சத்தமில்லாமல் சாதிக்கும் சக்தி!

நன்றி குங்குமம் தோழி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்திற்கு 14 வயது நிரம்பிய சிறுவன் சில நரிக்குறவர்களுடன் உள்ளே நுழைகிறான். அவனை பார்த்ததும் உற்சாகமான கலெக்டர் கந்தசாமி  ‘வாங்க சார்’ என்று மரியாதையுடன் அழைத்தது மட்டும் இல்லாமல், அந்த சிறுவன் அமர நாற்காலி போடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நாற்காலியில் அமர்ந்த சிறுவனிடம், ‘‘இந்த ஆண்டு எத்தனை பேரை பள்ளியில் சேர்த்திருக்கீங்க’’ என்று கேட்க.. பதிலுக்கு, ‘‘5 பேர், 40 பேர்’’ என உற்சாகமாக சொன்னான் அந்த சிறுவன்.

சிறுவனுக்கு கலெக்டர் மரியாதை தரக்காரணம் என்ன என்று கேட்ட போது... அங்கிருந்தவர்கள் கோரசாக அவன் கலெக்டரின் செல்லபிள்ளை என்றனர். அந்த மாணவன் பெயர் சக்தி ரமேஷ்.  ஆரணி அடுத்த பையூரை சேர்ந்தவன். இவர் பாசி மணி, பலூன் விற்கும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர். நாடோடியாக சுற்றித்திரியும் ஒரு கூட்டத்தை பள்ளிவளாகத்தில் நுழைய செய்த பெருமை இவனுக்கு உண்டு. அதுவும் பெண்கள் பூப்பெய்திவிட்டால் வீட்டை விட்டே வெளியேறக்கூடாது என்ற நிலையில் அவர்களையும் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டு சத்தமில்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்தி

வருகிறான் சக்தி.

4 ஆண்டுகளுக்கு முன்பு பலூன் விற்க காஞ்சிபுரம் சென்றேன். அங்கு ‘தன் கையே தனக்கு உதவி’ என்ற தொண்டு நிறுவனத்தின் அமைப்பாளர் மகாலட்சுமியை சந்தித்தேன். அவர் என்னிடம், ‘‘நீ ஏன் பலுான் விற்கிறாய். நான் உன்னை படிக்க வைக்கிறேன். என்னுடன் வா. படித்தால், பெரிய ஆளாக வருவாய்’’ என்று கூறி அழைத்துச் சென்று பள்ளியிலும் சேர்த்துவிட்டார். ஆரம்பத்தில் பள்ளியில் அமர்வதே எனக்கு கடினமாக இருந்தது. ஆனால் அங்கு கிடைத்த நண்பர்கள், சாப்பாடு உள்ளிட்ட சகலவசதிகளை ஏன் எனது சக சமுதாயத்தினர் பெறக்கூடாது என சிந்தித்தேன். இரண்டு ஆண்டுகள் அந்த பள்ளியில் தங்கி 7, 8ம் வகுப்பு படித்தேன். இதையடுத்து, ஆற்காடு அடுத்த வேப்பூரில் உள்ள என் உறவினர்களை பார்க்க சென்றேன்.

என்னை பார்த்த அவர்கள் ஆச்சரியப்பட்டனர். காரணம் என்னுடைய உடை. அழகான உடையில் இருந்து டிப்-டாப்பாக உடைக்கு மாறி இருந்தேன். அவர்களிடம் என்னுடைய மாற்றத்திற்கான காரணம் சொல்லி, மற்றவர்களையும் நான் படிக்கும் பள்ளியில் சேரச் சொன்னேன். அதன்படி, வேப்பூர் நரிக்குறவர்களின் பிள்ளைகள் 25 பேரை கல்வி கற்க காஞ்சிபுரத்தில் சேர்த்தார்கள். விரைவில் மேலும் 15 மாணவர்களை பள்ளியில் சேர்க்க திட்டமிட்டுள்ளேன். எங்க சொந்த ஊர் திருவண்ணாமலை. அங்கிருக்கும் பள்ளியில் சேர்த்து விடுவதாக கலெக்டர் கூறினார். நான் மறுத்துவிட்டேன். காரணம்,  மறுபடியும் எங்க பெற்றோர்கள் ஊசி மணி, பாசி மணி விற்க அழைத்து சென்றுவிடுவார்கள்.

எங்கள்  புத்தியும் மாறிடும். எனவே, நாங்கள் காஞ்சிபுரத்திலேயே படிக்கிறோம் என்று கூறிவிட்டேன்’’ என்கிறார் சாதாரணமாக சக்தி.

பல கோடி ரூபாய் செலவழித்து மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல போராடும் அரசு செய்யும் செயலை தனியொருவனாய் சக்தி ரமேஷ் செய்து வருகிறான். இவனது செயலை பாராட்டி சென்னையில் உள்ள பாலலோக் மெட்ரிக் பள்ளி இவனை குடியரசு தினத்தில் கொடியேற்ற வைத்து கவுரவித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் இவன் பெயர் சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி பரிசுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Related Stories: