ஆற்காடு நகரின் ஸ்பெஷல் மக்கன் பேடா

தீபாவளி பண்டிகை என்றால் முதலில் நாம் நினைக்கு வருவது பட்டாசு, புத்தாடை, வீடுகளில் தயாரிக்கும் முறுக்கு, அதிரசம், இனிப்பு வகைகள் தான். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல்லும் போது இனிப்பு வகைகளான லட்டு, நெய் ஸ்வீட், மக்கன் பேடா உள்ளிட்ட இனிப்பு முதலிடம் வகிக்கிறது. அதுவும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு விசேஷ தினங்கள், வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் என்றால் மக்கன்பேடா முக்கியமாக இருக்கும். குறிப்பாக தீபாவளி பண்டிகையொட்டி மக்கன்பேடா கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வரலாற்று சிறப்பு மிக்க நகரமாக ஆற்காடு உள்ளது. சங்க காலங்களிலும், சோழ மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும், நவாப்புகள் ஆண்ட காலத்திலும், அதன் பிறகு ஆண்ட ஆங்கிலேயர் காலத்திலும் ஆற்காட்டிற்கு எப்போதும் தனி சிறப்பு உண்டு. ஒவ்வொரு ஊரிலும் ஒரு பாரம்பரிய உணவு இருக்கும். எத்தனை தலைமுறைகள் வந்தாலும் அந்த உணவும், ருசியும்மாறவே மாறாது. அந்த வகையில் ஆற்காடு நகரில் ஸ்பெஷல் உணவு வகைகள் என்றால் அது மக்கன்பேடாதான்.இந்த பெயரைச் சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது நவாபுகள் தான்.

ஆற்காடு நவாப்புகள் 1690 முதல் 1801 வரை தென்னிந்திய கர்நாடக பகுதிகளை ஆண்ட மன்னர்கள். இவர்கள் தலைநகரம் ஆற்காடு. தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்ற இவர்களின் விருந்தில் இடம்பெறும் முக்கிய ஒரு இனிப்பு வகை தான் இந்த மக்கன் பேடா. கொழுக்கட்டை பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும். அதை ஒரு கடி கடிக்கும் போது உள்ளே இருக்கும் பூரணம் அலாதி சுவையை கொடுப்பது போலவே இந்த மக்கன்பேடாவிலும் உள்ளே வைக்கப்பட்டுள்ளபாதாம் உள்ளிட்ட பொருட்களால் அலாதி சுவை கிடைக்கிறது.

தேன் போன்ற சுவையான சர்க்கரைப் பாகில் ஊற வைக்கப்பட்ட ஒரு மக்கன் பேடாவை எடுத்து ஒரு சிறிய தட்டில் வைத்து கொடுக்கும்போது அதை வாங்கி ஸ்பூன் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதை சாப்பிடும் போது அப்படியே வாயில் கரையும் போது ஏற்படும் சுவையே அலாதிதான். இந்த மக்கன்பேடா வெளியே பார்க்கும்போது கல் போன்று சற்று கடினமாக இருந்தாலும் உள்ளே அத்தனை மென்மை. இன்னும் கொஞ்சம் என்று கொஞ்சம் எடுத்து சாப்பிடும்போது வாயில் பாதாம்பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் மாட்டுகிறது.

அது அந்த பேடாவின் சுவையோடு சேரும்போது கூடுதல் சுவையை கொடுக்கும். இந்த மக்கன் பேடா முதன்முதலில்ஆற்காடு செட்டியார் மிட்டாய் கடையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஆற்காட்டில் உள்ள அனைத்து முக்கியஇனிப்பு கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆற்காடு மக்கன் பேடாவின் ருசிக்கு பல ரசிகர்கள் உண்டு. தந்தை பெரியார் ஒருமுறை ஆற்காடு வந்தபோதுகட்சி நிர்வாகிகளின் வற்புறுத்தலின் பேரில் செட்டியார் மிட்டாய் கடையில் மக்கன் பேடா சாப்பிட்டுள்ளார்.

அதிலிருந்து மக்கன் பேடாவிற்கு ரசிகராகவே மாறிவிட்டாராம். தந்தை பெரியார் எதற்குமே ஆசைபடமாட்டார் என்று கூறுவார்கள். ஆனால் அப்படிப்பட்ட தந்தை பெரியார் ஆற்காடு பகுதியில் இருந்து யாராவது அவரை சந்திக்கச் சென்றால் அவர் விரும்பி கேட்பது மக்கன் பேடாவை. ஆற்காட்டில் இருந்து வருகிறீர்களே மக்கன் பேடா வாங்கி வரவில்லையா என்று கேட்பாராம். மக்கன் பேடா வாங்கிச்சென்று கொடுக்கும்போது அதை சுவைத்து ரசித்து சாப்பிடுவாராம். அதேபோல் டாக்டர் கலைஞரும் மக்கன் பேடாவை விரும்பி சாப்பிடுவாராம்.

மேலும் முன்னாள் அமைச்சர்கள் சத்தியவாணிமுத்து, பொன்முடி, பழம்பெரும் நடிகர்கள் எம்.ஆர்.ராதா, பாலையா போன்றவர்கள் ஆற்காடு மக்கன் பேடாவை ருசித்து சாப்பிட்டுள்ளனர். மேலும் மறைந்த முன்னாள் அமைச்சர் முகமது ஜான் சென்னைக்குச் செல்லும் போது ஆற்காடு மக்கன் பேடாவை வாங்கிச்சென்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்திற்கு கொடுப்பாராம். மேலும் அரசியல் பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் போன்றவர்கள் கட்சி நிர்வாகிகளையும், உறவினர்களையும் பார்க்க செல்லும்போது கண்டிப்பாக மக்கன் பேடாவை வாங்கி செல்கின்றனர். உள்ளூர்மற்றும் வெளியூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கூட ஆற்காடு மக்கன் பேடாவை விரும்பி வாங்கிச் சென்று சாப்பிட்டுள்ளனர். வெளியூரைச் சேர்ந்தவர்கள் ஆற்காடு வரும்போது அவர்கள் முதலில் கேட்பது மக்கன் பேடா எங்கே கிடைக்கும் என்பது தான். அந்த அளவிற்கு மக்கன் பேடா அனைத்து தரப்பு மக்களின் விருப்ப இனிப்பாக உள்ளது.

Related Stories: