நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதிமுக போட்டியிடும் இடங்களை நவ.15க்குள் தெரிவிக்க வேண்டும்: மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இடங்களை நவ.15ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதிமுக ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமை கழக செயலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பொருளாளர் கணேச மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் கழககுமார், ஜீவன், டிஆர்ஆர்.செங்குட்டுவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவு மூலம் திமுக அரசுக்கு நற்சான்று அளித்து இருக்கிற 9 மாவட்ட மக்களுக்கு, மதிமுகவின் சார்பில் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் பொற்கால நல்லாட்சி தொடருவதற்கு இக்கூட்டம் வாழ்த்துகள்,

* 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மதிமுக இரண்டு மாவட்டக்குழு உறுப்பினர் இடங்களிலும், 16 ஒன்றியக்குழு உறுப்பினர் இடங்களிலும் வெற்றி பெற்று இருக்கிறது. ‘பம்பரம்’ சின்னத்தில் வெற்றி வாகை சூடிய மாவட்ட குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கட்சியினருக்கும் வாழ்த்துகள்

*குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தை மதிமுக கைப்பற்றுவதற்கு வியூகம் அமைத்து, தேர்தல் பணிகளை திட்டமிட்டு மேற்கொண்டு, தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டு வெற்றி வாகை சூட காரணமாக இருந்த துரை வைகோவுக்கும், துணை நின்ற தென்காசி மாவட்டப் பொறுப்பாளர் ராசேந்திரன், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும்  பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துத் கொள்கிறது.

* விவசாயிகள் மீது கொலை வெறி வன்முறைகளை ஏவுவதற்கு காரணமாக இருக்கும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசுக்கும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் வன்முறைக் கூட்டத்திற்கும் மதிமுக கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. கொலை குற்றவாளிகளைச் சட்ட நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும். பாஜ அரசு மூன்று வேளாண் பகைச் சட்டங்களையும் திரும்பப் பெற

வேண்டும்.

* தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை, டிசம்பர் மாதத்திற்குள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே, மதிமுக மாவட்டச் செயலாளர்கள், உடனடியாக மாநகர் பகுதி, பேரூர், நகர கூட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்திடத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சியில் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான இடங்களைத் தேர்வு செய்து, பட்டியலை நவம்பர் 15ம் தேதிக்குள் தலைமைக்கு அனுப்பி வைத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: