கேரளப் பெண்களின் ‘நைட் வாக்’

நன்றி குங்குமம் தோழி

தனியாக ஒரு பெண் நடுநிசியில் நடந்து செல்வது இன்றும் சவாலாகத்தான் உள்ளது. தலைநகர் டெல்லியில் இரவு நேரத்தில் வெளியே சென்ற நிர்பயா மற்றும் ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்காவின் பாலியல் படுகொலைகள் இந்தியாவையே உலுக்கிப் போட, இந்தியப் பெண்களின்பாதுகாப்பு கேள்விக்குறியானது. உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவில் 2007 முதல் 2016 வரையிலான 9 ஆண்டுகளில் மகளிருக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 83% அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திலும் இந்தியா பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருப்பதாய் பெருமிதம் கொள்ளும் நிலையில், மகளிர் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வருந்தத்தக்கது.

இதை மனதில் கொண்டு, தடைகள் பலவற்றை உடைக்கும் கேரள அரசு பெண்களின் இரவு பயணத்திற்கு முன்மாதிரியான செயலில் இறங்கிவிட்டது. ஓடும் பேருந்தில் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட நிர்பயா உயிரிழந்த டிசம்பர் 29-ம் தேதி அவரின் 7ம் ஆண்டு நினைவு தினமாகும்.

‘நிர்பயா நினைவு தின’த்தில் கேரள அரசு பெண்களின் இரவு நடை(night walk) பயணத்தை தொடங்கியது. கேரள மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

நேரக் கட்டுப்பாடுகள் இல்லாமல் எல்லா நேரத்திலும் பெண்களும் வெளியே சென்று வரமுடியும் என்ற செய்தியை இந்த இரவு நடை அனைவருக்கும் சொல்கிறது என்றவர்,  இனி பெண்கள் அச்சமின்றி இரவில் நடமாடும் நிலை வரவேண்டும்.  அதற்காகத்தான் இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளோம். இரவு நடையில் பங்கேற்கும் பெண்களை போலீசாரும், தன்னார்வ அமைப்பினரும் தூரத்தில் இருந்து கவனிப்பார்கள்.

அப்போது பெண்களுக்கு தொந்தரவு தரும் ஆண்களை பிடித்து உடனடி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு வாரமும் மாநிலம் முழுவதும் இந்த இரவு நடை நடைபெறும் என்றவர், இதனால், ‘இனி  இரவில் பொது இடங்களூக்கு நாமும் செல்லலாம் என்ற நம்பிக்கை பெண்களுக்கு வரும்’ எனவும் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். ஒவ்வொரு வாரமும் பெண்களுக்கான ‘நைட் வாக்’ நிகழ்ச்சி நடைபெறும் இடம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

சுமார் 250 பகுதிகளில் இருந்து 8 ஆயிரம் பெண்கள் நைட்வாக் நிகழ்வில் கலந்து கொண்டு கூட்டம் கூட்டமாக நடந்து சென்றனர். சனிக் கிழமை இரவு 11 மணிக்கு தொடங்கி ஞாயிறு அதிகாலை 2 மணி வரை நீடித்தது. அவர்களுக்குப் பின்னால் சிறிய இடைவெளியில் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பெண் எம்.எல்.ஏக்கள், எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற இந்த நடையில், தனது 3 மாதக் குழந்தையுடன் சதியா எனும் இஸ்லாமியப் பெண் நடந்து வந்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். பெண் குழந்தைகள் பலரும் இந்த ‘இரவு நடை’யில் பங்கேற்றனர். நடையில்  பங்கேற்றவர்கள்,  மெழுகுவர்த்தி ஏந்தி பாதுகாப்புக்கான உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டனர்.

இரவு நேரம் என்பதாலேயே வெளியில் செல்லவும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் அச்சப்பட்ட பெண்களுக்கு இதுவொரு சிறந்த முன்னெடுப்பாக இருப்பதோடு, இரவில் பயணிக்கு பெண்களை பாலியல் ரீதியாய் சீண்ட நினைப்பவர்களுக்கும் அச்சத்தை உண்டுபண்ணும் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கேரளத்துப் பெண்கள். மகளிர் இனி தைரியமாக இரவில் நடமாடுவதை உறுதிசெய்ய முடியும் எனக் கூறுகிறார்கள். இந்த முன்மாதிரி நடவடிக்கையினை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் பலரின் கருத்தாக உள்ளது.

மகேஸ்வரி நாகராஜன்

Related Stories: