தென்காசி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 6 புதிய மாவட்டங்களில் “சமூக நல அலுவலகங்கள்!!

சென்னை : மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ‘சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை’ என்ற பெயரினை ‘சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை’ என்று பெயர் மாற்றம் செய்ததுடன், குழந்தைகள், மகளிர், மூத்தக் குடிமக்கள், திருநங்கைகள் ஆகியோரது நலனில் தனி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

     

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கு இணங்க, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையை (மானியக் கோரிக்கை எண்.45) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்த போது, மாண்புமிகு அமைச்சர் (சமூக நலன்-மகளிர் உரிமை) அவர்கள், “தமிழ்நாடு அரசால், தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 6 புதிய மாவட்டங்களில் “சமூக நல அலுவலகங்கள் புதியதாக ஏற்படுத்தப்படும்” என்ற அறிவிப்பினை  வெளியிட்டுள்ளார்கள்.     

    

குழந்தைகள், மகளிர், மூத்தக் குடிமக்கள், திருநங்கைகள் போன்ற சமூகத்தின் நலிவுற்ற பிரிவினரின் நலனுக்கென சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் செயல்படுத்தப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாட்டில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சீரிய முறையில் செயல்படுத்துவதற்கு, அம்மாவட்டங்களில் புதிதாக மாவட்ட சமூக நல அலுவலகங்களைத் தோற்றுவித்து, அம்மாவட்ட சமூக நல அலுவலகங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களைத் தோற்றுவித்தும், அப்பணியிடங்களுக்கும் மாவட்ட சமூக நல அலுவலகங்களில் உட்கட்டமைப்பு ஏற்படுத்துவதற்கும் ஆகும் தொடர் மற்றும் தொடரா செலவினங்களுக்காக ரூ.4,99,41,000/- (ரூபாய் நான்கு கோடியே தொன்னூற்று ஒன்பது இலட்சத்து நாற்பத்து ஓராயிரம் மட்டும்) அரசால் ஒப்பளிப்பு செய்தும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் மூலம் சமூகத்தின் நலிவுற்ற பிரிவினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் நலத் திட்டங்கள் பயனாளிகளுக்கு எளிதில் சென்றடைவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: