரீடிங், செஸ்ட் ஒர்க் அவுட், ஆர்ம்ஸ் ஒர்க் அவுட், நெக் ஒர்க் அவுட் என ஒவ்வொரு நாளும் மஸில்ஸ் பில்டப் செய்ய ஆண்களைவிட மூன்று மடங்கு அதிகமாகவே உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்றவர், என்னைப் பார்க்கும்போதே ஒரு மேன்லினஸோடு என் உடலில் மஸில்ஸ்கள் நன்றாகவே வெளியில் தெரியும். நான் மேன்லியாகத் தெரிகிறேன் என்பதையெல்லாம் ஒருநாளும் மனதில் ஏற்றிக்கொள்ளவில்லை. ஆனாலும் தினம் தினம் ஆண்களிடம் இருந்து நிறைய கமெண்டுகளை கடக்க வேண்டியதிருந்தது. சாதித்துக் காட்டும்வரை கேலியும் கிண்டலையும் கடந்துதான் ஆக வேண்டும் என நான் அதற்கெல்லாம் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. நம் மனம் சொல்வதை மைன்ட் கேட்க, நமது மூளைதான் நமக்கான மெயின் வெப்பன் என்கிறார்.

அதிகாலை 4.30 மணிக்கு என் பொழுது விடிந்தால் ஒரு மணி நேரம் வாக்கிங். பிறகு வெயிட் லிஃப்டிங், அதைத் தொடர்ந்து என்னுடைய ஜும்பா இன்ஸ்டிரக்டர் வேலை, அதற்கு நடுவில் என் குழந்தைக்கும் நேரம் ஒதுக்குவது, மாலையில் மீண்டும் பயிற்சிக்காக ஜிம் செல்வது என இரவு நான் படுக்கைக்குச் செல்ல 11.30 ஆகிவிடும். அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த கசப்பான பக்கங்களை திரும்பிப் பார்ப்பேன். ரோட்டில் நீ நடந்துபோனால் உன்னை யாருக்குமே தெரியாது என்று என் கணவர் ஏளனப்படுத்தியது நினைவில் வரும் என்றவர், தான் பெற்ற டைட்டில்களையும், வாங்கிக் குவித்த விருதுகளையும் கண்களால் தழுவியவாரே விடை கொடுத்தார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: