பத்திரப்பதிவு தொடர்பாக வந்த 12,601 புகாரில் 9,800 மீது நடவடிக்கை: பதிவுத்துறை உயர்அதிகாரி தகவல்

சென்னை: பத்திரப்பதிவு தொடர்பாக வந்த 12,601 புகாரில் 9,800 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று குறைதீர் முகாமில் பெறப்பட்ட மனுக்களில் 135 மனு மீது தீர்வு காணப்பட்டுள்ளது என்று பத்திரப்பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பதிவுத்துறையில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் எளிதாகவும், வெளிப்படை தன்மையுடன் அமைய ஏதுவாக பதிவுத்துறை தொடர்பான புகார்கள், குறைகள் மற்றும் கருத்துகளை பொதுமக்கள் தெரிவிப்பதற்கு வசதியாக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்றை கடந்த ஜூன் 16ம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்களிடம் இருந்து மின்னஞ்சல், தபால், தொலைபேசி மூலம் பதிவு தொடர்பான புகார்கள் நாளொன்றிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பெறப்பட்டு வருகின்றன. இதன் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 12,601 புகார்கள் வந்தன. இவற்றில் கடந்த 18ம் தேதி வரை 9,800 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாரம்தோறும் ஒருநாள் பதிவு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டால் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

எனவே, பத்திரப்பதிவுப் பணியில் உள்ள குறைகள் தொடர்பாக புகார் அளிக்க ஏதுவாக 50 மாவட்ட பதிவாளர், 9 மண்டல டிஐஜி அலுவலகங்களிலும் பதிவு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும் என்றும், இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி அறிவித்தார். இதை தொடர்ந்து, கடந்த 11ம் தேதி முதன்முறையாக குறைதீர் முகாம் மாநிலம் முழுவதும் நடந்தது. இதில் 195 மனுக்கள் பெறப்பட்டன. 78 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. தொடர்ந்து 119 மனுக்கள் மீதான விசாரணை நடந்துவருகிறது. கடந்த 18ம் தேதி நடந்த குறைதீர் முகாமில் 295 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 59 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. 236 மனுக்கள் தற்போது வரை நிலுவையில் உள்ளது. இந்த மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: