ரிடிவிட் செய்தவர்களுக்கு ரூ.6.5 லட்சம் பரிசு

நன்றி குங்குமம் தோழி

பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு செய்தி வெளியானால் அதே செய்தி முகநூல், வாட்ஸப், டிவிட்டர் என எல்லா வலைத்தளங்களிலும் ஒரு ரவுண்ட் வரும். ஒருவர் அனுப்பிய செய்திகளுக்கு நாம் லைக் போடுவோம் அல்லது அதற்கு கமென்ட் மற்றும் ரிடிவிட் செய்வது வழக்கம். சிலர் நமக்கு ஏன் வம்பு என்று எந்த ஒரு கமென்ட்களும் போடாமல் லைக் அல்லது எமோஜி சிம்பல்களை ேபாட்டுவிட்டு நகர்ந்து விடுபவர்கள் தான் அதிகம். ஆனால் ஜப்பானில் தொழிலதிபர் ஒருவர் தான் டிவிட் செய்த பக்கத்தில் யாரேனும் ரிடிவிட் செய்தால் பரிசு என்று அறிவித்தது மட்டும் இல்லாமல், அதனை பணமாக அளித்துள்ளார் என்பது தான் இங்கே ஹைலைட்டே.

ஆயிரம் பத்தாயிரம் என்றில்லை கோடிக்கணக்கில் பரிசு அளித்துள்ளார், ஜப்பானை சேர்ந்த ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான சோசோ (zozo) உரிமையாளர் யுசகு மேசவா என்பவர். ஜப்பானில் மிகப் பெரிய பணக்காரர்களில் இவரும் ஒருவர். இவர் கொஞ்சம் வித்தியாசமானவர் மட்டுமில்லாமல், அவர் செய்யும் காரியங்களும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்த வைக்கும். இப்போது இவர் எல்லாரையும் பரிசுகள் வழங்கி ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். பணம் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? மனித வாழ்வில் பணத்தின் தாக்கம் என்ன போன்ற பல வித்தியாசமான அணுகுமுறைகளை கையாண்டவர். மேலும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நிலவுக்கு செல்ல முன்பதிவு செய்துள்ள தனிநபர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தன்று தனது டிவிட்டர் பதிவை ரிடிவிட் செய்த நபர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.6.5 லட்சத்தை அள்ளி வழங்கியுள்ளார். இதற்காக அவர் கடந்த ஜனவரி 5ம் தேதி பதிவிட்ட டிவிட்டர் பதிவை ரிடிவிட் செய்பவருக்கு பரிசு வழங்க முடிவு எடுத்தார். இவ்வாறு தனது பதிவை ரிடிவிட் செய்தவர்களில் 1000 பேரை தேர்ந்தெடுத்தார். அவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை புத்தாண்டு பரிசாக கொடுத்துள்ளார் யுசகு மேசவா.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Related Stories: