பட்ஜெட் 2020

நன்றி குங்குமம் தோழி

“பெண்களை பாதுகாப்போம், பெண்களை படிக்க வைப்போம் என்கிற மத்திய அரசின் திட்டத்தால், பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்து நிலை படிப்புகளிலும் ஆண்களை விட பெண்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பெண்களுக்கான பட்ஜெட் தாக்கல் செய்த போது பெருமிதம் தெரிவித்தார்.  மேலும், ‘‘பட்ஜெட்டில், கிராமப்புற தானிய சேமிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி கிராமங்கள் தோறும் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். தானியலட்சுமி என்கிற இத்திட்டத்தில், தானிய சேமிப்பு பணியில் சுய உதவிக்குழு பெண்கள் ஈடுபடுத்தப்படுவர்” என்று கூறினார்.

* “போஸான் அபியான்” என்ற ஊட்டச்சத்து திட்டம் 2017, 18 ஆம் நிதி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை நினைவுக்கூர்ந்த நிர்மலா சீத்தாராமன், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள், பதின்பருவ பெண்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு ஊட்டச்சத்து அளிக்கும் திட்டத்திற்காக ரூ.35,600 கோடி ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.

* சமூக நலத்திட்டங்கள் மற்றும் ஊட்டச்சத்து திட்டங்கள் ஆகியவற்றுக்காக கடந்த பட்ஜெட்டில் ரூ. 3,891 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.4,036 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* வன்முறை, பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு மையங்கள் (ஒன் ஸ்டாப் சென்டர்) திட்டத்துக்கு ரூ. 385 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட ரூ. 180 கோடி அதிகமாகும்.

* கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் திட்டத்துக்கு ரூ. 2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், கர்ப்பிணிகளுக்கு ரூ. 6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

* ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ. 1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’  திட்டத்துக்கு ரூ. 220 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* ஆரம்பக் கல்வியில், மாணவர்கள் சேர்க்கை, 89.28 சதவீதமாகவும், மாணவியர் சேர்க்கை, 94.32 சதவீதமாகவும் உள்ளது. இடைநிலை மற்றும் மேல்நிலை கல்விகளிலும், மாணவர்களை விட மாணவியர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

* பணி செய்யும் பெண்கள் தங்கும் விடுதிகள், குழந்தைகள் கவனிப்பு மையங்கள் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* பெண்களின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட ‘உஜ்வாலா’  திட்டத்துக்கு ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக ரூ. 1,163 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* பெண்கள் நல திட்டங்களுக்காக, 28, 600 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

* தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் நலனுக்காக, 85 ஆயிரம் கோடி ரூபாயும், பழங்குடியின மக்கள் நலனுக்காக, 53 ஆயிரத்து, 700 கோடி ரூபாயும் ஒதுக்கப்படுகிறது.

* மொத்தமாக, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ரூ.30,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டின்போது, இந்த அமைச்சகத்துக்கு ரூ. 26,184 கோடி ஒதுக்கப்பட்டது. அதை ஒப்பிடும்போது தற்போது 14 சதவீதம் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

* இதனோடு, “பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மாற்றி பரிந்துரை செய்ய, புதிய குழு அமைக்கப்படும். அதன்படி, 18 வயதில் இருந்து திருமண வயது உயர்த்தப்படும் ” என்று இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு: அன்னம் அரசு

Related Stories: