விஸ்வரூபம் எடுக்கும் சொமோட்டோ விவகாரம் தமிழகத்தில் புது வகையில் இந்தியை திணிக்க முயற்சியா? அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் இந்தி மொழி தெரியாமல் இருப்பது பற்றி ‘அறிவுரை’ வழங்கிய சொமோட்டோ கஸ்டமர் கேர் அதிகாரியின் செயல் இணையத்தில் வைரலாகி நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் புது வகையில் இந்தியை திணிக்கும் முயற்சி நடக்கிறதா என இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் சொமோட்டோவில் உணவு ஆர்டர் செய்து இருந்தார். ஆனால் இவருக்கு உணவு முழுமையாக கிடைக்காமல் பாதி பொருட்கள் மட்டுமே வந்தது.

இதுதொடர்பாக அவர் சொமோட்டோ கஸ்டமர் கேர் சாட் பாக்சில் புகார் அளித்துள்ளார். ஆனால், இதில் பேசிய நபர், இந்தி மொழி தெரியாது என ஓட்டல்காரர்கள் தெரிவித்துவிட்டதால், உங்களுக்கு ரீபண்ட் தர முடியாது என கூறியுள்ளார். அதோடு, இந்தி குறித்து அந்த அதிகாரி பாடமும் எடுத்துள்ளார். நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதால், உங்களிடம் சரியாக விவரங்களை தெரிவிக்க முடியவில்லை என்றும் சொமோட்டோ அதிகாரி விகாஷிடம் கூறியுள்ளார். இதற்கு அந்த இளைஞர், ‘நீங்கள் தமிழ்நாட்டில் சேவை வழங்கினால் தமிழ் தெரிந்த ஆட்களை பணிக்கு அமர்த்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழில் பேசும் அதிகாரியிடம் கனெக்ட் செய்யும்படி கூறியதற்கு அந்த அதிகாரி மறுத்துள்ளார்.

 இதற்கு பதிலளித்த அந்த சொமோட்டோ அதிகாரி, ‘இந்தி இந்தியாவில் தேசிய மொழி. இதனால் எல்லோரும் இந்தி தெரிந்து வைத்து இருப்பது அவசியம்’ என்று பதில் அளித்துள்ளார். இதை டிவிட்டரில் பகிர்ந்து விகாஷ், சொமோட்டோ நிறுவனத்திடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதுதான் இணையத்தில் சர்ச்சையாகியது. இந்தி கத்துக்க சொல்ல நீங்கள் யார். இந்தி யாருக்கு தேசிய மொழி சொல்லுங்கள் என்று பலர் கேள்வி எழுப்பி டிரெண்ட் செய்தனர். இதனால் #Reject_Zomato என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது. எங்கள் மாநிலத்தில் உள்ள நீங்கள், எங்கள் மாநில மொழியில் சேவை வழங்குங்கள் என்று கேள்வி எழுப்பி ட்வீட் செய்தனர். தமிழக மக்களின் இந்த கொந்தளிப்பு அந்நிறுவனத்துக்கு சரியான பதிலடியை தந்துள்ளது. அதாவது, சொமோட்டோ நிறுவனத்தின் பங்குகளும் வேகமாக சரிந்தது.

இந்த விவகாரம் பெரிய சர்ச்சையான நிலையில் உணவு ஆர்டர் செய்த விகாஷிடமும், தமிழ்நாடு மக்களிடமும் சொமோட்டோ நிறுவனம் மன்னிப்பு கேட்டது. ‘வணக்கம் விகாஷ், எங்கள் ஊழியர் நடந்து கொண்ட விதத்திற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்கிறோம்’ என்று கூறி அந்த அறிக்கையை சொமோட்டோ நிறுவனம் வெளியிட்டு மன்னிப்பு கேட்டது. மேலும் சம்பந்தப்பட்ட நபரை வேலையிலிருந்து நீக்குவதாகவும் கூறியது. ஆனால் சிறிது நேரத்தில் சொமோட்டோ சிஇஏ, அந்த நபரை மீண்டும் பணிக்கு அமர்த்தி, ‘எல்லோருக்கும் சகிப்புத்தன்மை வேண்டும்’ என அவர் பங்குக்கு அறிவுரை வழங்கினார்.

ஒருபுறம் ஒன்றிய அரசு தமிழகத்தில் பல வழிகளில் இந்தி திணிப்பை கொண்டு வந்தாலும் அதற்கு எதிராக தமிழக மக்கள் நடத்தும் போராட்டங்களால் திரும்ப பெற்று வருகிறது. ஒன்றிய அரசு தான் இப்படி நடந்து கொள்கிறது என்றால் இப்போது சொமோட்டோ போன்ற உணவு நிறுவனங்களும் இந்தி திணிப்பை கொண்டு வருவது தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என தமிழக அரசியல் தலைவர்களின் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:  மத்தியில் பாஜ ஆட்சி அமைந்த உடன் இந்தி பேசாத மக்கள் மீது இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை திணிக்கிற முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், ரயில்வே துறை, அஞ்சலகங்கள், மத்திய தேர்வு ஆணையம் ஆகியவற்றில் இந்தியை திணிக்கிற வகையில் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சிள் கடுமையாக போராடி வருகிறது. ஆனால், மொழி திணிப்பு முயற்சிகளை பாஜ அரசு கைவிடுவதாக இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைக்கு சொமோட்டோ என்ற தனியார் உணவு நிறுவனம் மொழி திணிப்பை தீவிரமாக கடைபிடித்திருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக மொழி திணிப்பு என்பது அனைத்து நிலைகளிலும் நம்மை அச்சுறுத்தி வருகிறது. இதை தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு முறியடிப்பார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:  ஒன்றிய அரசு இந்தியை திணிக்கும் வேலையில் நேரடியாக ஈடுபட்டு வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் வாயிலாக இந்தி திணிக்கும் வேலையையும் செய்து வருகின்றனர். கடந்த 1965ல் பிரதமராக இருந்த நேரு அளித்த வாக்குறுதிக்கு எதிரான செயல் இது. இது அவரோடு முடிந்து போகும் விஷயம் அல்ல. இது அரசின் அறிவிப்பு தான். அந்தந்த மாநில மக்கள் விரும்பும் வரை இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியின் அடிப்படையில் தான் இந்தி போராட்டம் நிறுத்தப்பட்டன. இந்த வாக்குறுதி பற்றி கவலைப்படவில்லை.

மோடி வாக்குறுதி அளித்தால் அரசு வாக்குறுதியாக தான் அர்த்தம். நேரு அளித்த வாக்குறுதியும் அதுபோன்று தான்.  மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:  ஒன்றிய அரசு பன்னாட்டு நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் தான் வைத்துள்ளது. அதன் வெளிப்பாடாக தான் சொமோட்டோ நிறுவனத்தின் இந்த செயல்பாட்டை பார்க்க முடிகிறது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டால் தமிழக மக்கள் கொந்தளித்தனர். தமிழகத்தின் மொழி உட்பட பல்வேறு பண்பாடு, கலாச்சார உரிமையை நிலைநாட்ட தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதுபோன்ற செயல்பாடுகளை காட்டுவது தான் காலத்தின் கட்டாயம். அதை சிறப்பாகவே தமிழ் சமுதாயம் செய்துள்ளது.

Related Stories: