ரூ.500க்கு போலி கொரோனா சான்றிதழ் வழங்கியவர் கைது: கூட்டாளிக்கு வலை

சென்னை: மண்ணடி தம்புச்செட்டி தெருவில் ஒரு தனியார் மருத்துவ பரிசோதனை மையம் நடத்தி வருபவர் ஹரிஸ் பர்வேஸ் (30). இங்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இங்கு 4 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த பரிசோதனை மையத்தில் கொரோனா பரிசோதனை செய்து ரூ.500க்கு சான்றிதழ் தரப்படும் என ஒரு செல்போன் நம்பருடன் வாட்ஸ்அப் தகவல்கள் வெளியானது. இதை பார்த்ததும் ஹரிஸ் பர்வேஸ் அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு, கொரோனா சான்றிதழுக்கு ரூ.500 கொடுத்துள்ளார். இதையடுத்து அவரது மருத்துவ பரிசோதனை மையம் பெயரில் தனக்கு போலி சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருப்பதை பார்த்து ஹரிஸ் பர்வேஸ் அதிர்ச்சியானார். இதுகுறித்து வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜகன்நாதன் வழக்குப்பதிவு செய்து, அந்த செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் மூலம் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணியை சேர்ந்த இன்பர்கான் (29) என்பவரிடம் விசாரித்ததில், மண்ணடி மருத்துவ பரிசோதனை நிலையம் பெயரில் வெளிநாடு செல்லும் குருவிகளுக்கு ரூ.500 வாங்கிக்கொண்டு போலி கொரோனா சான்றிதழ் வழங்கியதும், இவரும் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை கொண்டு வரும் குருவியாக செயல்பட்டு வருவதும் தெரியவந்தது. இவர் தனது நண்பருடன் இணைந்து இதுவரை 500க்கும் மேற்பட்டோருக்கு போலி சான்றிதழ் வழங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இன்பர்கானை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், மோசடியில் ஈடுபட்ட அவரது நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: