குழந்தைகளுக்கு வீரியத்தை உண்டாக்கும் கலை!

நன்றி குங்குமம் தோழி

“கல்வி பற்றிய விழிப்புணர்வு ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. அதனால் எனக்கு தெரிந்த சில விஷயங்களை தெரியாதவர்களுக்கும் எடுத்துச் செல்கிறேன்” என்று கூறும் திருச்செங்கோட்டை பூர்விகமாக கொண்ட பர்வதவர்த்தினி ஈஸ்வரன், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சமூக சார்ந்த பல வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். ‘‘இளங்கலை ஃபேஷன் டெக்னாலஜி திருச்செங்கோட்டிலும், பாட்னாவில் உள்ள National Institute Of Fashion Technology-ல் முதுகலை பட்டமும் பெற்றேன். படிப்பிற்கு பின் நான்கு மாதம் மட்டும் வேலை பார்த்தேன். தொடர்ந்து ஒரே வேலையை செய்வதில் சுவாரசியம் இல்லாத காரணத்தால் சமூகம் சார்ந்து வெவ்வேறு வேலைகள் பார்க்க தொடங்கினேன்.

அதன்படி நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எவ்வாறு கைவினை பொருட்கள் செய்வது, ஈக்கோ ஃபிரண்ட்லியாக எந்த மாதிரி

யான பொருட்களை உபயோகிக்கலாம் போன்றவைகளை செய்தேன். ‘கைபுனைவு’ என்கிற பெயரில் பட்டுக்கூட்டை வைத்து கம்மல், கழுத்து அணிகலன்கள் தயாரித்து அதை இணையம் மூலமாக விற்பனை செய்ததோடு, டெரகோட்டா ஜுவல்லரி, பேப்பர் குவில்லிங் நகைகள் செய்யும்

பயிற்சியை குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் வழங்கினேன். எந்த ஒரு பொருளும் குப்பை கிடையாது. எதையும் கலைப்பொருளாக மாற்ற முடியும். கலைநயத்தோடு அதை நாம் பார்க்கணும். நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி எறியப்படுகிற குப்பைப் பொருட்களிலிருந்தே ஏராளமான கலைப் பொருட்களை செய்ய முடியும்.

இயற்கையாகக் கிடைக்கக் கூடிய சிப்பி, சங்கு, மரப்பட்டைகள், பூக்கள் ஆகியவற்றைக் கொண்டு என்னென்ன மாதிரியான கலைப் பொருட்கள் செய்யலாம் என்கிற பயிற்சியை கொடுத்திருக்கிறேன். எனக்குத் தெரிஞ்ச கலை வேலைப்பாடுகளை பரவலாக மக்களுக்கும் எடுத்து செல்ல  வேண்டுமென்கிற நோக்க்கில் ‘Art In Life With Varthu’ங்குற -யூ-டியூப் சேனலை ஆரம்பித்தேன்” என்று கூறும் பர்வதவர்த்தினிக்கு இது போன்ற வேலைகளின் மீது ஆர்வம் வருவதற்கான காரணங்களை பகிர்ந்தார். ‘‘பள்ளி படிப்புகளை அரசுப் பள்ளியில் படித்தேன். அங்கு கலை சம்மந்தமான எக்ஸ்போசர் கிடையாது. கல்லூரி முடித்த பின் தான் கலைக்கென்று தனியாக பாடம் இருக்கிறது என்று தெரிந்தது.

இது பற்றி தெரியும் போது என் வயது 24. சரி படிப்புக்கு என்ன காலம் நேரம் என்று கல்லூரியில் போய் சேரலாம் என்று நினைத்த போது, சேர்க்கைக்கான வயது முடிந்துவிட்டது. இதற்கெல்லாம் படிப்பு இருக்கா, கல்லூரி இருக்கிறதா என்று இன்றுமே பலருக்கு தெரியாது’’ என்றவர் கலை சார்ந்து தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இயங்கி வருகிறார். ‘‘தனியார் பள்ளியில் படிப்பவர்களுக்கும், அப்பர் மிடில் கிளாசில் இருப்பவர்களுக்கும் இதை பற்றிய விழிப்புணர்வு ஓரளவுக்கு இருக்கிறது. எனவே இது பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற நோக்கில் அரசுப் பள்ளிகளுடன் இணைந்து, அங்குள்ள குழந்தைகளுக்கு கலை சார்ந்த விஷயங்கள் மற்றும் ஓவியமும் சொல்லி கொடுத்து வருகிறேன்.

அந்த துறையில் யாருக்கெல்லாம் அதீத ஆர்வம் இருக்கிறதோ, அவர்களுக்கு இதற்கான பாதையில் வழிகாட்டியாகவும் உள்ளேன். 2018 ஆம் ஆண்டில் ஆரம்பித்த போது அகரம் ஃபவுண்டேஷன், அரசுப் பள்ளி சுவர்களில் சுவரோவியம் வரைவதற்கு உதவினார்கள். அதை என் ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததும் என்னுடன் படித்த நண்பர்கள் மற்றும் சிலர் உதவ முன் வந்தார்கள். அதில் குறிப்பாக மனோகரன், ராம் மோகனலிங்கம், விஜயலட்சுமி, ஷாகுல் ஹமித் காதர் மீரான், வேம்பு இவர்கள் ஸ்பான்சர் செய்யவில்லை என்றால் என்னால் முன்னெடுத்திருக்க முடியாது. இதை எவ்வளவு பேர் செய்வார்கள் என்று தெரியவில்லை. நான் பெரிதாக யாரிடமும் எதிர்பார்க்கவில்லை. அவர்களிடமிருந்து கேட்பது பெயின்ட்-பிரஷ் மட்டும் தான்.

அந்த பெயின்ட்-பிரஷ்ஷோடு பள்ளிகளில் சென்று ஒரு நாள் கற்றுக் கொடுப்பேன். அடுத்த நாள் அவுட்லைன் மட்டும் போட்டு கொடுத்தால், அந்த மாணவர்களே அதை பூர்த்தி செய்வார்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சில ஆசிரியர்களும், எப்போதும் நாங்க புக்கும் கையுமா இருக்கோம், எங்களுக்கும் இது ஒரு மனமாற்றத்திற்கு வழி வகுக்கிறதென்று ஆர்வமாக கலந்து கொள்வார்கள். தமிழகம் முழுவதும் ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலரின் தூண்டுதலால் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த முயற்சியினை அரசு ஊக்குவித்து, கலை சம்மந்தமான கல்வியும் கொடுக்க முன்வர வேண்டும்” என்றார்.

“குழந்தைகளிடம் போய் நேரம் செலவழிக்கும் போது, ‘அக்கா நீங்க என்ன படிச்சிருக்கீங்க, இதெல்லாம் எப்படி பண்ணணும்…’ என்று அடுக்கடுக்கான

கேள்விகள் கேட்கையில் அதற்கான பதில் சொல்வதால் இந்த துறைகள் பற்றியும், வெறும் பரிட்சைக்கான படிப்பை தாண்டி மற்றதெல்லாம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்கிறார்கள்” என்று கூறும் பர்வதவர்த்தினி, “கலை எது மாதிரியான வீரியத்தை குழந்தைகளுக்குள்

கொண்டு செல்கிறது, அது என்னவாக மாறுகிறது என்பதை புரிந்திருப்பவர்கள் குறைவானவர்களே” என்கிறார். இது போன்ற வேலைகள் செய்வதால் தனக்கு கிடைக்கும் மனநிறைவு பற்றி பகிர்ந்து கொள்ளும் பர்வதவர்த்தினி, “படிக்கும் போது, படிப்பை தாண்டி மற்றவைகள் பற்றி எனக்கு சொல்வதற்கு ஆட்கள் இல்லை.

நான் சுயமாக கற்றதை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் போது, அவர்களும் தனித்தன்மையாக மாறுகிறார்கள். இது மனப்பாட கல்வி கிடையாது. ஆனால் கற்றுக் கொடுத்தால் அதை ஆர்வமாக தெரிந்து கொள்ள முன் வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் கற்றுக் கொடுக்க செல்லும் போது, அவர்கள் கேட்கும் கேள்விகள், ‘மறுபடியும் எப்போ வருவீங்க? உங்களுக்கு வேற என்ன தெரியும்?, எங்களுக்கு என்ன சொல்லி தருவீங்க? என்பது தான். சிலர் கற்றதோடு நிற்காமல் அதனை தங்கள் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிசாகவும் செயல்முறை படுத்துகிறார்கள். ஆறாம் வகுப்புக்கு மேலேயே ஓவிய ஆசிரியர் என்கிற போஸ்டிங் இருக்கிறது.

அதில் எவ்வளவு பேர் தங்களுடைய பொறுப்பை வெளிப்படுத்துகிறார்கள் என்பது கேள்விக்குறியாகத்தான் இன்றும் உள்ளது. பாடம் எடுக்கும் ஆசிரியர்களுமே கூட எப்போதும் படிப்பு, புத்தகம், மதிப்பெண் என்றிருப்பதைத் தாண்டி அந்த பசங்களுக்கு மற்ற விஷயங்களையும் சொல்லி தந்தால்,  இன்றில்லை என்றாலும் என்றாவது ஒருநாள் அவர்களுக்கு பயன்படும். நான் பள்ளி படிக்கும் போது பயின்ற கோலமாகட்டும், என்னுடைய எழுத்தாகட்டும்... உண்மையிலேயே அதை வைத்து இன்று சம்பாதித்து கொண்டிருக்கிறேன். ஈக்கோ ஃபிரண்ட்லி வெட்டிங் பண்ணும் போது இது பயன்படுகிறது. லட்சங்களில் தொடங்கி கோடிகள் வரைக்கும் திருமண மணமேடை அலங்காரத்துக்கு மட்டுமே திருமணத்தில் அவ்வளவு முக்கியத்துவம் தருவது வழக்கமாக உள்ளது.

பொதுவாக நம் மண் சாராத மலர்களைக் கொண்டுதான் மேடை அலங்காரம் செய்வார்கள். ஆனால், நமது மண் சார்ந்த பொருட்களை வைத்தும் பாரம்பரியமான முறையில் மேடை அலங்காரம் செய்றதை விரும்புபவர்களும் உண்டு. மண் பானை, செங்கல் பொடி, மரத்தூள், பெயர் எழுதுறது, தென்னங்குருத்தில் பிள்ளையார் செய்வது, தோரணங்கள் கட்டுவது, பூ அலங்காரம், பூவில் கோலம் போடுதல் என பாரம்பரியமாகவும் அதே சமயம் சூழலுக்கு இசைவாகவும் மேடை அலங்காரம் செய்து கொடுக்கிறோம்’’ என்றவர் ஓவியக்கலை மட்டுமில்லாமல் காலிகிராஃபி (caligraphy) மற்றும் ரங்கோலி போடுவது குறித்து பயிற்சி அளித்து வருகிறார்.

‘‘காலிகிராஃபி டெக்கரேட்டிங் ஸ்டைல் ஆஃப் ரைட்டிங் இருக்கிறதென்பதெல்லாம் நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்புதான் தெரிந்தது. இதன் எழுத்துரு உருவாக்கப் பயிற்சியும் கொடுக்கிறேன். 360 டிகிரியில் வட்டமாக வரையப்படும் ஓவியம் மண்டாலா. இது ரங்கோலி போன்று ஆன்மிகத்துடன் தொடர்புடைய ஓவியக் கலை. அடுத்ததா ‘ஜென்டேங்கிள்’ மூளைக்குப் பயிற்சி கொடுக்கும் ஓவியக்கலை. இதனை வரைவதன் மூலம் மனது ஒருநிலைப்படும். அதே போல் ஹேண்ட் எம்பிராஸ்டிங்கிற்கு எப்போதும் தனி இடம் இருக்கிறது. கற்றுக் கொண்டால் ஏதும் வீண் போகாது” என்று கூறும் பர்வதவர்த்தினி கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி பேசினார்.

“ஒருவரின் திறமையை அவர் பள்ளி அல்லது கல்லூரியில் எடுக்கும் மதிப்பெண்கள் தான் நிர்ணயிக்கிறது. நிறைய மதிப்பெண் வாங்கினால் தான் அடுத்து படிக்க முடியும். அப்போது தான் நல்ல வேலை மற்றும் சம்பளம் கிடைக்கும் என்கிற அளவில்தான் கல்வி இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள் இருந்த சுயமாக சிந்திக்கும் திறன், சுய ஒழுக்கம் இதெல்லாம் ரொம்பவே குறைந்து கொண்டு வருகிறது. இந்த தலைமுறையில் ஏறக்குறைய எல்லோருமே படித்தவர்களாகத்தான் இருக்காங்க. ஆனால், அதில் பலர் ஒரு பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், வங்கி, போஸ்ட் ஆபீஸ்க்கு போனால் செல்லான், செக் புக் எப்படி பூர்த்தி செய்வது, ரயில் நிலையங்களுக்கு போனால் டிக்கெட் எடுப்பது  போன்ற விஷயங்கள் தெரியாதவர்களாகத்தான் உள்ளனர். மதிப்ெபண் எடுப்பது மட்டுமே கல்வியல்ல.

இந்த கல்வியோடு சூழல் பாதுகாப்பு பற்றியும் கற்றுத் தருவது இன்றைய தலைமுறையினருக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது.  வீட்டில் இட்லி வேண்டுமென்றால் கூட மாவு, பாக்கெட்டில்தான் வாங்குகிறோம். ஒவ்வொரு பொருளுமே பிளாஸ்டிக் பாக்கெட்டில் வாங்கி பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இதனால் சூழலும் நிறைய மாசுபடுகிறது. சுய ஒழுக்கம், நிலையான வாழ்க்கை போன்ற விஷயங்களையெல்லாம் பள்ளியிலேயே ஆணித்தரமாக சொல்லி கொடுத்தால் நல்லா இருக்கும்” என்றார் பர்வதவர்த்தினி ஈஸ்வரன்.

தொகுப்பு: அன்னம் அரசு

Related Stories: