மார்பக புற்றுநோயால் ஆண்டுக்கு 250 பெண்கள் பாதிப்பு: அரசு மருத்துவமனை இயக்குனர் தகவல்

சென்னை: ஆண்டுக்கு 250 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனை இயக்குனர் மணி தலைமை தாங்கினார். அப்போது, பெண்களுக்கு மார்பக புற்றுநோய் எப்படி வருகிறது. அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: முன்பு 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது, இளம்பெண்கள் பலரும் இத்தகைய நோயால் அவதிப்படுகின்றனர். அதீத உடல் எடை, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காதது, 11 வயதுக்கு முன்பு பூப்படைவது, 35 வயதுக்கு பின் முதல் குழந்தையை பெற்றெடுப்பது உள்ளிட்ட பல காரணங்களால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. மார்பக புற்றுநோயை தடுக்க பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதேபோல் 100ல் ஒரு சதவீத ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு உண்டாகிறது.

ராயப்பேட்டை மருத்துவமனையில் ஆண்டுக்கு 250 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். எனவே பெண்கள் அடிக்கடி மார்பகங்களை சுயப்பரிசோதனை மற்றும் மருத்துவமனைகளில் ஊடுகதீர் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவ நிலைய அதிகாரி ஆனந்த் பிரதாப், மருத்துவர்கள் கண்ணன், சரவணன், தமிழ்மணி, மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: