கராத்தே உலகில் இவரே ராணி!

நன்றி குங்குமம் தோழி

ஹர்ஷா நாராயணமூர்த்தி, 26 வயதாகும் இவர்தான், இந்தியாவின் டாப் கராத்தே வீராங்கனை. இதுவரை தொடர்ந்து பத்து ஆண்டுகளாக மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்துகொண்டு, ஒவ்வொரு முறையும் தொடர்ச்சியாக போட்டியில் வென்றிருக்கிறார். இந்த பத்து வருடங்களில் இவரை வீழ்த்த இதுவரை ஒருவர் கூட நம் மாநிலத்திலேயே இல்லை.  

தற்போது நடந்து முடிந்த தென் ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 61 கிலோ பிரிவில் போட்டியிட்ட ஹர்ஷா, தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் பெண்கள் கராத்தே குழுவில் வெள்ளியும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

‘‘அப்பாவுக்கு கராத்தே ரொம்ப பிடிக்கும். ஆனால் சின்ன வயசில் கற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், 45 வயதில் தான் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். அப்படியே என்னையும், என் தம்பியையும் கராத்தே கற்றுக்கொள்ள இங்கு அழைத்து வந்தார். அன்று முதல் இன்று வரை கராத்தேதான் எங்களுக்கு எல்லாமே. நானும் தம்பி தரும், இங்கு பயிற்சி முடிந்ததும், வீட்டில் ஒன்றாக பயிற்சி செய்வோம். தவறுகளை சுட்டிக்காட்டி, யுக்திகளை பகிர்ந்துகொள்வோம். இதெல்லாம் என் போட்டிக்கு உதவியாக இருந்தது” என்கிறார் ஹர்ஷா.

ஹர்ஷாவின் பயிற்சியாளர் ரவி. 32 ஆண்டுகள் அனுபவமுள்ளவர். ஹர்ஷா இவரிடம்தான் 15 ஆண்டுகளாக பயிற்சி பெறுகிறார். தினமும் குறைந்தது ஐந்து மணி நேரப் பயிற்சியில் இது வரை 60 விருதுகள் வென்றுள்ளார். ‘‘முதலில் வெறும் உடற்பயிற்சியாகத்தான் கராத்தே கற்றுவந்தேன். ஆனால் நான் 12ஆம் வகுப்பு படிக்கும்போது, முதல் முறையாக மாநில அளவிலான ஒரு போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைச்சது. போட்டி எப்படி தான் இருக்கிறது என்று பார்க்கலாம்ன்னு தான் அதில் கலந்து கொண்டேன்.

அந்த போட்டியில் தங்கம் வென்றேன். மெடல் வென்ற நாளிலிருந்து கராத்தேவில் மேலும் ஆர்வம் அதிகரித்தது. பள்ளி முடியும் நேரம், நான் என்னவாக வேண்டும் என்று பலரும் கேட்டு வந்தார்கள். அதுவரை எனக்கு என்ன பிடிக்கும் என்ற குழப்பத்திலிருந்த எனக்கு, அந்த போட்டியில் தான் விடை கிடைத்தது. எனக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்தது, அந்த போட்டிதான். அன்றே நான் கராத்தே சாம்பியனாக வேண்டும் என்று முடிவு செய்தேன்” என்று கூறும் ஹர்ஷா, நினைத்தது போல மாநில போட்டியில் ஒரு வருடம் கூட தவறவிடாமல் தொடர்ந்து பத்து ஆண்டுகள் போட்டியை வென்றிருக்கிறார்.

2010ல்  முதல் முறையாக இந்தியாவிற்காக விளையாடிய ஹர்ஷா, தற்போது கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டிலிருந்து நேஷனல் சாம்பியனாக இவர் மட்டும்தான் இருக்கிறார். 2012 ஆரம்பித்து, இது வரை அனைத்துவிதமான கராத்தே போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கால் இறுதி வரை முன்னேறிச் சென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை, ஹர்ஷாதான் என்று பெருமையாகக் கூறும் பயிற்சியாளர் ரவி, “பிற நாடுகளில் நான்கு வயதிலிருந்தே ஸ்போர்ட்ஸ் பயிற்சி செய்ய ஆரம்பித்து, ஏழு வயதில் போட்டிகளில் கலந்துகொள்வார்கள். குழந்தைகளுக்கான போட்டியில் தொடங்கி சீனியர் வகை போட்டிகளுக்கு முன்னேறும் போது அவர்கள் ஏற்கனவே பத்து போட்டிகளில் வென்ற அனுபவமும் தன்னம்பிக்கையும் இருக்கும். நம் வீரர்கள் 18 வயதில்தான் போட்டியிலேயே கலந்துகொள்கிறார்கள்.

அதனால் எப்போதும் நம் வீரர்கள் பின்தங்கியே இருக்கும் நிலை இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் இது மாறி, நம் வீரர்களும் அவர்களுடன் ஈடுகொடுத்து போட்டிப் போடுகிறோம்.கராத்தே வெறும் ஸ்போர்ட்ஸ் கிடையாது. அது ஒரு வாழ்க்கைமுறை. பொதுவாக கராத்தே அல்லது வேறு ஏதாவது சண்டைப் பயிற்சி செய்பவர்கள், மிகவும் ஆக்ரோஷமானவர்கள் என்ற கருத்து உண்டு. ஆனால், கராத்தே கற்றுக் கொண்டவர்கள், மிகவும் அமைதியாக, கோபத்தை கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் எந்த கெட்ட பழக்கமும் இருக்காது.

எதையும் எதிர்கொள்ளும் சக்தி இவர்களிடம் உண்டு. இதனாலேயே எந்தவொரு மூடநம்பிக்கைகளையும் நம்பாமல், தங்கள் திறமையை மட்டும் நம்பி வாழ்வார்கள். பிரச்சனையை எதிர்கொள்ள முடியாதவர்கள்தான், எப்படியாவது அது தீர மூடநம்பிக்கைகளை நம்பி, பிறரிடம் தீர்வை தேடி ஏமாந்து போகிறார்கள். ஆனால் கராத்தே கற்றுக்கொண்ட அனைவருமே, வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு அங்கம்தான் என்பதை உணர்ந்து, தோல்விகளை ஏற்கும் மனப்பக்குவத்துடன், அதை கடந்து முன்னேறி வெற்றி காண்பார்கள்.  

இதனால்தான், பல தலைவர்களும், தொழிலதிபர்களும் கராத்தே கற்றுக்கொள்கின்றனர். இது அவர்களின் இலக்கை நோக்கி பயணிக்க உதவும். அதே போல, பிறரிடம் மரியாதையுடனும், அன்புடனும் நடந்துகொள்வார்கள். தங்களுடைய பலம் தெரிந்தும், தேவையில்லாமல் யாரிடமும் சண்டைக்கு போகமாட்டார்கள்” என்றார்.

கராத்தே ஒரு ஜப்பானிய தற்காப்பு கலை. ஜப்பானில் ஒகினோவா என்ற தீவில்தான் கராத்தே உருவானது. இந்த தீவு சீனா-ஜப்பான் நாடுகளின் எல்லையில் இருக்கிறது. இப்போது அந்த தீவில், வெறும் கராத்தே வீரர்கள் மட்டும்தான் வாழ்கிறார்களாம். இந்தியாவின் மார்ஷியல் ஆர்ட்ஸ், சீனாவில் குங் ஃபூவாக திரிந்து, அங்கிருந்து  ஜப்பானிற்கு கராத்தேவாகச் சென்றடைந்திருக்கிறது.

அங்கிருக்கும் உலக கராத்தே அமைப்பில் 192 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. வேறு எந்தவொரு விளையாட்டையும் இத்தனை கோடி மக்கள் கற்றுக்கொள்வது கிடையாது. கராத்தே மட்டும்தான், இத்தனை நாடுகளிலும் பிரபலமாக உள்ளது. சர்வதேச போட்டிகளில் குறைந்தது 130 நாட்டு வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

நான்கு வயதிலிருந்து 65 வயதிற்கு மேல் இருப்பவர்கள் கூட கராத்தே கற்கலாம். இது சிறந்த தற்காப்புக்கலை என்பதை தாண்டி, நல்ல உடற்பயிற்சியும் கூட.ஹர்ஷாவின் டெய்லி டயட் இயற்கையான காய்கறிகள், பழங்களுடன் சைவம்-அசைவம் என வீட்டில் சமைத்த உணவுகள்தான். புரோட்டின் ஷேக் கூட அவர் குடிப்பது கிடையாதாம். கராத்தேவை பொறுத்தவரை, எப்போதுமே இயற்கையுடன் ஒன்றியே இருக்க வேண்டும் என்பதுதான் முதல் விதி. அதனால் விளையாட்டில் எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும், பாரம்பரிய கராத்தே வாழ்க்கைமுறையை அப்படியே இந்த வீரர்கள் கடைப்பிடிக்கின்றனர்.

ஸ்வேதா கண்ணன்

ஜி.சிவக்குமார்

Related Stories: