இளம்பெண்கள் முதல் அனைவரையும் கவர்ந்திழுக்கும் இளம்பிள்ளை சேலைகள்: தினசரி புதிது, புதியதாக விற்பனைக்கு வரும் ரகங்கள்; தீபாவளி விற்பனையால் உற்பத்தியாளர்கள் சுறுசுறுப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் இளம்பிள்ளை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அபூர்வா சேலை, காட்டன் சேலைகள் அதிகளவில் தமிழகம் மற்றும் வட மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்வதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, விருதுநகர் உள்பட பல இடங்களில் விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த பகுதிகளில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விசைத்தறியை நம்பி உள்ளனர். கைத்தறியை நம்பி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இங்கு கைத்தறியில் பட்டுசேலைகள், காட்டன் சேலைகள், வேஷ்டிகள், டவல், போர்வை, ஜமக்காளம் உள்பட பல்வேறு ரகங்களும், விசைத்தறியில் ஏற்றுமதி காட்டன் ஜவுளிகள், கேரளா வேஷ்டி, சேலை, ஆண்கள் கட்டும் காட்டன் வேஷ்டி, துண்டு, டவல், லுங்கி உள்பட பல்வேறு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதைதவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும், அமெரிக்கா, துபாய், லண்டன், சிங்கப்பூர், மலேசியா உள்பட பல நாடுகளுக்கும்  ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்பகுதியில் நாள் ஒன்றுக்கு பல கோடி மதிப்பிலான ஜவுளிகள் உற்பத்தியாகிறது. இதன் மூலம் அரசு பலகோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் இளம்பிள்ளையில் பல ரகங்களில் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தீபாவளி நெருங்குவதால் இளம்பிள்ளை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் சேலை உற்பத்தியில் மும்முரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

இது குறித்து இளம்பிள்ளை ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:   தமிழகத்தில் ஜவுளி உற்பத்தியில் இளம்பிள்ளை, இடங்கணசாலை, தாரமங்கலம், வனவாசி, ஜலகண்டாபுரம், சின்னப்பம்பட்டி, சித்தர்கோயில் பகுதிகள்  முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பகுதிகளில் ப்ராசோ சேலை, சிஸ்டி காட்டன், கிரேப்ஸ், டர்கி கிரேப்ஸ், ஜக்காடு கிரேப்ஸ், பேன்சி எம்பிராய்டிங், மோனோ காட்டன், கோரா காட்டன், கரிஷ்மா, கல்யாணி காட்டன், கரீஷ்மா பட்டு, ப்யூர் பட்டு சேலை, மிக்சிங் பட்டுச்சேலை, சில்வர் பார்டர் பட்டுசேலை, அபூர்வா சேலை உள்பட பல ரகங்களில் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் ஜவுளி உற்பத்தி நம்பி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

நடப்பாண்டு கொரோனா 2வது அலையால் இளம்பிள்ளை சுற்று வட்டார பகுதிகளில் மே, ஜூன் மாதங்களில் விசைத்தறிக்கூடங்கள் மூடப்பட்டது. இதனால் பல கோடி மதிப்பில் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு பல நூறு கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டும் கடந்த நான்கு மாதமாக ஜவுளி உற்பத்தி நடந்து வருகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இளம்பிள்ளை சுற்று வட்டார பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளுக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

 இந்த பகுதியில் புதிது, புதிதாக சேலை ரகங்களை தேர்வு செய்து, பெண் விருப்பத்திற்கு ஏற்ப பல ரகங்களில் ஜவுளிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் தான் இளம்பிள்ளை சேலைக்கு பெண்கள் மத்தியில் தனிமவுசு உள்ளது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தினசரி பலகோடி மதிப்பிலான சேலைகள் தமிழகத்தில் உள்ள சிறிய, பெரிய ஜவுளி கடைகளுக்கும், தவிர வட மாநிலங்களுக்கும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வருகிறோம். தீபாவளி முதல் நாள் வரை சேலைகள் விற்பனைக்கு அனுப்புவோம். தீபாவளியை தொடர்ந்து அடுத்தடுத்து முகூர்த்தங்கள் வருவதால் இப்பகுதியை சேர்ந்தவர் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு சுறுசுறுப்படைந்துள்ளனர். ரகங்களை பொறுத்து ஒரு சேலை ரூ.250 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறினர்.

Related Stories: