பொதுச்செயலாளர் என கல்வெட்டு சசிகலாவுக்கு எதிராக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் போலீசில் புகார்

சென்னை: அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் பாபு முருகவேல் ஆகியோர் நேற்று இரவு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  புகாரில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கைப்பற்றும் வகையில், இரட்டை இலை சின்னத்தை கோரி  டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் மனு அளித்தார். ஆனால் டெல்லி உயர் நீதிமன்றமும், இந்தியத் தேர்தல் ஆணையமும் இரட்டை இலை சின்னத்தை பெற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்குத்தான் உரிமை உள்ளது என தீர்ப்பளித்தது.

ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அதிமுக கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அதிமுக கொடியை பயன்படுத்தி வருகிறார். கட்சியின் பொதுச் செயலாளர் தான்தான் எனவும் கூறி வருகிறார். எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் முன்பு  நீதிமன்றத்திற்கும், தேர்தல் ஆணையத்திற்கும் எதிராக அவர் பெயரில் கல்வெட்டை திறந்து வைத்துள்ளார். இது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ பிரிவின் கீழ் குற்றமாகும். எனவே சசிகலா அதிமுக கொடியை திறந்து வைப்பது, தான் பொதுச் செயலாளர் என கல்வெட்டு திறப்பது குற்றமாகும். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளனர். 

Related Stories: