அதிமுக பொதுச்செயலாளர் என கூறும் சசிகலா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 12ம் தேதி எண்ணப்பட்டன. இதில், ஒட்டுமொத்தமாக அனைத்து இடங்களிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. அதிமுக படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர்கள், உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.

இதில், 5 கிலோ தங்க நகைகள், 136 கனரக வாகனங்கள், பல கோடி மதிப்பு சொத்து பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி உள்ளிட்ட அமைச்சர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையிலும் வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுபோன்று அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடத்தப்படும் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருந்தனர்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரும் உடன் சென்றனர். ஆளுநருக்கு எடப்பாடி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், ஒரு புகார் மனுவும் அவரிடம் எடப்பாடி வழங்கினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடந்தது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது குறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டது மற்றும் ஆளும் கட்சியை சேர்ந்த திமுகவினர் பல்வேறு முறைகேடுகள் சம்பந்தமான விவரங்களையும் உரிய ஆதாரங்களுடன் பட்டியலிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், விரைவில் நடைபெறவுள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் முறைகேடுகள் நடைபெறா வண்ணம் ஜனநாயக முறையில் நேர்மையாக தேர்தல்களை நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கவர்னரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

ஆளுநரின் சந்திப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகள் குறித்து கவர்னரிடம் புகார் மனுவாக அளித்துள்ளோம். மாவட்ட ஆட்சியர்கள் முறையாக தேர்தலை கவனிக்கவில்லை. 9 மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க சென்றபோது முறையாக சந்திக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்று கூறுவதாக கேட்கிறீர்கள். ஏற்கனவே நீதிமன்றம், தேர்தல் ஆணையம் சொல்லி விட்டது. நான் தான் பொதுச்செயலாளர் என்று கூறினால் சொல்லிவிட்டு போகட்டும். கொடி கம்பத்தில் அதிமுக கொடி ஏற்றியதற்கு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சசிகலா அதிமுக கட்சியிலே கிடையாது. அதிமுகவிற்கும், சசிகலாவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று பலமுறை சொல்லி விட்டோம். மறப்போம் மன்னிப்போம் என்று சொல்லிவிட்டு போகட்டுமே. மேலும் பொதுச்செயலாளர் என்று சசிகலா கூறிக்கொள்வதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: