அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்பி வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்கு பெய்து கொண்டிருப்பதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பெரிய அணைக்கட்டுகளில் 80 சதவீதம் அளவுக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. குறிப்பாக மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளதாகவும், 120 அடி ஆழமுள்ள மேட்டூர் அணையில் 92 அடி வரை தற்போது தண்ணீர் உள்ளது. இது ஒரு வாரத்திற்குள் 100 அடியை தாண்டி விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இந்த மாதம் 22ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், திருப்பத்தூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி, வடகிழக்கு பருவ மழையும் அடுத்து துவங்கிவிட்டால், மழை நீர் அனைத்தும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் சென்றுவிடும் அபாயம் ஏற்படுவதோடு, மிகப்பெரிய சேதத்தையும் விளைவிக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சர்களையும், ஐஏஎஸ் அதிகாரிகளையும் அனுப்பி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும், வெள்ளப்பெருக்கு ஏற்படின் பாதிப்புக்கு உள்ளாவோர்க்கு தேவையான உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வது குறித்தும் உரிய அறிவுரைகளை வழங்குமாறு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: