அழகிப்போட்டியில் அழகு இரண்டாம் பட்சம் தான்!

நன்றி குங்குமம் தோழி

உலக அழகி, பிரபஞ்ச அழகின்னு ஒரு பக்கம் அழகிப் போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கான கொண்டாட்டம் நடந்துக்குக் கொண்டு இருந்தாலும், சத்தமே இல்லாமல் மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்ட் அழகி பட்டத்தை வென்று வந்துள்ளார் சென்னையை சேர்ந்த அக்‌ஷரா ரெட்டி. துபாயில் நடைப்பெற்ற இந்த அழகிப் போட்டில் 22 நாடுகளில் இருந்து அழகிகள் பங்கு பெற்றுள்ளனர். அதில் கிரீடத்தை வென்று வந்துள்ள அக்‌ஷரா தன் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துக் கொண்டார்.

‘‘நான் முழுக்க முழுக்க சென்னைவாசி. இங்கு தான் பள்ளிப்படிப்பை முடிச்சேன். அதன் பிறகு ஜார்ஜியாவில் உளவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றேன். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே, மாடலிங் மற்றும் விளம்பரத்தில் நடிக்க ஆரம்பிச்சுட்டேன். நான் மாடலிங் துறைக்குள் வர எங்க பக்கத்து வீட்டு அக்கா தான் காரணம். அவங்க மாடலிங் செய்திட்டு இருந்தாங்க. நான் உயரமா இருக்கிறதை பார்த்திட்டு என்னையும் மாடலிங் செய்யச் சொல்லிக் கேட்டாங்க. அம்மாவிடம் கேட்க அவங்க சரின்னு சொல்ல அப்படித்தான் என்னுடைய மாடலிங் பயணம் துவங்கியது. நேரம் கிடைக்கும் போது எல்லாம் நான் மாடலிங் செய்வேன். காரணம் அம்மா படிப்பிலும் கவனம் செலுத்தணும் அதன் பிறகு தான் மாடலிங்ன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க.

பட்டப்படிப்பு படிக்க நான் வெளிநாட்டுக்கு போனாலும், விடுமுறைக்கு சென்னைக்கு வரும் போது, மாடலிங் செய்வேன். அதனால் எனக்கும் மாடலிங்க்கான தொடர்பு இருந்து கொண்டே இருந்தது’’ என்றவர் குறும்படம் ஒன்றிலும் நடித்துள்ளார். ‘‘மாடலிங் செய்யும் போது, அதன் மூலமா தான் எனக்கு ‘ஹாப்பி நியூ இயர்’ என்ற குறும்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அதைப் பார்த்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தாங்க. இது கிராமத்தில் நடைபெறும் விளையாட்டுப் போட்டி. நான் ஒரு பிட்நெஸ் பிரீக். நிகழ்ச்சியிலும் உடல் பணி சார்ந்த போட்டிகள் இருந்தது.

மேலும் கிராமத்து சூழல் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்ன்னு அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றேன். அந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் நல்ல பிரபலமாச்சு. எனக்கான ஒரு அடையாளமும் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த அடையாளம் தான், எனக்கு அழகி பட்டம் பெறும் வாய்ப்பினை அளித்தது’’ என்றவர் அழகிப் போட்டியில் பங்கு பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். ‘‘வருடா வருடம் மிஸ் சூப்பர் குளோப் இந்தியா அழகிப் போட்டி நடைபெறும். அதில் எனக்கு பங்கு பெறுவதற்கு வாய்ப்பு வந்தது. இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் என்னை அணுகினார். முதலில் நான் தயங்கினேன். அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம்ன்னு சொன்னேன்.

ஆனால் அவர் தான் என்னை வம்படியாக இந்த வருடமே பங்கு பெற வைத்தார். கண்டிப்பாக என்னால் ஏதாவது ஒரு விருதினை பெற முடியும்ன்னு ஊக்கமும் அளித்தார். அவர் என் மேல் வைத்திருந்த நம்பிக்கையை என்னால் மறுக்க முடியவில்லை. அதனால் சரின்னு போட்டியில் பங்கு பெற்றேன். எங்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக பூனாவில் இருந்து பூஜா பிந்திரான்னு வந்திருந்தாங்க. பொதுவா அழகிப்போட்டின்னா மேடையில் சிரித்த முகத்தோட நடக்கணும் என்பது மட்டும் இல்லை. இதற்கு நிறைய அடிப்படை விஷயங்கள் இருக்கு. அழகிப் போட்டியின் முதல் தகுதியே உயரம். அடுத்து பொது அறிவு இருக்கணும். அழகு அவங்களுக்கு இரண்டாம் பட்சம் தான்.

நம்முடைய ஆளுமை வளர்ச்சி குறித்த பயிற்சி, கேள்வி பதிலுக்கான பயிற்சி என பல பயிற்சிகள் இருக்கும். கேள்வி பதில் சுற்றில் நீங்க அளிக்கும் பதில் தான் உங்களுக்கான பட்டத்தை நிர்ணயிக்கும். நான் மிஸ் சூப்பர் குளோப் ேபாட்டிக்காக இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டதுக்கு காரணம் அந்த பதில்ன்னு கூட சொல்லலாம். இதில் மீடூ பற்றியும் செக்‌ஷன் 377 பற்றியும் கேட்டு இருந்தாங்க. நான் மீடூ மூலமா தான் பலர் தங்களுக்கு நேர்ந்த பிரச்னைகளை தைரியமாக வெளிப்படுத்த முடிந்தது என்றும், செக்‌ஷன் 377 பொறுத்தவரை காதல் எல்லாருக்கும் ஏற்படும். இதில் ஆண்,  பெண் பாகுபாடில்லை. இது எல்லாவற்றையும் எளிதாக்கும்’’ என்றார்.

‘‘சூப்பர் குளோப் இந்தியா போட்டியை பொறுத்தவரை எனக்கு சப்-டைட்டில் கிடைக்கும்ன்னு கூட நான் எதிர்பாக்கவில்லை. எனக்கு ஒரு அனுபவமா இருக்கட்டும்ன்னு தான் அந்த போட்டியில் பங்கு பெற்றேன். ஆனால் நான் பட்டம் வென்றது மட்டும் இல்லாமல் மிஸ் பியூட்டிஃபுல் பேஸ், மிஸ் பாப்புலர் என்ற இரு பட்டமும் கிடைச்சது. இதன் மூலம் நான் குளோப் வேர்ல்ட் போட்டிக்கு தேர்வானேன். அதற்கு நான் முறையா பயிற்சி எடுக்கணும். டயட், வர்க்கவுட்ன்னு என்னை தயார்படுத்த ஆரம்பிச்சேன். இந்த சமயத்தில் தான் என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. மேலும் பயிற்சியும் மும்பையில் துவங்கிட்டாங்க. என்னால அம்மாவ இங்க தனியா விட்டுட்டு போக முடியல. சென்னையிலேயே நான் பயிற்சி எடுக்கிறேன்னு சொன்னேன்.

அவங்களோ இது உலகளாவிய அழகிகள் பங்கு பெறும் போட்டி, அதனால் பயிற்சிகளும் அதற்கு ஏற்ப இருக்கும். சென்னையில் அதற்கான வசதி இல்லைன்னு சொல்லிட்டாங்க. அதே சமயம் என்னுடைய நிலைமையும் அவர்களுக்கு புரிந்ததால், எனக்கு அவகாசமும் கொடுத்தாங்க. அதனால் நானே என்னை டோன் செய்ய ஆரம்பிச்சேன். தினமும் குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன், அப்புறம் நீச்சல் பயிற்சி. அடுத்து நடன பயிற்சி, உடன் எனக்கான டயட்டையும் கடைப்பிடிச்சேன்’’ என்றவர் மற்றவர்களை விட மிகவும் குறுகிய காலத்தில் தான் அழகுப் போட்டிக்காகவே தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார்.

‘‘பல நாடுகளில் இருந்து அழகிகள் எல்லாம் மும்பைக்கு முன்பே வந்து பயிற்சி எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் ஒன்றரை மாதம் தான் பயிற்சி எடுத்தேன். சென்னையில் இருந்த வரை நீச்சல் பயிற்சி, உடற்பயிற்சி, நடனம் தவிர பொது அறிவு திறனையும் வளர்த்துக் கொண்டேன். பொதுவாக இது போன்ற போட்டிகளில் அன்றைய காலக்கட்டத்தில் நடந்த விஷயங்கள் குறித்து தான் கேள்வி கேட்பாங்க. அதனால் பொது அறிவுத்திறனில் நாம அப்டேட்டா இருக்கணும். அவங்க கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியலைன்னாக்கூட அதை நாசுக்காக சொல்லத் தெரியணும்.

உடனே முகத்தில் அறைவது போல் ‘தெரியாது’ன்னு சொல்லக்கூடாது. உதாரணத்திற்கு அமெரிக்கா அரசியல் பற்றி கேள்வி இருந்தா... அதற்கு பதில் தெரியாதுன்னு ஒற்றை வார்த்தையில் சொல்லாமல், அமெரிக்க அரசியல் குறித்து எனக்கு knowledge இல்லை, என்றாலும், இந்தியாவில் நிலவும் அரசியல் குறித்து பேச முடியும் என்று சொல்லணும். இதன் மூலம் நம்முடைய தன்னம்பிக்கையை எடைப் போடுவாங்க’’ என்றவர் மும்பையில் அவர் எடுத்துக் கொண்ட பயிற்சி பற்றி பகிர்ந்து கொண்டார்.

‘‘துபாயில் போட்டி நடந்தாலும், மும்பையில் தான் இதற்கான பயிற்சி கொடுத்தாங்க. நான் மும்பைக்கு போன போது, அங்கிருந்த அழகிகள் எல்லாரும் 5.9 அடி உயரம் அல்லது 6 அடி உயரம் இருந்தாங்க. நானும் இன்னும் இரண்டு பெண்களும் 5.7 அடி உயரம் இருந்தோம். சொல்லப்போனால் நாங்க தான் அங்கு உயரம் குறைவு. அவங்களின் உயரத்தை பார்த்து கொஞ்சம் பிரமிப்பா தான் இருந்தது. குளோப் இந்தியாவின் பயிற்சியாளர் பூஜா தான் அங்கும் பயிற்சி அளிக்க வந்திருந்தார்.

பயிற்சியின் போது, எல்லாரும் ரொம்ப டிசிப்பிளினா இருக்கணும். தினமும் குறைந்த பட்சம் நாங்க இரவு தூங்கவே ஒரு மணியாயிடும். மறுபடியும் காலை ஐந்து மணிக்கு எல்லாம் மேக்கப், சிகை அலங்காரம், காலில் ஹீல்ஸ்ன்னு தயாராயிடணும். தினமும் ஒரு நிகழ்ச்சி இருக்கும். அதில் நம்மை முதலில் எவ்வாறு அறிமுகம் செய்யணும்ன்னு சொல்லித் தருவாங்க. திறமைக்கான சுற்று, பிகினி உடை சுற்று, போட்டோ ஷூட்... என பல வகை பயிற்சிகள் தினசரி இருக்கும். போட்டோ ஷூட்டில் ஒரு உடை அணியும் போது அதற்கு எப்படி நாம போஸ் கொடுக்கணும். எப்படி நின்றால் நம்முடைய உடல் அழகு வெளிப்படும் முதல் எல்லாம் சொல்லித் தருவாங்க.

இது தவிர எப்படி மேடையில் நடந்து வரணும், பேசணும், உட்காரணும், சாப்பிடணும், நடுவர்கள் கேள்வி கேட்கும் போது எப்படி பதில் அளிக்கணும்னு கூட சொல்லித் தருவாங்க. மேடையில் நடக்கும் போது நம்முடைய முகம் சாந்தமா இருக்கணும். சிரிச்ச முகத்துடன் பதில் சொல்லணும். வார்த்தைகளை ஏற்ற இறக்கத்தோடு தான் பேசணும். நடுவர் மட்டுமல்லாது, பார்வையாளர்கள் அனைவரையும் பார்த்து பேசணும். இவை எல்லாம் நாம் மாடலிங் செய்யும் போது செய்ய மாட்டோம். அங்கு சிரிக்கணும்ன்னு அவசியம் இருக்காது. மேடையில் நம்மை விட நாம் அணிந்து இருக்கும் உடையை தான் பார்ப்பாங்க. அழகிப் போட்டியை பொறுத்தவரை நம் உள் அழகை தான் கவனிப்பாங்க. எல்லாவற்றையும் விட அவர்கள் கேட்கும் கேள்விக்கு தைரியமா பதில் சொல்லணும்’’ என்றவர் மேடையில் நடுவர்கள் கேட்ட கேள்விக்கு இவர் அளித்த பதில் தான் வெற்றிவாகை சூட்டியுள்ளது.

‘‘நான் பொது அறிவில் மிகவும் கவனமா இருந்தேன். இது போன்ற போட்டிகளில் டிரண்டிங்காக இருக்கும் செய்தியை குறித்து தான் கேட்பாங்க. எனக்கு இரண்டு கேள்வி கேட்டாங்க. முதல் கேள்வி தனியாக ஒரு தீவில் இருக்க நேரிட்டால் யாரை உடன் அழைத்து செல்வீர்கள்னு கேட்டாங்க. என்னுடைய பதில் ‘அம்மா’. அன்னையின் பாசம் அளவற்றதுன்னு சொன்னேன். அடுத்து கிரெட்டா தன்பெர்க் குறித்து கேள்வி கேட்டாங்க’’ என்ற அக்‌ஷரா தன் எதிர்கால திட்டம் குறித்து விவரித்தார்.

‘‘தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இன்னும் முடிவாகவில்லை. சினிமா மற்றும் வெப் சீரிசிலும் நடிக்கும் எண்ணம் உள்ளது. சினிமா பொறுத்தவரை கமர்ஷியல் படம் செய்ய விருப்பமில்லை. காமெடி திரைப்படம் என்றால் நான் நடிக்க தயார். அதே சமயம் என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைக்கதை இருக்கணும்’’ என்றார் அக்‌ஷரா ரெட்டி.

தொகுப்பு: ஷம்ரிதி

Related Stories: