இங்கிலாந்து, சிங்கப்பூரில் கொரோனா அதிகரிப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

சென்னை:  சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 174வது வார்டு மடுவின்கரை, பாரதி நகர், பாரதி தெருவில் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சிக்கூடத்தை நேற்று  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து உடற்பயிற்சி செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர் திருமுருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: பொதுமக்கள் தங்கள் உயிர்களை காப்பதற்கு முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இதற்கு எந்த நாடும் விதிவிலக்கல்ல. இங்கிலாந்தில் நேற்று 40 ஆயிரம் என்கிற அளவில் தொற்று உயர்ந்துள்ளது. சிங்கப்பூரில் குறைந்து பிறகு கூடிக்கொண்டே செல்கிறது. எனவே உலக நாடுகள் எல்லாம் அச்சப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த காலத்தில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிப்பதை கடமையாகக் கொள்ள வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம், ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி முதல் தவணை தடுப்பூசி 70 சதவீதத்தினர் செலுத்திக்கொள்ள வேண்டுமென்று கூறியுள்ளனர். தமிழகத்தில் 68 சதவிகிதம் செலுத்தியுள்ளோம். இரண்டாவது தவணை தடுப்பூசி யாருக்கெல்லாம் செலுத்த வேண்டுமோ அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செலுத்த வேண்டுமென்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். வரும் சனிக்கிழமை நடைபெறும் 6வது மெகா தடுப்பூசி முகாமில் 25 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 48 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. சனிக்கிழமை பொதுமக்களின் வசதிக்காக 50 ஆயிரம் முகாம்கள் மூலம் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்றார்.

Related Stories: