தூய்மை இந்தியா இயக்கம் 2.0 சிறப்பு முகாமில் பிளாஸ்டிக் இல்லா சென்னையை உருவாக்க உறுதிமொழி ஏற்பு

சென்னை: தூய்மை இந்தியா இயக்கம் 2.0 சிறப்பு முகாமில் பிளாஸ்டிக் இல்லா சென்னையை உருவாக்கும் வகையில் அதிகாரிகள், பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பிளாஸ்டிக் இல்லாத சென்னை மாநகரத்தை உருவாக்கும் வகையில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 சிறப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. இதை துணை ஆணையர் சிம்ரன்ஜீத் காலோன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். அப்போது, பிளாஸ்டிக் இல்லாத சென்னை மாநகரம் உருவாக்குவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அப்போது அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறியதாவது: தூய்மையான அழகான, பசுமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் 2014ம் ஆண்டு காந்தியடிகள் பிறந்த நாளில் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டது. காந்தியின் 150வது பிறந்த தினமான 2019 அக்டோபர் 2ம் தேதி திறந்த வெளியில் மலம் கழிக்காத மக்களைத் கொண்ட நாடாக இந்தியா மாறியது. கழிப்பறை கட்டி பயன்படுத்துதல் திட, திரவ கழிவு மேலாண்மையை திறம்பட கையாளுதல் என்ற இரண்டு நோக்கங்களும் இப்போது நிறைவேறி உள்ளன. நகரம் கிராமம் என இரண்டு பகுதிகளிலும் தூய்மை இந்தியா இயக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி முதல் 10,71,04,456 தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் 35 மாநிலங்களில் 6,03,004 கிராமங்கள் திறந்த வெளியில் மலம் கழிக்காதவர்கள் என அறிவித்துள்ளன. அதேபோல் இதுவரை நகரப்பகுதிகளில் 66.72 லட்சம் தனி நபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. 4258 நகரங்கள் திறந்த வெளியில் மலம் கழிக்காத நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: